
அன்பே!
நீ-இல்லாத
இந்த இரவு
இருண்டுதான் கிடக்கும்
என் பகலின் நிலவு,
என் இரவின் சூரியன்
நீயாதலால்....
உன் காதலில்
கட்டுண்டு
உன் பாசத்தில்
சிக்குண்டு
உன் மோகமயக்கத்தில்
உயிர் காய்ந்து
உணர்விழந்தேன்....
அன்பே!
நீ வராமல் போன
பகலின் பாதியும்
வெறிச்சோடிக் கிடக்கிறது...
எனக்கு மட்டும்
இறக்கைகள் இருந்தால்
காததூரம் எல்லாம்
கணத்தில் கடந்துன்னைத்
தரிசித்திருப்பேன்...
என் காதலைக்
கொட்டியிருப்பேன்...
தூர நெளிந்து செல்லும்
இந்த ஒற்றையடிப்பாதையில்
எத்தனை நாள்
தனிமையில் நான்
தவம் கிடப்பது?
எப்போது நாம்
கைகோர்த்து நடப்பது?
பரந்து விரியும்
வானமளவு அன்புடன்
ஆறாய்ப் பிரவாகமெடுக்கும்
காதலுடன்
காத்திருக்கிறேன்...
உன் வரவுக்காய்!
இறுக்கமான
இந்தத்தனிமை
எனக்குத்தந்த
காயங்கள்....எத்தனை?
சோகங்கள்... எத்தனை?
வற்றாத ஊற்றாகி
வழிகின்றன-உனக்கான
என் கவிதைகள்...
காதலுடன்!
ஆதலால்
அன்பே! வந்து விடு
இதயம் தந்து விடு!


0 Comments