
வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டுஇயற் பால பல.
மாப்ள.. நமக்கு தும்பம் வராம இருக்கணும்னா, எல்லா வசதிகளும் இருக்கும் போதே, அதுகளைத் துறந்து விடணும். இப்படிச் செஞ்சிட்டோம்ணு வச்சுக்கோயேன் நமக்கு கிடைய்க்கக் கூடிய இன்பம் நிறைய .
குறள் 343
அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லாம் ஒருங்கு.
ஏ மாப்ள.. மொதல்ல நம்மோட அஞ்சு புலன்களையும் அடக்கி ஆளணும் டே. அந்த புலன்கள் விரும்புத பொருள்களைல்லாம் விட்டுத் தொலைய்க்ணும். இது தான் துறவுக்குரிய இலக்கணம்.
குறள் 344
இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து.
மாப்ள.. துறவு நிலைன்னு வந்தாச்சுன்னா, எது மேலயும் ஆசை வைய்க்கக் கூடாது. எதுமேலயாவுது ஆசை வச்சிட்டேண்ணு வச்சுக்கோயேன், அது மேல மேல ஆசைப்பட வச்சு, ஒன்னை முழுக் கிறுக்கனா மாத்திவிட்றும். புரியுதாடே...
குறள் 345
மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை.
தம்பி... இந்த மண்ணுல அடுத்து பொறப்பே வேண்டாம்னு இருக்க முயற்சி பண்ணுத ஒருத்தனுக்கு, இப்பம் இருக்க ஒடம்பே ஜாஸ்தி தான். இதுக்கு மேல இன்னம் எதுக்குத் தம்பி ஆசைப் படணும்.
குறள் 348
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்.
மாப்ள.. எல்லாக் கழுதையையும் விட்டுத் தொலைச்சவங்க ஒயர்ந்த நிலைக்கு வருவாங்க. அப்படி விடாதவனுவொ எல்லாரும் அறியாமைங்கிற வலையில சிக்கி சங்கடப் படுவாங்க மாப்ள.
குறள் 395
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்.
மாப்ள.. பணக்காரங்க முன்னால, ஏழைகள் பணிஞ்சு நிப்பதை பார்த்திருப்ப. அது மாதிரி தான் மாப்ள படிக்க ஆர்வமுள்ளவங்க ஆசிரியர்கள் முன்பு பணிவா நின்று தங்களோட ஆர்வத்தை காட்டுவாங்க. இப்பிடி நடக்க கூச்சப் படுபவனுவொ கீழ்நிலைக்குப் போவானுவொ.
குறள் 397
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.
மாப்ள.. நல்ல படிச்சவனுக்கு, ஊர்லயும், ஒலகத்துலயும் நல்ல பெருமை கெடைய்க்கும். இப்படி இருக்கும் போது, இதுல்லாந் தெரியாம, ஒருத்தன் எதுக்கு மாப்ளை வாழ்நாள் பூராம் படிக்காம காலந் தள்ளணும்.
(தொடரும்)


0 Comments