இதுவொரு கதையல்ல; 2019 இறுதிக்காலகட்டத்தில் உருவாகி, பூகோளத்தைக் கொலைக்களமாக்கி, சுமார் ஆறு மில்லியனுக்கும் அதிகமானோரைக் காவுகொண்ட நுண்ணுயிர்க்கிருமியின் தோற்றப்பாடு பற்றியதும், ஒதுங்கி வாழும் வனவாசிகளை நகரத்தோடிணைக்கும் பிரயத்தனத்திலும் எழுதப்பட்ட கற்பனைக்காவியம்!

சமூகத்தின் மூத்தோர்களிடம் சென்றுவந்த செரோக்கி, சூரியன் மறைகின்ற வேளையிலேயே தன் மனை வந்து சேர்ந்தான்.
பயணக் களைப்பு அவனை, சூரியன் மறைந்து சிறிது நேரத்திலேயே தூங்கச் செள்ள வைத்துவிட்டது. ரெங்க்மா அவனைத் தொந்தரவு படுத்தாமல் தூங்கச் செய்துவிட்டு, தன் மாமியாரின் ஜாகைக்குள் நுழைந்தாள்.
வழமைபோல் மாமி - மருமகள் சேர்ந்து இரவுநேர உணவைச் சமைத்தார்கள்.
செரோக்கிக்கும் தனக்குமான பங்கை எடுத்து வந்த அவள், தனது மனைக்குள் நுழைந்தததும், செரோக்கி வழமைக்கு மாறாக நாசி நாதமிட்டுத் தூங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்ததும், தான் எடுத்துவந்த உணவுத்தட்டை மூடி வைத்துவிட்டு அவளும் தூங்கலானாள்!
மனைக்குள் இலேசாக வெளிச்சம் வர ஆரம்பித்தபோது… வழமைபோல் செரோக்கி கண் விழித்துக் கொண்டான்!
எழுந்திருந்தவன்… இரு கைகளையும் தலைக்குமேலாக நீட்டி… நிமிர்த்தி உடம்பை முறுக்கிவிட்டுக் கொண்டான்! தலையை இடதும் வலதுமாகச் திருப்பியபடி தன் கண்களால் எதையோ தேடுகின்றான்!
அங்கே ரெங்க்மாவைக் காணவில்லை!
வாசலுக்கு வெளியில் எட்டிப் பார்த்தான். அவள் குனிந்தபடி ஓங்காரமிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு பதறிப்போன அவன், சுதாகரித்துக் கொண்டு எழுந்து, அவளருகே ஓடினான்!
தன் இரு கைகளாலும் அவளது நெற்றியின் இரு மருங்குகளையும் இறுக்கிப் பிடித்துக்கொண்ட அவன், அவள் வாந்தி எடுப்பதை இலகு படுத்த உதவலானான்!
சிறிது நேரம்வரை ஓங்காரமிட்ட அவள், தலை நிமிர்ந்ததும் செரோக்கியை வாரி அணைத்துக் கொண்டாள். அந்த அணைப்பிலிருந்து சற்றும் விலகாமல், அவன் அவளைக் கைத்தாங்கலாக்கிக் கொண்டு படுக்கை வரை வந்து, அவளை விரிப்பில் சாய அமர்த்தினான்!
என்ன நடந்தது, ஏது நடந்தது என்பது புரியாமல், தன் தாயிடம் ஓடிச் சென்ற அவன், ரெங்க்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்ற செய்தியைத் அவளிடம் ஒப்புவித்தான்.
கதிகலங்கிப்போன அவனது தாய், அலவத்தைக்கு ஓடிச்சென்று அங்கு வாழ்ந்துவரும், மருத்துவச்சியை அழைத்துவரும்படி கூறியதும், அம்பிலிருந்து பாய்ந்த வில்லாக அவன் அங்கிருந்து விரைந்தான்!
செல்லும் வழியில் ரெங்க்மாவின் பெற்றோரின் ஜாகைக்குள் நுழைந்த அவன், நடந்த நிகழ்வை அவர்களிடம் குறிப்பிட்டுவிட்டு, தான் மருத்துவச்சியை அழைத்துவர அலவத்தை வரை செல்வதாகக் குறிப்பிட்டான்.
ரெங்க்மாவின் தாயார் அவனை அங்கு செல்லவிடவில்லை!
அவள் தான் சென்று மருத்துவச்சியை அழைத்துவருவதாகப் பொறுப்பெடுத்துக் கொண்டு, செரோக்கியைத் திரும்பிப் போகச்செய்தாள்.
தன் மனைக்கு விரைந்து வந்த செரோக்கி, அக்கம் பக்கத்தவர்கள் பலரும் ரெங்க்மாவைச் சூழ்ந்துநின்று கொண்டிருப்பதைப் பார்த்ததும் பதறிப்போய்விட்டான்!
(தொடரும்)


0 Comments