பாலஸ்தீனத்தின் ஹமாஸ் – இஸ்ரேல் படையினருக்குமிடையே கடந்த 2023 அக்டோபர் 7ம் தேதி ஆரம்பித்த போர் ஏழு மாதங்கள் கடந்த நிலையிலும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இஸ்ரேல் படையினர் காஸா பகுதியை கொடூரமாகத் தாக்கியுள்ளமை பற்றிய தகவல்கள் தினமும் செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன.
இஸ்ரேலிய அரசாங்கம் பலஸ்தீனைத் தாண்டி அதன் அண்டை நாடுகளுக்கு இராணுவ ஆக்கிரமிப்புகளை விரிவுபடுத்தக் கருதுவதால், முழு மேற்காசிய பிராந்தியத்தையும் மூழ்கடிக்கும் யுத்த அச்சுறுத்தல் ஒன்று நிலவி வருவதாக சர்வதேச ஊடகங்கவியலாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
பாலஸ்தீனுக்கு எதிராக இஸ்ரேலிய அரசாங்கத்தின் இராணுவ நடவடிக்கைகள் தொடங்கப்பட்டதிலிருந்து சமீபத்திய மாதங்களில், போர்ச் சூழல் அண்டை பிராந்தியங்களுக்குள்ளும் நீட்டிக்கப்பட்டுள்ளமை வருந்துதற்குரியது. இதனால், குறிப்பாக அண்டை நாடுகளான அரபு உலகம் பதட்டங்களுடனான வாழ்வாதார நிச்சயமற்ற தன்மையால் பாதிக்கப்பட்டு வருகின்றது.
பாலஸ்தீனத்திற்கு வெளியே உள்ள பிற நாட்டுப் பிரஜைகளை குறிவைத்து கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகள், முழு பிராந்தியத்திலும் பல நாடுகளுக்கிடையில் நேரடியான போர் அபாயத்தை ஏற்படுத்தி வருகின்றது.
ஈரானின் நட்பு நாடான சிரியாவிலுள்ள ஈரானின் இராஜதந்திர நிலையங்கள் சிலதை இஸ்ரேல் அரசாங்கம் குறிவைத்துத் தாக்கியமை இஸ்ரேலின் பலவந்தமான இராணுவ ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளுள் ஒன்றாகும். வேண்டுமென்றே நடத்தப்பட்ட இஸ்ரேலின் இந்த இராணுவத் தாக்குதல்கள் பிற நாட்டுப் பிரஜைகளின் உயிர்களையும் பலிகொண்டது.
இஸ்ரேலின் அழிவுகரமான நடவடிக்கைகள் மேற்கு ஆசியாவில் உள்ள நாடுகளுக்கு ஆபத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், உலக சமூகத்தை பாதிக்கும் வகையில் அரசியல் மற்றும் பொருளாதார உறுதியற்ற தன்மையையும் ஏற்படுத்தி வருகின்றது.
அதுமட்டுமன்றி, இஸ்ரேலிய அரசாங்கத்தின் ஆக்கிரமிப்பு, இராணுவவாதம் இஸ்ரேலின் சொந்த குடிமக்களின் உயிரையும் அதன் சொந்த மக்களின் வாழ்வையும் ஆபத்தில் தள்ளி வருகின்கிறமை அண்மைக்கால இஸ்ரேலிய உள்நாட்டுப் போராட்டங்களும், பேரணிகளும் சுட்டிக் காட்டுகின்றன.
ஹமாஸ் யுத்த நிறுத்தத்துக்கு இணங்கி வருகின்ற நிலையிலும் கூட, இஸ்ரேல் தனது உடும்புப் பிடியை விடுவதாக இல்லை!
இந்நிலையில் போர் பற்றிய விவரங்களைச் சேகரிக்க பல்வேறு நாடுகளிலிருந்தும் ஊடகவியலாளர்கள் சென்றிருந்தனர். தகவல் சேகரிக்கச் சென்ற இவர்களுள் பலர் காயமுற்ற நிலையில், இதுவரை 36 பேர்கள் உயிரிழந்துள்ளனர். அதில், 31 பாலஸ்தீனர்கள், 4 இஸ்ரேலியர் மற்றும் லெபனானைச் சேர்ந்த ஒருவர் எனவும் அறிய முடிகின்றது.
