நிலைமை தொடருமானால், நம் சமூகம் எதிர்காலத்தில் உருவாகின்ற இளைய தலைமுறையினரால் பாரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடலாம்.
இவ்விடத்தில் முஸ்லிம் சமூக அமைப்புக்களுக்கு பெரும் பொறுப்பொன்றுள்ளது!
தாம்பத்திய வாழ்வில் ஆணும் பெண்ணும் இணைந்த பின்னர், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்க்கையை எவ்வாறு நகர்த்த வேண்டும், ஒருவருக்கொருவர் எவ்வாறு விசுவாசமாக நடந்து கொள்ள வேண்டும், இரு தரப்பு பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு எவ்வாறு புத்திமதிகள் கூறி அவர்களை வழிநடாத்த வேண்டும், பிரச்சினைகள் ஏற்படுகின்றபோது அவற்றுக்கு எவ்வாறு முகங்கொடுத்து,
தங்களுக்குள்ளேயே தீர்க்க முற்பட்டு, இயலாத கட்டத்தில் பெற்றோர்களுடன் கலந்து பேசி நான்கு சுவருக்குள்ளேயே பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளும் மனப்பக்குவத்தை எவ்வாறு ஏற்படுத்திக்கொள்வது போன்ற விடயங்கள் பற்றிய சொற்பொழிவுகளையும், கருத்தரங்குகளையும் ஆங்காங்கே நடாத்தி, இளைய தலைமுறையினரை வழிநடாத்த வேண்டும்.
இயன்றவரை தம்பதியினர் காதிக்கோடு வரை செல்லாமல் பக்குவப்படுத்த வேண்டிய பாரிய பொறுப்பு மூத்த சமூகத்தினரையும், சமூக அமைப்புக்களையுமே சாரும்.
இதில் முக்கிய பங்கேற்க வேண்டிய ஓர் அமைப்பே நாட்டிலுள்ள “மஸ்ஜித் பரிபாலன சபை”களாகும்.
அதிகமான முஸ்லிம் திருமணங்கள் பெற்றோர்கள் நிச்சயித்தே நடைபெறுவதாலும், எவ்வித முன்பழக்கமுமற்றவர்கள் திருமண பந்தத்தில் இணைந்து கொள்வதாலும், பொதுவாக புதுத் தம்பதியினருக்கிடையில் ஆரம்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு.
அவற்றை அவர்களே சுமுகமாகத் தீர்த்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும். பிரச்சினை தம்பதியினரின் பெற்றோர் - குடும்பத்தினரை நாடிச் செல்கின்றபோதுதான் உக்கிரமமடைகின்றது.
பிரச்சினைகளை சுமுகமாகத் தீர்த்துக் கொள்வதற்குப் பதிலாக, காதிக்கோட்டை நாடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகின்றார்கள். இரு குடும்பத்தினரும் சிறு பிரச்சினையைக் கூட பெரிது படுத்தி விடுகின்றார்கள்.
இதற்கு முக்கிய காரணமாக அமைவது வரட்டு கௌரவங்களும், விட்டுக்கொடுக்கின்ற தன்மை இல்லாமையும், தம்பதியினரில் பிழை செய்கின்ற யாரோ ஒருவர் திருந்தி வாழ முற்படாமையுமே!
ஒரு சிறு உதாரணத்திற்குக் கணவனின் புகைபிடிக்கும் பழக்கத்தைக் கூறலாம். திருமணம் முடித்த புதிதில் கணவனை "சிகரட் புகைக்காதீர்கள்" என்று கூற மனைவி பயப்படுவாள். கொஞ்ச நாட்கள் சென்றதும் கணவனோடு நெருங்கிப் பழகிவிட்ட பின்னர், உரிமையோடு "புகைபிடிக்கும் பழக்கத்தை விட்டு விடுங்கள்" என்பாள் அல்லது "அறைக்குள் புகை பிடிக்காதீர்கள்" என்பாள். இது கணவனுக்குப் பிடிக்காது. "என்னைக் கட்டுப்படுத்துவதற்கு இவள் யார்?” என்றவாறாக கணவன் நடந்து கொள்ள முற்படுகின்றபோதுதான் பிரச்சினை ஆரம்பமாகின்றது.
இதுவே, பல வழிகளில் பிரச்சினை - பிரச்சினைகளாகி, பிரச்சினைகள் பெற்றோர் - குடும்பத்தினர் வரை சென்று, காதிக்கோட்டைப் போயடைகின்றது.
இறுதியில் இதனால் பாதிக்கப்படுவது புதுத்தம்பதியினரே. அதிலும் அதிகமான பாதிப்பு மணமகள் பக்கமே வந்து சேர்கின்றது.
எப்படியோ விவாகரத்துக் கிடைத்துவிட்டால், மணமகன் அடுத்த நிமிடமே வேறொரு கன்னிப் பெண்ணை மணந்து கொள்கின்றான்.
