
கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7 அன்று, ‘ஹமாஸ் மீதான எதிர் தாக்குதல்’ என்ற பெயரில் யூத இனவெறி இஸ்ரேலானது காஸாவில் பாலஸ்தீன மக்கள் மீதான இன அழிப்பு யுத்தத்தைத் தொடங்கியது.
இந்த இனப்படுகொலையானது 400 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் இதுவரை 17,835 குழந்தைகள், 11,891 பெண்கள் உட்பட 43,552 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளதடன், ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் படுகாயமடைந்துள்ளனர். பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அதிலும், காஸா அரசாங்க ஊடக அலுவலகத்தின் புள்ளிவிவரப்படி, 1,054 மருத்துவ பணியாளர்களும், 85 சிவில் பாதுகாப்புப் பணியாளர்களும், பத்திரிகையாளர்கள் 188 பேர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
வடக்கு காஸாப் பகுதியிலுள்ள குடிமக்கள் மற்றும் மருத்துவர்கள் அளித்துள்ள சாட்சியங்களின்படி இதுவரை உலகில் பயன்படுத்தப்படாத, மனித உடல்களை ஆவியாகச் செய்யும் புதுவகை ஆயுதங்களை இஸ்ரேல் பயன்படுத்தி வருவதாக காஸாவின் சுகாதார அமைச்சக இயக்குனர் ஜெனரல் முனீர் அல்-புர்ஷ் அல் ஜசீரா ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியொன்றின்போது தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேலிய இராணுவம் வடக்கு காஸாவில் பயன்படுத்தியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது!
இஸ்ரேலியப் படைகள் இவ்வாறான, இதுவரை உலகம் அறியப்படாத ஆயுதங்களை பயன்படுத்துவதன் விளைவாக மனித உடல்கள் ஆவியாகின்றமையினால், சரியான உயிரிழப்பு எண்ணிக்கையைக் கூடக் கணக்கிடுவது தடுக்கப்பட்டு வருகின்றது. இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களால் வடக்கு காஸாவிலுள்ள குடியிருப்புக் கட்டடங்கள் இடிபாடுகளாகவும், தூசுமயகாவுமே எஞ்சியுள்ளதாக அவர் மேலும் தெரிவிக்கின்றார்.
காஸாவில் கண்ணுக்குத் தெரியாத புதுவகை அழிவு!
இஸ்ரேல் இத்தகைய ஆபத்தான ஆயுதங்களைப் பயன்படுத்துவதன் மூலம் காஸாவில் கண்ணுக்குத் தெரியாத புதுவகை அழிவொன்றை ஏற்படுத்தி வருவதனால், வரலாற்றில் இது வேறு எந்த மோதலையும் போலல்லாதிருப்பதை அறிய முடிகின்றது.

காஸாவில் இஸ்ரேல் பயன்படுத்திய ஆயுதங்களின் வகைகள் மற்றும் பொதுமக்கள் மீதான அவற்றின் தாக்கம் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது அவரின் அபிப்பிராயமாகும்.
வடக்கு காஸாவில் குடியிருப்புக் கட்டடங்கள் மீதான இஸ்ரேலின் பயங்கரத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்கள் மறைந்து சாம்பலாக மாறியிருக்கலாம்; அதிகமான உடல்கள் காணாமற்போயிருப்பதால், இஸ்ரேல் தாக்குதலுக்கு பயன்படுத்திய குண்டுகளின் வகை பற்றிய விசாரணை ஒன்றிற்கான கேள்வியை ஜினீவாவைத் தளமாகக் கொண்ட Euro-Mediterranean Human Rights Monitor அமைப்பும் எழுப்பியுள்ளது.
காஸாவிலுள்ள கல்லறைகள் பலவற்றிலிருந்தும், இஸ்ரேலிய ராணுவம் தாக்கிய பகுதிகளிலிருந்தும் சுமார் 2,210 உடல்கள் மாயமாக மறைந்துள்ளதாக அந்த அமைப்பு இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேல் பயன்படுத்தி இருக்கலாம்

'மேம்படுத்தப்பட்ட குண்டு வெடிப்பு ஆயுதங்கள்' அல்லது 'வெற்றிட வெடிகுண்டுகள்' (Enhanced blast weapons’ or ‘Vacuum bombs') என்று அழைக்கப்பட்டுவரும் 'தெர்மோபரிக் குண்டுகள்' உட்பட சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேல் பயன்படுத்தி இருக்கலாம் என்றும் இது குறித்த சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த வகை குண்டுகள், முதலில் சிறிய தாக்கம் கொண்ட வெடிமருந்துகளைப் பயன்படுத்தி துகள்கள் கொண்ட மேகமூட்டத்தை உருவாக்குகிறது. அதன் பின் வெடிக்கும் சாதனம் எரியக்கூடிய பொருட்களை கொண்டு மேகமூட்டத்தைப் பற்றச்செய்து, 2500 டிகிரி ஸெல்ஸியஸ் வரையிலான மிதவெப்ப நிலையை உருவாக்குவதனால், இது மனித உடலின் தோல் மற்றும் உட்புற உடற்பாகங்களைக் கடுமையாக எரித்துச் சிதைகின்றது. குறிப்பாக இந்த மேகமூட்டம் அடர்த்தியாக ஏற்படுத்தப்படும் பகுதிகளில் உடல்கள் முழுமையாக உருகும் அல்லது ஆவியாகுமளவிற்கு எரியச் செய்கின்றன என்றும் அவ்வமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது!
செம்மைத்துளியான்

.gif)



0 Comments