டெல் அவிவ்: இஸ்ரேலில் ஹிஸ்புல்லா அமைப்பு நடத்திய ராக்கெட் தாக்குதலில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், இந்தியர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு, அந்நாட்டிற்கான இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. ஹமாஸ் படையினரை அழிப்பதாக உறுதியேற்றுள்ள இஸ்ரேல் கடந்த ஆண்டு முதல் காசா மீது தாக்குதலை தொடுத்து வருகிறது. இந்த தாக்குதலுக்கு லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு பதில் தாக்குதல் தொடுத்து வருகிறது.
இஸ்ரேலின் வடக்கு எல்லையில் போர் உச்சக் கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த பகுதியில் இந்தியர்கள் சிலர் வேலை செய்து வந்திருக்கின்றனர். இந்நிலையில் நேற்று ஹிஸ்புல்லா நடத்திய தாக்குதலில் இந்தியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இப்பகுதியில் உள்ள பழத்தோட்டத்தை குறி வைத்து ராக்கெட் தாக்குதலை ஹிஸ்புல்லா அமைப்பு தொடுத்திருக்கிறது.
இதில், அப்பகுதியில் வேலை செய்துக்கொண்டிருந்த இந்தியர்களில் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஒருவர் உடல் சிதறி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கேரளாவை சேர்ந்த மேக்ஸ்வெல் என அடையாளம் காணப்பட்டிருக்கிறார்.
இந்நிலையில் இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேலின் இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. "ஹிஸ்புல்லா தீவிரவாதிகள், டாங்கிகளை அழிக்க பயன்படுத்தும் ராக்கெட்களை கொண்டு இந்த கோழைத்தனமான தாக்குதலை தொடுத்திருக்கிறார்கள். இஸ்ரேலின் வடக்கு எல்லை பகுதியான மார்கலியட் கிராமத்தில் பணி செய்துக்கொண்டிருந்த இந்தியர் ஒருவர் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளார். இது அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு தூதரகம் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது" என்று தூதரகம் கூறியுள்ளது.
இந்நிலையில், இஸ்ரேலின் எல்லை பகுதியில் இருக்கும் இந்தியர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என இஸ்ரேலின் இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டிருக்கிறது.
மேலும், இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, இஸ்ரேல் அதிகாரிகளுடன் தொடர்ந்து இணைந்த பணியாற்றி வருவதாகவும் தூதரகம் தெரிவித்திருக்கிறது. இந்த தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டிருப்பதாகவும் தூதரகம் விளக்கமளித்திருக்கிறது.
இந்தியர்களுக்காக 24/7 தொலைபேசி எண்களையும் தூதரகம் வெளியிட்டிருக்கிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதியன்று, பாலஸ்தீன விடுதலை அமைப்பான ஹமாஸ் படையினர், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் பதில் தாக்குதலில் இறங்கியிருக்கிறது. தற்போதுவரை இஸ்ரேல் படைகள் 30,000 காசா மக்களை கொன்றிருக்கின்றனர். இதில் கணிசமானோர் பெண்களும், குழந்தைகளும் என்பது குறிப்பிடத்தக்கது.
oneindia
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments