Ticker

6/recent/ticker-posts

பயணம் செய்யும் ஒருவர் அதிக சிரமத்துடன் நோன்பை நோற்பது சம்பந்தமாக மார்கச் சட்டம் என்ன ?


நவீன போக்குவரத்து வசதிகள் அதிகரித்துள்ள, இன்றைய சூழலில் நோன்பு நோற்பது பயணிக்குச் சிரமத்தை ஏற்படுத்தாது என்ற நிலையில் சில வாதங்களும், இஸ்லாம் பயணிகளுக்கு நோன்பில் இருந்து விதிவிலக்களித்துள்து.  ஆக இக்காலத்தை பொறுத்தவரையில் பயணத்தில் நோன்பு நோற்பது சிரமமான காரியம் அல்ல என்று சில கருத்துக்களும் வாதப் பிரதிவாதங்கள் உள்ளன. 

இது சம்பந்தமாக இஸ்லாம் கூறும் வழிமுறைகள் என்ன ?

ரமழான் மாதம் எத்தகையதென்றால், அதில்தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும், நேர்வழியைத் தெளிவுபடுத்தக் கூடியதாகவும், (சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிரித்தறிவிக்கக் கூடியதாகவுமுள்ள அல்குர்ஆன் இறக்கி வைக்கப்பட்டது. எனவே, உங்களில் யார் அம்மாதத்தை அடைகின்றாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும். யார் நோயாளியாக அல்லது பயணத்தில் இருக்கின்றாரோ (அவர்) வேறு நாட்களில் கணக்கிட்டு (நோற்று)க் கொள்ளட்டும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவையே விரும்புகின்றான். அவன் உங்களுக்குக் கஷ்டத்தை விரும்பவில்லை. அல்குர்ஆன் (2:185)

நபி அவர்கள் தமது ஒரு பயணத்தில் ஒரு மனிதரைச் சூழ மக்கள் ஒன்று கூடியிருந்து அவருக்கு நிழல் கொடுத்துக் கொண்டிருப்பதைக் கண்டு "இது என்ன என்று கேட்டார்கள்". "இவர் ஒரு நோன்பாளி" என்று கூறிய போது, "ஒரு பயணத்தில் நோன்பு நோற்பதில் நன்மையில்லை” என்று கூறினார்கள்.அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு அப்துல்லாஹ்
ஆதாரம்: முஸ்லிம்- 2668

மேலும் ஒரு பயணத்தில் நோன்பு நோற்பது மிகவும் கஷ்டமாக இருந்தால் அவர் நோன்பை விடுவது கட்டாயமாகும். ஏனெனில், ஒரு பயணத்தில் நோன்பால் மக்கள் அதிகம் கஷ்டப்படுவதாக நபி அவர்களிடம் மக்கள் முறையிட்ட போது "நோன்பை விடுமாறு" கூறினார்கள். நபியவர்கள் இச்செய்தியை அறிவித்த பின்னரும் சிலர் நோன்பு நோற்பதாக நபியவர்களிடம்  கூறப்பட்ட போது அவர்கள் வரம்பு மீறியவர்கள், அவர்கள் வரம்பு மீறியவர்கள் என்று நபி( அவர்கள் கூறினார்கள். முஸ்லிம் 2666)

மேலே கூறப்பட்ட ஹதீஸ்களின் அடிப்படையில் ஒரு மனிதன் தன்னை வருத்திக்கொண்டு நோன்பு பிடிப்பதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை என்பதை அறிய முடிகின்றது. மேலும் அவ்வாறு செய்யும் ஒரு கூட்டத்தை நபியவர்கள் கண்டிப்பதை இந்த ஹதீஸ் மூலம் விளங்க முடிகின்றது.

மேலும் அமல்கள் சம்பந்தமாக வரக்கூடிய பல ஹதீஸ்களில் தன்னை வருத்திக்கொண்டு அமல் செய்வதை நபியவர்கள் தடுத்துள்ள செய்தி பல இடங்களில் காணப்படுகின்றது. 

