Ticker

6/recent/ticker-posts

புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா-5


தந்தையும் மகனும் தொடர்ந்து நடந்தார்கள்!

வழமையாகத் தன்னை அழைத்துச் சென்ற பாதை இதுவல்ல. வேறொரு வழியில் தந்தை தன்னை அழைத்துச் செல்வதை செரோக்கி உணர்ந்தான்!

அதுவோர் ஒற்றையடிப் பாதை!

ஒரே வடிவிலான, அருகருகே பார்ப்பதற்கு அலங்காரமாக இருந்த, பண்புல் தாவரக் குழாய்ச் செடிகளால் சுவர் எழுப்பப்பட்டு, இலுக்கினால் வேயப்பட்ட ஜாகைகளை செரோக்கி இவ்வழியில் பார்க்கின்றான்!

தனது பாட்டனாரால் கட்டப்பட்ட அவன் வாழுகின்ற ஜாகை மூங்கில் வரிச்சி கொண்டு, களிமண் சுவரால் கட்டப்பட்டது! 

அவர்கள் சென்று கொண்டிருந்த சில இடங்களில்  சேறும் சகதியுமாக இருந்தன! அதில் கால்களை நனைத்து விளையாடிக் கொண்டே  செரோக்கி  நடந்தான்!

அவனோ அவனது தந்தையோ வனத்தினுள் நுழையும்போது மாத்திரமே காலணி அணிந்து கொள்வார்கள். அவர்கள் சுமந்துவரும் பைக்குள் மிருகத்தோலிலான காலணிகள் பத்திரமாக இருக்கின்றன!

குன்றும் குழியுமாக இருந்த சில இடங்களில் பென்னம் பெரிதாக வளர்ந்திருந்த மரங்களின் வேர்கள் பாதையை குறுக்கறுத்துச் சென்று கொண்டிருந்தன!

நடந்து வந்த களைப்புத்தீர அந்த வேர்களில் ஒன்றில் அமர்ந்த தந்தை, செரோக்கியையும் அருகில் வந்து அமரச்சொன்னார்! 

பிறகு, தான் சுமந்து வந்த தோல்பையிலிருந்த கூசாவைத் திறந்து கொஞ்ச நீரை அருந்திவிட்டு, கூசாவை செரோக்கிக்கும் நீட்டினார்!


பின்பு, தூரத்தே தெரிந்த ஜாகையொன்றைச் சுட்டிக் காட்டி, அவருக்கொரு தங்கை இருப்பதாகவும், அவள் அங்கே வாழ்வதாகவும் கூறினார்!

அப்பொழுது அவன் தந்தையை வியப்பாகப் நோக்கினான்!
“நான் உனது தாயோடிருப்பதுபோல, அவளும் இந்த வனத்தில் வேட்டையாடுவதில் சிறந்து விளங்கிய ஒருவரோடிருக்கின்றார்!” என்று தந்தை கூறியதும் புரிந்தும் புரியாததுமாக மிரண்ட அவன், தந்தையை மேலும் வியப்பாகப் பார்த்தான்!

“அவர்கள் இருவரையும் நாம் மணமுடித்து வைத்தோம்” என்றார்!

"ஹர்கின்ஸ்" என ஆதிக்குடிகளால் செல்லமாக அழைக்கப்பட்டு வந்த மூத்தவர் ஏதோ ஒரு வெளியுலக நாட்டிலிலிருந்து வந்து சேர்ந்தது போலவே -  எனது தங்கையின் கணவரது முப்பாட்டன் “எபோரிஜன்" பழங்குடியினர், அவுஸ்திரேலியாவிலிருந்து வந்தவராம். எனது தந்தையின் காலத்தில் தங்கையின் கணவர் இந்த வனத்திலேயே மிகவும் திடகாத்திரமானவராகவும், மோப்ப சக்தி கொண்டு வேட்டையாடுவதில் திறமை கொண்டவராகவும் இருந்தபடியால் தங்கையை  உனது பாட்டன் அவருக்கு மணமுடித்து வைத்தார்.  நீயும் பெரியவனானதும் ஒருநாள் மணமுடிப்பாய், ஒர் அழகான - அறிவான பெண்ணைப் பார்த்து, நாங்கள் உன்னையும் மணமுடித்து வைப்போம்” என்றார் தந்தை!

செரோக்கி இப்பொழுதுதான் வாழ்க்கையின் நிதர்சனங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகப் அறிந்து, புரிந்து கொள்கின்றான்! 

வனத்துக்கு வெளியிலிருந்து அறிவுசார்ந்த பரம்பரை ஒன்றில் உருவான அவனது பூர்வீகம் கொடிய மனிதக் 
கும்பல் ஒன்றினால் வனவாசியாக்கப்பட்டதை  அவன் போகப்போக அறிந்து கொள்வான்!

வேரை விட்டும் எழுந்து கொண்ட தந்தையும் மகனும் முன்னோக்கி நடக்கத் தொடங்கினார்கள்! வரிசையாக பாதை ஓரத்தில் அவன் கண்ட  அலங்காரமாக, பண்புல் தாவரக் குழாய்ச் செடிகளால் சுவர்கள் எழுப்பப்பட்டு, இலுக்கினால் வேயப்பட்ட ஜாகைகளுக்கு மாறாக, தந்தையின் தங்கையது ஜாகை,  சற்றுப் பெரிதாகவும், சிறிது வித்தியாசமானதாகவும் காணப்பட்டது. வட்டவடிவான அந்த  ஜாகையை செரோக்கி அதிசயமாகப் பார்த்தான்! 

கூரான முகப்பொன்றைக் கொண்டிருந்த அது, மிருக மண்டை ஓடு ஒன்றிணை  முகப்பில் தாங்கியிருந்தது!

தனது தங்கையின் கணவர் ஒரு தீவிர வேட்டைக்காரர் மட்டுமல்லாது, எபோரிஜான் இனத்து மோப்ப சக்தி கொண்டவர் என்றும் தந்தை கூறியதும் அவன் வியந்து போனான்!  வனத்திற்குள் நடமாடும் மிருகங்களைத் தனது மோப்ப சக்தியால், “எவ்வகை மிருகம்? எங்கு பதுங்கியுள்ளது?” என்பதை நுட்பமாகவும், நுண்ணியமாக அறிந்து கொள்ளும் திறன் கொண்ட அவர், வேட்டையாடி மிருகங் களைப் பிடிப்பதென்பது அவருக்கு இலகுவான காரியம் என்பதை மேலும் தந்தை வெளிப்படுத்தியபோது, அவன் பிரமிப்படைந்தான்! தனது குட்டிப்பருவத்தில்  இருந்தே வேட்டையாடுவதென்றால் செரோக்கிக்கு அலாதிப்பிரியம்!

(தொடரும்)

செம்மைத்துளியான்


 



Post a Comment

0 Comments