Ticker

6/recent/ticker-posts

கிறிஸ்தவர், முஸ்லீமையும் கூப்பிடுங்க… இது திராவிடமாடல் ஆட்சி; தருமபுரி எம்.பி காட்டம்-வீடியோ


அரசு நிகழ்ச்சியில் இந்து மத சடங்குகள் மட்டும் நடப்பதற்கு எதிர்ப்பு; இது திராவிட மாடல் ஆட்சி, அனைத்து மதத்தினரையும் கூப்பிடுங்க என தருமபுரி எம்.பி செந்தில்குமார் அரசு அதிகாரிகளிடம் காட்டம்

தருமபுரி அருகே ஏரி சீரமைப்பு பணி தொடக்க விழாவில் இந்து மதம் சார்ந்த சடங்குகள் மட்டும் நடப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இது திராவிட மாடல் ஆட்சி எல்லா மதத்தினரையும் கூப்பிடுங்கள் என்று எம்.பி செந்தில்குமார் அரசு அதிகாரிகளிடம் கோபமாக கூறினார்.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலாபுரம் ஏரியில் சீரமைப்பு பணிகள் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள நீர்வளத்துறை அதிகாரிகள் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில்குமார்-க்கு அழைப்பு விடுத்தனர்.

இதையடுத்து அந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள சென்ற எம்.பி செந்தில்குமார், அங்கு இந்து மதம் சார்ந்த சடங்குகள் மட்டும் நடப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் கோபமாக பேசினார்.

அரசு விழாவில் மதச் சம்பிரதாயங்கள் நடத்தக் கூடாது என்ற வழிகாட்டுதல்கள் இருக்கு. அது உங்களுக்கு தெரியாதா? இங்க என்ன நடக்குது என நீர்வளத்துறை அதிகாரியிடம் எம்.பி செந்தில் குமார் கேட்க, வேலைக்கான பூஜை நடக்குது என்கிறார் அரசு அதிகாரி. உடனே, மற்ற மதத்தினர் எல்லாம் எங்க, கிறிஸ்துவர் எங்க, முஸ்லீம் எங்க, திராவிடர் கழகம் எங்க என எம்.பி கேட்க, எல்லோரும் இங்க இருக்காங்க என சமாளிக்கிறார் நீர்வளத்துறை பொறியாளர். உடனே எல்லாரையும் கூப்பிடுங்க, சர்ச் பாதர்-ஐ கூப்பிடுங்க, மசூதி இமாம்-ஐ கூப்பிடுங்க என்றவாறே, அங்கிருந்தவற்றை அப்புறப்படுத்த சொல்கிறார் எம்.பி செந்தில்குமார்.

மேலும், அரசு விழாவில் இப்படி நடக்க கூடாது, இதெல்லாம் உங்களுக்கு தெரியாதா? முதல்வர் கலந்துக் கொள்ளும் நிகழ்ச்சியில் இதுமாதிரி எல்லாம் நடக்கவில்லை. இந்த நிகழ்ச்சிக்கு என்னை வேற கூப்பிடுறீங்க. இதுமாதிரி நிகழ்வுக்கு என்னை கூப்பிடாதீங்க.அரசு நிகழ்ச்சிக்கு கிறிஸ்தவர்களையும் கூப்பிடுங்க, இஸ்லாமியர்களையும் கூப்பிடுங்க, மதம் இல்லாதவங்களையும் கூப்பிடுங்க, ஒரு மதத்தினரை மட்டும் வைத்து நடத்தவது திராவிட மாடல் கிடையாது. இந்த ஊரில் இவர்கள் மட்டும் தான் இருக்கிறார்களா? ஏன் இந்து மதத்தை மட்டும் சார்ந்து இந்த நிகழ்ச்சியை நடத்துகிறீர்கள்? என அரசு அதிகாரிகளிடம் கோபமாக கூறினார்.

பின்னர் எந்த சடங்குகளும் இல்லாமல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தநிலையில், இது தொடர்பான வீடியோவை பகிர்ந்து இராமநாதபுரம் எம்.பி நவாஸ் கனி, தருமபுரி எம்.பி செந்தில்குமார்-ஐ பாராட்டியுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், அரசு நிகழ்ச்சிகள் அனைவருக்கும் பொதுவாக இருக்க வேண்டும் என்ற எம்.பி செந்தில்குமார் அவர்களின் துணிச்சல் மிகு செயல்பாடு பாராட்டத்தக்கது என பதிவிட்டுள்ளார்.

indianexpress


Post a Comment

0 Comments