சத்தியத்திற்காக தன் பிள்ளையை இழக்கும் மன வலிமை கொண்ட தியாகத் தாய் அன்னை அஸ்மா...
போராளி பெண் அஸ்மா ரழியல்லாஹு அன்ஹாவின், அன்பு மகன் அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு,
கலீஃபாவாக பதவி ஏற்றதும் அவர்களை ஹஜ்ஜாஜ் என்பவர் எதிர்த்து நின்றார்...
கலீஃபாவுடன் கூட இருந்தவர்கள் எல்லாம் இவர்களை தனியே விட்டு விலகிச் சென்று விட்டனர்...
தனிமையாகி விட்ட அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு
தன் அன்பு தாயிடம் வந்து,
தன் நிலையை எடுத்துரைத்து இதிலிருந்து மீட்சி பெற தான் என்ன செய்ய வேண்டும் என்று அன்னை அஸ்மாவின் ஆலோசனைக்காக காத்திருக்க...
மார்க்கத்தை விட தன் பிள்ளையின் உயிரே முக்கியம்...
தன் பிள்ளையின் உயிருக்கு மட்டும் எந்த ஆபத்தும் வந்து விடக்கூடாது என்று நினைத்து அஞ்சி, தன் பிள்ளையை பாதுகாக்கும் சாதாரண தாயல்ல அன்னை அஸ்மா!
"என்ன மகனே! கோழையாக வந்து நிற்கிறாய்... உயிருக்கு அஞ்சி எதிரியுடன் போராடாமல் விட்டாலும் எவ்வளவு காலம் தான் இந்த உலகில் வாழ்ந்து விட முடியும்? என்றோ இறந்து தானே ஆக வேண்டும்...
அதுவே இஸ்லாத்துக்காக புனித ஜிஹாத் செய்து அதில் நீ கொல்லப்பட்டால் அது மிகச் சிறந்ததாகுமே" என்று அந்த வீரத்தாய் கூற,
"தாயே நான் மரணத்திற்கு பயப்படவில்லை...
எதிரிகள் என்னை கொன்ற பின் என் உடலை சித்திரவதை செய்வதாக ஏற்கனவே கூறியுள்ளார்கள்...
அதுமட்டுமல்ல, என் உடம்பை சிலுவையில் அறைவதாகவும் வாக்களித்துள்ளார்கள்... அதை எண்ணித்தான் என் மனம் அஞ்சுகிறது" என்று தன் மன வேதனையை அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு தன் தாயிடம் எடுத்துச் சொல்ல,
"மகனே உயிர் போய்விடுமே என்று அஞ்சினால் கூட பரவாயில்லை.
நீ மரணத்திற்கு பின் நடக்கப் போவதை நினைத்தா நீ கவலைப்படுகிறாய்?
ஆடு அறுக்கப்படும் பொழுது பயப்படலாம். அறுத்தபின் தோலை உரிப்பார்களே! துண்டு துண்டாய் வெட்டுவார்களே! என்று பயப்படலாமா???
நீ அநியாயமாக கொல்லப்படுகின்றாய் என்றால் தான் எனக்கு வருத்தம்.
சத்தியத்திற்காக போராடி நீ உன் உயிரை மார்க்கத்திற்காக தியாகம் செய்வது எனக்கு பெருமையே! அல்லாஹ்விடம் உதவி தேடு! உன் மூளையை இதற்காக உபயோகி! தைரியமாக சென்று போராடு மகனே"
என்று தன் மகனை உணர்ச்சி பெறச் செய்தார் அந்த போராளித் தாய்...
இப்பொழுது இந்த பெண்ணுக்கு போராளி பெண் என்பது முற்றிலும் பொருந்தும் என்பதை நீங்கள் புரிந்து இருப்பீர்கள்...
இத்தகு இறையச்சமும்,வீரமுமுள்ள ஒரு தாயை பெற்றதற்கு பெருமை கொண்டு தன் தாயின் நெற்றியில் முத்தமிட்டு விட்டு, தனக்காக துஆ செய்யுமாறு கூறி யுத்தகளம் நோக்கி வீர நடை போட்டார்கள் கலீஃபா அப்துல்லாஹ்..
இது மட்டுமல்ல! அன்னை அஸ்மாவின் துணிவையும்,இஸ்லாத்திற்காக அவர்கள் செய்த தியாகங்களையும் இவ்வுலகிற்கு பறைசாற்றும் வீரச் செயல்களை தொடர்ந்து வரும் சம்பவங்களிலும் நாம் அறியலாம் இன்ஷா அல்லாஹ்...
(தொடரும்)
0 Comments