கண்ணீருடன் சிவா கண்களை மூடிக் கொள்கின்றான். எத்தனை கனவுகள். அத்தனையும் கை கூடிய போதும், உன்னைப் புரிந்து கொள்ளும் சக்தியை நான் எப்படி இழந்தேன் தேவகி என்று அவன் மனம் அரற்றியது.
“சிவா... உங்களைப் போலவே இருக்கின்றான் சின்னக் கண்ணன்”. மலர்ச்செண்டை மெத்தென்ற துணியில் போர்த்தியது போல் கண்ணனை சிவாவின் கையில் கொடுத்த நேரம், உலகமே தன் காலடியில் என்பதுபோல் இறுமாந்து போனான் சிவா.
தன் கண்மணியை, உதிரத் துளியை இரத்தமும் சதையுமாக உயிர் கொடுத்து கையில் தந்த இறைவனுக்கு நன்றி பாராட்டிய வண்ணம், அதற்காக உயிர் வலியை பொறுத்துக் கொண்ட மனைவியை உயர்வாக பார்த்தான்.
“கண்ணம்மா... இனி நீ துன்பம் கொள்ளல் ஆகாது, உன்னை சந்தோசமாக வைத்து இருப்பது தான் என் தலையாய கடமை” என்றான் பாசம் பொங்க. அதன் அர்த்தம் தூங்குவதும் பிள்ளை வளர்ப்பதும் தான் என்று அவன் அர்த்தம் கொண்டானோ தெரியவில்லை. அதையும் தாண்டி, அவளுக்கும் மனம், உடல் உணர்வுகள் என்பவை என்பதெல்லாம் இருக்கும் என்பதை மட்டும் கணிக்கத் தவறினான். அவளும் குறிப்பால் கூட உணர்த்தத் தயங்கினாள்.
எப்போதும் போல் பறவைகள் ஆராவரித்துப் பறந்துக் கொண்டிருந்தன. அவன் முன் தோன்றிய தேவகியின் உருவம் மங்கலாகியது. தவிப்புடன் அவன் கண்களை மீண்டும் மீண்டும் திறந்து மூடினான். இப்போது தேவகி மட்டுமல்ல, முன்னாள் தெரிந்த அத்தனை காட்சிகளும் ஏதோ இருளைக் கவ்வியது போல் மறையத் தொடங்கியது.
பறவைகளின் ஆராவரம் எட்டாத் தொலைவில் கேட்பது போல் தூரப் போனது. மண்டைக்குள் விண்ணென்று தெறித்த வலி விறுவிறுவென முழுதுமாய் அவனுள் வியாபித்தது. மண்டைக்குள் இருந்து ஏதோ மின்சாரம் போல் கை வழியாக இறங்கி கையினை நடுங்க வைத்தது. இதயத்துள் எங்கோ ஊசியாக இறங்கிய வலி இதயம் முழுக்க வியாபித்தது. உடன் அவன் இதயம் தன் துடிப்பை ஒரு வினாடி நிறுத்தி மீண்டும் இயங்கியது,
உட்கார்ந்திருந்த சிவா கொஞ்சம் நாற்காலியை விட்டு சரிவதை கவனித்து பதறிப் போனவனாக ஆறுமுகம் தாதியை அழைத்தான். தூக்கத்தில் இருந்த விடுபட்ட தாதி ஓடி வந்து, சிவாவின் நிலையறிந்து உடனே டாக்ரை தொடர்பு கொண்டாள்.
டாக்டர் வருமுன்னமேயே, அன்றைய சூரிய உதயத்தை இரசித்த அவன் கண்கள் மாலை நேர சூரிய அஸ்தமனத்தை காணாமலேயே மூடிக் கொண்டன. ஆறுமுகத்தின் அலறல் சிவாவின் முடிவு கண்டு, அந்த ஏகாந்தமான ஆற்றோரத்தில் பலமாக கேட்டது. சிவா என்ற அந்த எழுத்தாளனின் சரித்திரம் அத்துடன் முற்றுப் பெற்றது.
(தொடரும்)
Vettai Email-vettai007@yahoo.com
0 Comments