
புகைப்பவர்களின் அருகில் இருக்கும் புகை பழக்கம் இல்லாதவர்கள் தற்செயலாக அவர்கள் வெளியிடும் புகையை உள்ளிழுக்கிறார்கள். இது செகன்ட்ஹேண்ட் ஸ்மோக் என்று குறிப்பிடப்படுகிறது. உதாரணமாக உங்களுக்கு இப்பழக்கம் இல்லை என்றாலும் பொது இடங்களில் நீங்கள் புகைபிடிப்பவர்களுடன் பழகலாம், அல்லது அருகில் இருக்க நேரிடலாம்.
புகையிலையை பயன்படுத்தி தயாரிக்கப்படுபவற்றில் சுமார் 4,000க்கும் மேற்பட்ட நச்சு ரசாயனங்கள் உள்ளதால், புகைப்பிடிக்காதவர்கள் கூட இந்த நச்சுகளை சுவாசிக்கிறார்கள். அவர்கள் வெளியிடும் புகையை சுவாசிப்பது உங்கள் ஆரோக்கியத்தையும் கடுமையாக பாதிக்கும்.
புகைப்பிடிக்காதவர்கள் எப்படி பாதிக்கப்படுவார்கள்?
புகைப்பழக்கம் இருப்பவர்கள் பாதிக்கப்படுவதை போலவே பல உடல்நல அபாயங்களுக்கு புகைபிடிக்காதவர்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை பல ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. இதய நோய்கள், மேல் மற்றும் கீழ் சுவாசக்குழாய் நோய் தொற்றுகள், நுரையீரல் புற்றுநோய், நுரையீரல் சார்ந்த நோய்கள், மூச்சுக்குழாய் அழற்சி, அடிக்கடி இருமல், தும்மல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட சுவாசப் பிரச்சனைகள் என பல உடல்நல கோளாறுகள் செகன்ட்ஹேண்ட் ஸ்மோக்கர்களுக்கு ஏற்படும் அபாயங்கள் அதிகம்.
செகன்ட்ஹேண்ட் ஸ்மோக் என்பது கண்ணனுக்கு தெரியாத சைலன்ட் கில்லர் என்று குறிப்பிடுகிறார் பிரபல மருத்துவர் விஷால் ராவ். செகன்ட்ஹேண்ட் ஸ்மோக்கிங் பல நோய்கள் மற்றும் உடல்நலப் பிரச்சனைகள், குறிப்பாக குழந்தைகளை பாதிக்கும் ஆபத்துடன் தொடர்புடையது ஏனென்றால் இது நேரடியாக புகைபிடிப்பதைப் போலவே ஆபத்தானது என்றும் எச்சரிக்கிறார் விஷால் ராவ். புகைப்பிடிப்போருக்கு இதய நோய், கரோனரி இதய நோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் மிக அதிகம். இவர்களை போலவே புகைபிடிக்காத ஆனால் புகையை சுவாசிப்போருக்கு இதய நோய் ஏற்படும் அபாயம் 25%-30% மற்றும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் 20%-30% அதிகம் என்கிறார் இவர்.
சிகரெட் பழக்கம் உள்ளவர்களின் அருகில் இருப்பதால் இளம் குழந்தைகளுக்கு சுவாச பாதை நோய்த்தொற்றுகள், ஆஸ்துமா உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. பெரியவர்களுக்கு இதய நோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் ஏற்படும். இதனிடையே இந்தியாவில் பொது இடங்களில் சிகரெட் புகையின் வெளிப்பாடு 29% இலிருந்து 23% ஆகவும், வீட்டில் 52% இலிருந்து 39% ஆகவும் குறைந்துள்ள அதே நேரம் பணியிடத்தில் இது 29.9% இலிருந்து 30.2% ஆக உயர்ந்துள்ளது. செகன்ட்ஹேண்ட் ஸ்மோக் பாதிப்புகளை குறைக்க புகைபிடிப்பவர்கள் தங்கள் சுற்றத்தாரின் உடல்நலன் மற்றும் தங்கள் ஆரோக்கியத்திலும் அக்கறை கொண்டு புகைபழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்து இப்பழக்கத்திலிருந்து முற்றிலும் விடுபட முயற்சிக்க வேண்டும் என்பது நிபுணர்களின் கோரிக்கையாக உள்ளது.
மறுபுறம் புகைப்பழக்கம் உடையோர் மற்றும் பழக்கம் இல்லாதோர் இருவருமே smoke-free laws எங்கெல்லாம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வுடன் இருப்பதும் அவசியமாகிறது.
0 Comments