Ticker

6/recent/ticker-posts

சிந்தனையை தூண்டும் வாழ்வியல் நிஜங்கள்-11


உயர்வு தரும் வாய்மை
நல்ல மனம், நல் உழைப்பை நல்கி உயர்வை நோக்கிப் பயணம் செய்யும் ஆற்றல் நிறைந்தவர்களே ! வாய்மை எனும் உண்மைக் கொடி ஏந்திச் செல்லுங்கள் நிறைவான உயர்வு உமதாகும். இது தான் நிஜம். இதையும் தன் குறளில் வள்ளுவர் கூறி உள்ளாரா? எனக் கேட்கத் தோன்றுகிறதா?

இதோ அவர்
உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன்.(குறள் 294) 

என்பதாகும். இதன் நேரடிப் பொருள் : ஒருவன் தன் மனம் அறிந்து பொய் இல்லாமல் வாழ்வானானால் அவன் உலகத்தில் உள்ள நல்லவர்களின் உள்ளங்களில் எல்லாம் நிலைத்து வாழ்வான். உண்மைதானே!

மனிதன் வாழப்பிறந்தவன் நிம்மதியாக, அமைதியாக, ஆனந்தமாக, மன நிறைவாக வாழ்வது தானே வாழ்க்கை . அதைவிடுத்து, மனிதப் பண்பில் இருந்து விலகி வாழ்வது நிம்மதி தருமா? பொய்மை, கோபம், காமம், களவு செய்பவன் பேசத் தெரிந்த மிருகம். இவைகளுடன் கொலையும் சேர்த்தால் அவை பஞ்சமா பாதகங்களாகும். இவைகளைத் தவிர்த்தாலே உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாகும். நம் வாக்கினிலே தெளிவு இருக்கும். பயம் விலகிவிடும். அருள் ஒளிவீசும். உலகம் உன்னிடம் மயங்கும். இது நிஜம்... 

தோ ஒருவரலாற்றுச் சான்று... நடந்த சம்பவம்.

அவர் 18 வயது இளைஞர் படிப்பதற்காக ஒரு வணிகர் கூட்டத்தோடு சேர்ந்து பாக்தாத் நகரம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தார். நீண்ட தூரப் பயணம். பயணத்தின் நடுவே திடீரென்று ஒரு கொள்ளைக் கூட்டம் வழி மறிக்கிறது. அவர்களிடம் பயங்கரமான ஆயுதங்கள். அவர்கள் வணிகர் கூட்டத்தை மிரட்டி எல்லாப் பொருள்களையும் பறித்துக் கொண்டுவிடுகிறார்கள். சிலர் தாமாகவே தம்மிடம் உள்ளதை உயிருக்குப் பயந்து கொடுத்துவிடுகிறார்கள்.

இந்த இளைஞர் மட்டும் ஓர் ஓரமாக நின்று நடப்பதைப் பார்த்துக் கொண்டு இருக்க, அதை அந்த கூட்டத்தலைவன் கவனித்து... யார் இந்த சிறுவன்?... அனாதை போல் ஒதுங்கி நிற்கிறானே என்று யோசித்தவாறே, மிகவும் அலட்சியமாகவும், கிண்டலாகவும், இவனிடம் என்ன இருக்கப் போகிறது என்ற மமதையுடன், அவனை நெருங்கி, டேய், உன்னிடம் ஏதாவது இருக்கா? என்றான்.

உடனே அந்த இளைஞர் ஓ... இருக்கிறதே ! என்கிட்டே 40 தினார் (பொற்காசுகள்) இருக்கு... என்றான். கூட்டத் தலைவனுக்கு நம்பிக்கை வரவில்லை. “ஏய் என்னிடம் பொய் சொல்லாதே! உண்மையைச் சொல்லு" என்று மிரட்டினான்.

“ஐயா நான் உண்மையைத் தான் சொல்றேன் என்னிடம் 40 தினார் இருக்கு... 

“எங்கே வச்சிருக்கிறே?... “என் சட்டையின் உள்புறம் வைத்து தைக்கப்பட்டிருக்கு!... கூட்டத் தலைவன் கட்டளையிட அவன் சட்டை கிழிக்கப்படுகிறது. அதிலிருந்து 40பொற்காசுகள் பொலபொலவென்று கீழே விழுகின்றன.

அதைப் பார்த்த கொள்ளையர் தலைவன் விக்கித்துப் போனான். காரணம் கீழே விழுந்தவை பொற்காசுகள் அல்ல... அந்த இளைஞரின் நேர்மை ! அவன் பேசிய உண்மை ! கண்களில் தெரிந்த சத்தியம் ! 

கூட்டத்தலைவன் இளைஞனை நெருங்கி, 

"ஏம்ப்பா... நீ என்ன வசதியான வீட்டுப் பிள்ளையா? "என்றான். 

"இல்லை... எனக்கு அப்பா இல்லே! அம்மா மட்டும் தான். எங்க அப்பா எனக்குன்னுவிட்டுட்டுப் போன சொத்தே இந்த 40 தினார் தான்" என்றான்.

"அப்படி இருந்துமா? உண்மை பேசணும் என்று ஆசைப்பட்டே. என்கிட்டே ஒண்ணுமில்லேன்னு ஒரு பொய் சொல்லியிருந்தா உன்னை விட்டிருப்போமோ?" என்றான் கூட்டத் தலைவன்.

"அப்படி இல்லீங்க... நான் இறைவன் திருநாமத்தை அறியக் கூடிய கல்வி ஞானத்துக்காக இப்பப் போய்கிட்டிருக்கேன். “இறைவன் பெயரை உச்சரிக்க வேண்டிய நாவால் பொய் பேசக் கூடாதுன்னு எங்க அம்மா சொல்லி இருக்காங்க” அதனாலே, நான் எப்பவுமே பொய் சொல்ல மாட்டேன். எங்க அம்மாவுக்கு வாக்குக் கொடுத்திருக்கேன்" என்று இளைஞன் கூற, கொள்ளையர் கூட்டமே வாயடைத்துப் போகச் செய்த அந்த இளைஞர் யார் தெரியுமா? அவர் தான் ஆன்மிகச் சாதனைகள் பல புரிந்த முல்லாமுகையத்தீன் அவர்களாவார்.

கொள்ளையர்களின் மனம் திருந்தி நல்வழிப்பட, பின்னாளில் அந்தக் கொள்ளையர் தலைவன் ஒரு மகான் ஆக மாறுகிறார். வாய்மை வெல்லும் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும்.

அரிச்சந்திரன் கதை, அண்ணல் மகாத்மா காந்தியடிகள் வாழ்க்கை , உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத வாய்மையாளர் வள்ளல் இராமலிங்க அடிகள் வாழ்வு, அன்னை தெரேசா வாழ்க்கை எனப் பல சான்றுகளைக் கூறலாம். 

நீ உண்மையாளனாக இருந்தால் உலகத்தின் வாசல் உனக்காகத்திறந்திருக்கும்... உன் புகழ்பாடும்.

இப்போது திரும்பி, குறளைப் படியுங்கள். 

புதிய ஒளிவீசும், உண்மையும், உழைப்பும், நேர்மையும், இணைந்த வெற்றி உங்கள் வாழ்வில் நிலைக்க வாழ்த்துகள். நலம்பெறுக! நீடுவாழ்க!
(தொடரும்)

Post a Comment

0 Comments