ஆனால், மணமகளோ சில காலங்கள் தனக்கொரு துணையைத் தேடியலையும் நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகின்றாள். அவள் திருமணம் முடிக்காத ஒருவனை மறுமணம் செய்து கொள்வதென்பது கூட மிகவும் அரிது.
சிலவேளைகளின் இரண்டு மூன்று குழந்தைகளின் தந்தையைக் கூட மறுமணம் செய்து கொண்டு புதிய கணவனின் பிள்ளைகளை வளர்க்கும் நிலைக்கு அந்த இளம் பெண் தள்ளப்பட்டு விடுகின்றாள்.
எனவே, விவாகரத்து என்று வருகின்றபோது, பொதுவாக இரு தரப்பு பெற்றர்களும் நன்கு சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய கடமைப்பாட்டில் உள்ளனர்.
குறிப்பாக பெண் பிள்ளையின் பெற்றோர் நன்கு சிந்தித்து செயலாற்ற வேண்டியுள்ளது. காரணம், “முள்ளொன்று சேலையில் சிக்கினாலும், சேலை ஒன்று முள்ளில் சிக்கினாலும் பாதிப்பு சேலைக்குத்தான்” என்ற பொதுவான கருத்தொன்று உண்டு என்பதைப் பெண் பிள்ளையின் பெற்றோர் உணர்ந்து செயல்பட வேண்டிய நிலையில் உள்ளனர்.
மணமகளுக்காக மணமகன் ஆசையோடு அணிவித்த ஆபரணங்களையும், அன்பளிப்புக்களையும் அபகரித்துக் கொள்ளும் நோக்குடன் மாத்திரமல்லாமல், மேலும் நட்ட ஈடுகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்கிலும் வாழவேண்டிய தம்பதியினரை பிரித்து வைப்பதிலேயே குறியாக நிற்கின்ற மணமகளின் பெற்றோர் - குடும்பத்தினர் பலவழிகளிலும் சிந்தித்து செயல்பட வேண்டியவர்கள்.
இந்த விடயத்தில் தன் வாழ்க்கையை தனது புத்திசாதுரியத்தால் நிலை நிறுத்திக்கொள்ள வேண்டிய பாரிய பொறுப்பு மணமகளைச் சாருகின்றது. பெண்களுக்கான கருத்தரங்குகளில் இவை ஊன்றி உணர்த்தப்பட வேண்டிய விடயங்களாகும்.
பொதுவாகக் குறிப்பிட்ட சில காதி நீதவான்களின் தூரதரிசனமின்மையும், சமூகப் பற்றில்லாமையும், சுயநலமும் சிறு விடயத்தைக்கூடப் பெரிதுபடுத்தி விவாகரத்தைப் பெற்றுக் கொடுப்பதிலேயே கருத்தாக இருக்க வைத்து விடுகின்றது!
தூரதரிசனமற்றவர்கள் காதி நீதவான்களாக நியமிக்கப்பட்டு விடுவதானது, அவர்களிடத்தே போதிய மார்க்க அறிவோ, அல்லாஹ்வை அஞ்சி நடக்கும் தன்மையோ, சமூகப்பற்றோ இல்லாமை காரணமாக, தம்மை நாடி சிறு பிரச்சினையை ஏந்தி வந்து நீதி கோரி நிற்கும் தம்பதியினரிடையே பிரச்சினைகளைக் குவியலாக்கி, அவர்களிடையே பாரிய இடைவெளியை ஏற்படுத்தி விடுவதோடு, கணவன் பக்கம் பசையுள்ளதென்றறிந்தால், மனைவிக்கு நன்மை செய்வதுபோன்று பாசாங்கு பண்ணி, நட்டஈட்டைப் பெற்றுக் கொடுப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்து விடுகின்றனர்.
அதனால்தான் காதிக்கோடு நாடிச்செல்லும் தம்பதியினர்களில் அதிகமானோர் பிரிந்தே விடுகின்றனர் அல்லது பிரித்துவிடப்படுகின்றனர்.
ஒவ்வோர் காதி நீதவான்களும் தாம் சமூகத்தில் ஓர் புனித சேவையைச் செய்கின்றோம் என்பதை உணர வேண்டும். தம்பதியினரைப் பிரித்து வைப்பதைவிட அவர்களைச் சேர்ந்து வாழச்செய்வதே தங்கள் கடமை என்பதை இதய சுத்தியோடு தம் மனதுக்கு எடுத்து செயல்பட வேண்டும்.
குடும்பத்தைப் பிரிப்பதென்பது அல்லாஹ்விடத்தில் பதில் சொல்லியாக வேண்டிய ஒன்று என்பதை அவர்கள் உணரும் வரை இவ்வாறான பிரச்சினைகள் சமுதாயத்திலிருந்து இல்லாமற் போகமாட்டாதென்பது திண்ணம்!
செம்மைத்துளியான்
0 Comments