
ஞாயிற்றுக்கிழமை.
காலை மணி 11:20
அவசரமா, கடிதம் எழுதிக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் மனைவியின் குரல் சமையலறையில் இருந்து வெளியே, கேட்டது.
"என்னங்க... இன்னிக்கு கோயிலுக்கு ஆறுமணிக்கு போகலாமா...?"
"கோயில் நடை திறக்கதுக்கு ஐந்து மணி ஆகும். தீபாராதனை, ஆறரை மணிக்குதான். நாம, போகும்போது சரியா இருக்கும். நான் அவசரமா ஒரு கடிதம் எழுதிட்டு இருக்கேன். பத்து நிமிசத்தில் வாரேன். அதுவரை என்னை தொந்தரவு செய்யாதே லட்சுமி..." என்றேன், நான்.
"கடிதமா...? யாருக்கு எழுதிறீங்க...?" இன்னிக்கு என்ன நாளுன்னு தெரிஞ்சும்மா கடிதம் எழுதிறீங்க...?"
"என் நண்பனுக்குதான் எழுதுறேன்..."
"நண்பனுக்கா..? ஏன் கடிதம் எழுதிறீங்க. செல்ஃபோனில் பேசலாமே...?
"என் நண்பனுக்கு, செல்ஃபோன் கிடையாது. அதனால தான், கடிதம் எழுதுறேன் லட்சுமி..."
"ஆச்சரியமா, இருக்குங்க. இந்த காலத்தில் செல்ஃபோன் வெச்சுக்காத ஒரே நபர், உங்க நண்பனாக தான் இருக்கணும். கடிதம் எழுதி முடிச்சதும் என்கிட்ட காட்டுங்க சரியா...?" சொன்ன லட்சுமியின் பேச்சுக்கு, மறுப்பேச்சு பேசாமல் கடிதம் எழுதிக் கொண்டிருந்தேன், நான்.
சரியாக, பதினைந்து நிமிடங்கள் கழிந்ததும், எழுதிய கடிதத்தை, ஒருமுறை வாசித்தேன்.
அன்புள்ள அப்பாவிற்கு,
முதன் முதலாக உங்களுக்கு, நான் எழுதும் முதல் கடிதம் இது. நலமா இருக்கீங்களா...? இதை கேட்பதற்கு நான் தகுதி இல்லாதவன். காரணம் நான் உடைந்தபோன கண்ணாடி அப்பா.
அம்மாவின் மறைவுக்கு பின்பு, தங்களை பரிவோடு கவனிக்கவே நான் திருமணம் செய்தேன். நீங்கள் வாங்கிய பூமியில், புதிதாய் ஒரு வீட்டையும் கட்டி தந்தீர்கள். நீங்கள் பட்ட கஷ்டங்களை நான் அறிவேன். காலத்தின் வேகம், நான் திருமணம் செய்யாமலே இருந்திருக்கலாம்.
மகன் என்று என்னை ஒருநாளும், அழைத்ததில்லை. தம்பி என்றுதான் என்னை அழைப்பீர்கள். ஒருமுறை, நடந்த சம்பவம் எனக்கு ஞாபகம் வருகிறது அப்பா.
''தம்பி..."
"என்னப்பா... கூப்பிட்டீங்களா...?"
"உனக்கு கல்யாணம் முடிஞ்சு மாசம் இரண்டு ஆகுது. எனக்கும் அடிக்கடி அம்மாவின் நினைப்பு அதிகமா வருது. அதனால..."
"சொல்லுங்கப்பா..."
"நான் கொஞ்சம் நாள்களாவது, தனிமையில் இருக்கணும்ன்னு நினைக்கிறேன். என் ஃப்ரெண்டு ஒரு பெரிய டிரெஸ்ட் வெச்சு நடத்திட்டு வாரான். அவனிடம் விஷயத்தை சொல்லியிருக்கேன். அவனும் சம்மதம் சொல்லிட்டான். அங்கேயே இருக்கலாம்ன்னு நானும், முடிவு செய்திருக்கேன். வாரத்தில் ஒருநாள் உங்களோடு வந்து தங்குவேன். எனக்கும் மனசுக்கு ஒரு நிம்மதி கிடைக்கும். என்னை புரிஞ்சிக்குவேன்னு நினைக்கிறேன் தம்பி...?"
அன்னிக்கு, நீங்க சொன்னதைக் கேட்டு, நானும் சம்மதிச்சேன். ஆனால், நீங்க வீட்டுக்கு இதுவரையும் வந்ததில்லை. உங்களை பார்க்க நான் வந்தபோதெல்லாம், என்னை பார்க்க மறுத்துவிட்டீர்கள்.
உங்கள் மனவேதனையின் காரணத்தை அறிய வேண்டுமென்றால், இன்னும் பல வருடங்கள் நான் காத்திருக்க வேண்டும். எனக்கு வயதாகும் வரையில்.
இந்த கடிதத்தை நான், ஏன் எழுதுகிறேன் தெரியுமா..? இன்னிக்கு , செப்டம்பர் மாதம் 23-ம் தேதி. நீங்கள் இறந்து இன்றோடு ஒருவருடம் ஆகிறது. ஒவ்வொரு வருடமும், செப்டம்பர் மாதம் இதே தேதியில், உங்களுக்கு கடிதம் எழுதபோகிறேன். நீங்கள் படிப்பீர்கள் என்ற நம்பிக்கையில், உங்கள் போட்டோ அருகில் இக்கடிதத்தை வைக்கிறேன். இனி, அடுத்த கடிதத்தில் விபரமாக எழுதுவேன். அப்பா... எங்களை மனப்பூர்வமாக ஆசீர்வதியுங்கள்...!


0 Comments