மேலும் ஒரு பயணத்தில் யாருக்குப் பயணம் சிரமமளிக்க வில்லையோ அவர் நபி அவர்களும் பயணத்தில் நோன்பு நோற்றுள்ளார்கள் என்பதைப் பின் வரும் ஹதீஸ் தெளிவு படுத்துகின்றது.

"நாம் நபி அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம். சூடு அதிகமான ஒரு ரமழானாக அது இருந்தது. எங்களில் நபி அவர்களையும் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரழி) அவர்களையும் தவிர மற்றைய எவரும் நோன்பாளியாக இருக்கவில்லை" என அபூதர்(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.(அஹ்மத்: 22039, 21696)

இந்த ஹதீஸ் பயணிக்கு நோன்பு நோற்கவும் நோன்பை விடவும் அனுமதியுள்ளது என்பதை தெளிவுபடுத்துகின்றது.

மேலும் நபித்தோழர்கள் நபி  அவர்களுடன் பயணம் செய்வார்கள். அவர்களில் நோன்பாளியும் இருப்பார்கள் நோன்பை விட்டவர்களும் இருப்பார்கள். நோன்பை விட்டவரை நோன்பாளி குறை கூறியதுமில்லை. நோன்பாளியை நோன்பை விட்டவர் குறை கூறியதுமில்லை. நபி அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தார்கள். இது குறித்து அபூதர் (ரழி) அவர்கள் அறிவிக்கும் போது பின்வருமாறு அறிவிக்கின்றார்கள்.

இந்த விடயத்தில் பயணத்தில் நோன்பு நோற்பதா இல்லையா என்பதைப் பயணியே தீர்மானிக்க அவருக்கு பரிபூரணமான அனுமதி வழங்கப்பட்டிருப்தை அறிய முடிகின்றது .

நோன்பு நோற்பது சிரமத்தை அளிக்காது என்றிருந்தால் பயணத்தில் நோன்பு நோற்பதே சிறந்ததாகும் என்பதை மேற்குறிப்பிட்ட குரிப்பிட்ட ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

ஒரே பயணத்தில் நபியவர்களும் ஸஹாபாக்களும் இருந்துள்ளார்கள். நபி அவர்கள் நோன்பு நோற்றவர்களாக இருந்துள்ளார்கள். சில ஸஹாபாக்கள் நோன்பை விட்டவர்களாக இருந்துள்ளார்கள். ஆனால் நோன்பை விட்டவர்களுக்கு நோன்பை நோற்கும்படி எந்த வற்புறுத்தல்களையும் ஆலோசனைகளையும் நபியவர்கள் கூறியதாக பதியப்படவில்லை.

நோன்பை  நோற்றவர்களுக்கு நோன்பு பிடிக்கும்படி எந்தவிதமான ஆலோசனைகளோ அல்லது  வற்புறுத்தல்களோ
நபியவர்கள் செய்யவில்லை என்பதையும் விளங்க முடிகின்றது.

எனவே ஒவ்வொருவரும் அவரது உடல் ஆரோக்கியம் அவரது வசதி அவரது சிரமங்கள் போன்றவற்றை கருத்தில் கொண்டு அந்த விடயத்தில் முடிவு செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதை அறிய முடிகின்றது.

ஒரு பயணத்தில் நோன்பு நோற்பது அதிக சிரமத்தைக் கொடுக்குமென்றிருந்தால் அது போன்ற சந்தர்ப்பத்தில் நோன்பை விட்டுவிட வேண்டும்.

இந்த அடிப்படையில்  பயணம் என்பது இலகுவானது.  பயணத்தில் நோன்பு நோற்பது சிரமத்தைக் கொடுக்காது. பயணத்தில் நோன்பு சிரமத்தை அளிக்காது என்றிருந்தால், நோன்பு நோற்பதுதான் மிகச் சிறந்ததாகும்.

பேருவளை ஹில்மி 


 



Post a Comment

0 Comments