1992 – 2022 வரை இஸ்ரேல் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பிரதேசத்தில் இதற்கும் மேலாக, 25 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ள தகவலை 'உழைக்கும் பத்திரிகையாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு' ஆவணப்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள மேற்குக் கரையில் உள்ள ஜெனின் அகதிகள் முகாமில் நீலநிற மேலங்கி அணிந்தபடி ஊடகராகப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஷிரின் அபூ அக்லே என்ற பெண் ஊடகவியலாளர் 2022 மே 11ம் திகதி இஸ்ரேலிய சிப்பாய் ஒருவரால் கொல்லப்பட்டார்.
1971 ஏப்ரல் 3ல் பிறந்துள்ள இவர், அமெரிக்க ஊடகவியலாளராவார்; 25 வருடங்களாக அல் ஜஷீராவின் ஊடகவியலாளராகப் பணியாற்றி வந்த இவரின் கொலை சர்வதேச ஊடகப்பரப்பில் பாரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.
பாலஸ்தீனப் பகுதிகளில் பல தசாப்தங்களாக ஊடகப்பணி செய்துவந்த ஷிரின், மத்திய கிழக்கு முழுவதும் மிகவும் பிரபல்யமான ஒருவராக இருந்தார். இவர் அரபு - பாலஸ்தீனிய பெண்களுக்கான ஒரு முன்மாதிரியாகக் காணப்பட்டவரானதால், அவர் ஷஹீதாக்கப்பட்ட இடத்தில் நினைவுச்சின்னம் ஒன்றும் வைக்கப்பட்டது.
போர் தொடங்கிய ஆரம்பக் காலப்பகுதியில் அதாவது, 2023 அக்டோபர் 26ம் திகதியன்று, அவர் கொல்லப்பட்ட இடத்தில் வைக்கப் பட்டிருந்த நினைவுச்சின்னம் இஸ்ரேலிய இராணுவத்தால் 'புல்டோசர்' கொண்டு அழிக்கப்பட்டது.
அக்டோபர் 7ல் முகமது அல்-சால்ஹி, நான்காவது அதிகாரச் செய்தி நிறுவனத்திற்கான புகைப்படக் கலைஞர், மத்திய காஸாவிலுள்ள பாலஸ்தீனிய அகதிகள் முகாமுக்கு அருகாமையில் சுடப்பட்டார்.
அதே நாளில், ஸ்மார்ட் மீடியாவுடன் இணைந்த பத்திரிகையாளர் முகமது ஜார்கோன், ரஃபாவின் கிழக்கே உள்ள ஒரு பகுதியில் நடைபெற்ற மோதல் குறித்த செய்தியை வெளியிட்டபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.
அக்டோபர் 7ல் ஐன் மீடியாவின் புகைப்படக் கலைஞரான இப்ராஹிம் முகமது லாஃபி, ஈரெஸ் பாதைக் கடவை ஒன்றில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஒரு ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளரான அசாத் ஷாம்லாக், அக்டோபர் 8ல் தெற்கு காஸாவில் ஷேக் இஜ்லினிலிலுள்ள அவரது வீட்டில் இஸ்ரேலிய விமானத் தாக்குதலில், அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது உறுப்பினர்களுடன் கொல்லப்பட்டார்.
அக்டோபர். 10ல் கபார் செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த ஹிஷாம் அலன்வாஜா என்ற பத்திரிகையாளரும், ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளரான முகமது சோப் என்பவரும், கபார் ஏஜென்சியின் புகைப்படக் கலைஞர் ஒருவரும் ரிமாலில் வான்வழித் தாக்குதலின்போது கொல்லப்பட்டனர்.
இவ்வாறு, இதுவரை 36 பேர்கள் ஊடகவியலாளர்கள் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமபடைந்தும் உள்ளனர். குறிப்பாக இஸ்ரேல் தமது பகுதிக்குள்ளிருந்து உண்மைச் செய்திகள் சர்வதேசத்தைச் சென்றடைவதை விரும்பாததால், ஊடகவியலாளர்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்தமை மட்டுமன்றி, அவர்களை இலக்கு வைத்துத் தாக்கி சர்வதேசப் போர்க் குற்றங்களைத் துணிந்து புரிந்தும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது!
செம்மைத்துளியான்.
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments