Ticker

6/recent/ticker-posts

விதியின் குற்றமல்ல...!


உணவு கேட்டேன்
சிற்பத்தின் உயரத்தைக் காட்டி
சிலாகித்தாய்
அப்போதே
சிந்தித்திருக்க வேண்டும்

ஆடை கேட்டேன்
விண்வெளி கலத்தைக் காட்டி
வியப்பூட்டினாய்
அப்போதே
விழித்திருக்க வேண்டும் 

வீடு கேட்டேன்
கோயில் கோபுரத்தை காட்டி
கொண்டாடினாய்
அப்போதே
கொதித்திருக்க வேண்டும்

கல்வி கேட்டேன்
தன் வரலாறு காட்டி
கைத்தட்ட வைத்தாய்
அப்போதே
கணித்திருக்க வேண்டும்

வேலை கேட்டேன்
புள்ளி விபரத்தைக் காட்டி
புன்னகை செய்தாய்
அப்போதே
புரிந்திருக்க வேண்டும்

ஆனந்த பைரவி கனவில்
மீண்டும் உன்னிடம்
வீணையை கொடுத்தோம்
அறுந்து தொங்குகின்றன
ஆர்வமூட்டிய நரம்புகள்

புத்தியை தீட்டாமல்
வீணைக்கலைஞன் என்று
விறகு வெட்டியை நம்பியது
விதியின் குற்றம் என்றால்
கை கொட்டி சிரிக்காதா
உலகம்?


ஐ.தர்மசிங்
நாகர்கோவில்
கன்னியாகுமரி மாவட்டம்
தமிழ் நாடு.
 


 



Post a Comment

1 Comments

  1. ஆசிரியர் அவர்களுக்கு
    வணக்கம் சார்.

    இந்த இதழில் எனது கவிதையும் வெளிவந்திருக்கிறது.
    இதயம் நிறைந்த நன்றிகள் சார்

    ஒரு சிறிய வேண்டுகோள் சார். இதழில் வெளி வந்திருக்கும் கவிதையின் இடையில் நிறைய விளம்பரங்கள் வருகிறதே. அதை தவிர்ப்பதற்கான வாய்ப்பு இருக்குமா சார்?.

    நன்றி சார்

    ஐ.தர்மசிங்

    ReplyDelete