வாஷிங்டன்: குழி விழுந்த கண்கள், காய்ந்த உதடுகள், வாயிலும் விரல் நகங்களிலும் மலம்.
வீட்டில் தனியே 10 நாள்கள் விடப்பட்ட 16 மாதக் குழந்தையின் அவலநிலைதான் இது.
அமெரிக்காவின் ஒகையோவிலுள்ள கிளீவ்லன்ட் நகரில் நடந்த இச்சம்பவம், தங்களின் பணியில் இதுவரை பார்த்திராத ஆகக் கொடுமையானது என்றனர் விசாரணை அதிகாரிகள்.
தொட்டிலில் குழந்தையை விட்டுச் சென்றவர் அதன் தாயார் கிரிஸ்டெல் கேன்டலேரியோ.
புவெர்ட்டோ ரிக்கோவுக்கு ஓர் ஆண் நண்பருடன் கோடைக்கால விடுமுறைப் பயணம் செல்வதற்குமுன் குழந்தையின் அருகே சில பால் புட்டிகளை வைத்துவிட்டார் அவர்.
கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதியன்று வீடு திரும்பிய தாய், தனது மகள் தொட்டிலில் இறந்து கிடந்ததைக் கண்டார்.
மருத்துவ உதவி தேவைப்படுவதாக 911 எண்ணில் தொடர்புகொண்டு கூறிய பின்னர் குழந்தைக்குச் சுத்தமான ஆடையை கேன்டலேரியோ அணிவித்தார்.
ஆனால், அவர் மூடி மறைத்ததை அதிகாரிகள் ஒவ்வொன்றாகக் கட்டவிழ்த்தபோது பலரின் சீற்றத்திற்கும் ஆளானார் கேன்டலேரியோ.
பிரிவினால் ஏற்படும் கவலையை ஒன்பது முதல் 18 மாதம் வரையிலான குழந்தைகள் அதிகம் உணர்வர் என்று நீதிமன்றத்தில் தடயவியல் நிபுணர் எலிசபெத் மூனி கூறினார்.
இதன்படி, குழந்தை ஜெய்லின் குறைந்தது ஒரு வாரமாக அந்தப் பிரிவைத் தாங்காமல் தவித்திருப்பார் என்றார் அவர்.
பசி, தாகம், கைவிடப்பட்ட உணர்வு என அந்தப் பிஞ்சு அனுபவித்த துயரத்தை யாராலும் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது என்றார் மூனி.
குழந்தை படுத்திருந்த மெத்தை முழுவதும் சிறுநீரும் கழிவுமாக இருந்தது என்று குறிப்பிட்ட அரசுத்தரப்பு வழக்கறிஞர் ஏனா ஃபாராகிலியா, “விலங்குகள்கூட அவற்றின் குட்டிகளை நன்றாகப் பார்த்துக்கொள்ளும்,” என்றார்.
மனநலப் பிரச்சினை, மயங்கி விழும் சம்பவங்கள் எனத் தங்களின் மகளுக்கு வாழ்நாள் முழுவதும் சுகாதார சிக்கல்கள் இருந்துள்ளதாக கேன்டலேரியோவின் பெற்றோர் கூறி, நீதிபதியிடம் கருணை நாடினர்.
இருப்பினும், கேன்டலேரியோவுக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்தார்.
கடுமையாகப் பேசிய நீதிபதி, “நீ இன்பமாகப் பொழுதைக் கழித்த அதேவேளை உன் குழந்தையைப் பலநாள்களாக ஒரு சிறு சிறையில் தவிக்கவிட்டாய். அன்பு, நம்பிக்கை, பாதுகாப்பு என்ற அடிப்படையில் இயங்குவது புனிதமான தாய், பிள்ளை உறவு. நீ செய்தது துரோகத்தின் உச்சம்,” என்றார்.
“உயிர்பிழைப்பதற்காக உன் குழந்தை தன் சொந்த மலத்தை உண்ணும் அதேவேளையில் நீ கடற்கரையில் இருந்தாய்,” என்று சாடினார் நீதிபதி.
பரோல் சாத்தியம் இல்லாத ஆயுள் தண்டனையை அத்துடன் அவர் விதித்தார்.
“உன்னால் குழந்தை ஜெய்லின் இறக்கும்வரை சிறைவாசம் அனுபவித்துள்ளது. அதேபோல் நீயும் உன் இறுதி மூச்சுவரை சுதந்திரமின்றி சிறையில் இருக்க வேண்டும். ஆனால், சிறையிலாவது உனக்கு உணவு கிடைக்கும். அதுதான் வித்தியாசம்,” என்றார் நீதிபதி.
tamilmurasu
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments