
மும்பை தாக்குதலில் குற்றஞ்சாட்டப்பட்ட தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி தந்துள்ளது. நாட்டையே உலுக்கிய பயங்கரவாத தாக்குதல் வழக்கை மீண்டும் தூசி தட்ட வைத்துள்ள இந்த ராணா யார்? அவருக்கும் மும்பை தாக்குதலுக்கும் என்ன தொடர்பு? விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
மும்பையில் 160க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களின் உயிரை பறித்த 26/11 தீவிரவாத தாக்குதல் குறித்து, 2023 இல் 4 ஆவது குற்றப்பத்திரிகையை காவல்துறை தாக்கல் செய்தது. சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு இந்த 400 பக்க துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காரணம், தஹாவூர் ராணா. மும்பை தாக்குதலின் மூளையாக கருதப்பட்ட டேவிட் ஹெட்லி, இந்தியாவிற்கு பலமுறை வந்து நோட்டமிட ஏதுவாக விசா உதவிகளை செய்தது தான் இந்த ராணா மீது வைக்கப்படும் முதன்மை குற்றச்சாட்டு.
பாகிஸ்தான் ராணுவத்தில் மருத்துவராக பணியாற்றி வந்த ராணா, சிகாகோவிற்கு இடம் பெயர்ந்து விசா எடுத்து தருவது தொடர்பான தொழிலை செய்து வந்துள்ளார். அப்போது தான், அமெரிக்கரான டேவிட் ஹெட்லிக்கும் அவருக்கும் தொடர்பு ஏற்பட்டு 2005ல் அடிக்கடி சந்தித்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
தாம் லஷ்கர் இ தொய்பாவின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டதை மெல்ல மெல்ல ஹெட்லி உடைக்க, பாகிஸ்தான் ராணுவத்தில் இருந்து தப்பியோடியவர் என்ற அடையாளத்தை மறைக்க ஹெட்லியின் உதவி நாடியுள்ளார் ராணா. அதற்கு கைமாறாக லஷ்கருக்கு தேவைப்பட்ட பாகிஸ்தான் ராணுவ ரகசியங்களை ஹெட்லியிடம் ராணா கூறியதுடன், இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்த இருவரும் கூட்டாளிகளாகவும் மாறியுள்ளனர்.
இந்தியாவுக்கு அடிக்கடி வந்து நோட்டமிட ஏதுவாக ஹெட்லிக்கு போலி ஆவணங்கள் மூலம் 5 ஆண்டுகளுக்கான மல்டி எண்டரி விசாவை ராணா வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி மும்பையில் கிளை திறக்க உள்ளதாக கூறி அப்பார்மெண்ட் வீட்டை ஒப்பந்தத்துக்கு எடுத்து ஊழியர் ஒருவரையும் நியமித்த ராணா, அதன் ஆலோசகராக ஹெட்லியை நியமித்ததாகவும் சொல்லப்படுகிறது.
இதனிடையே, துபாய்க்கு சென்று லஷ்கரின் முக்கிய தலைவரை சந்தித்து தாக்குதல் நடத்துவதை உறுதி செய்து வந்ததாகவும் ராணா மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்துவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு மும்பையில் தங்கி தாக்குதலுக்கு தேவையான உதவிகளை செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதே முறையில், அடுத்த ஆண்டே டென்மார்க்கில் தங்கி நோட்டமிட்டு பத்திரிகை நிறுவனம் மீது தாக்குதல் நடத்த இருவரும் முயன்ற நிலையில், அது தோல்வியில் முடிந்தது. அதுதான், 2009 ஆம் ஆண்டு அமெரிக்க போலீசிடம் டேவிட் ஹெட்லி சிக்க முக்கிய காரணமாக அமைந்தது. பிறழ்வாதியாக மாறிய ஹெட்லி தந்த வாக்குமூலம் அடிப்படையில், ராணாவும் கைது செய்யப்பட்டார். டென்மார்க் வழக்கில் சிறைத்தண்டனை பெற்ற போதும், மும்பை தாக்குதலில் விடுவிக்கப்பட்டார் ராணா.
இதனிடையே, ஹெட்லிக்கும் ராணாவுக்கும் இடையே, மும்பை தாக்குதல், ஐஎஸ்ஐயின் மேஜர் இக்பால் உள்ளிட்டவை தொடர்பாக நடந்த மின்னஞ்சல் பரிமாற்றத்தை உறுதி செய்த இந்திய அரசு, அவரை கைது செய்ய 2018 இல் வாரண்ட் பிறப்பித்தது. நாடு கடத்துவதற்கு 2020 ஆம் ஆண்டு அமெரிக்காவிடம் அனுமதி கோரியது.
அதற்கு எதிராக தொடர்ந்த வழக்கை, கீழமை நீதிமன்றங்கள் நிராகரித்த நிலையில், அதை அமெரிக்காவின் உச்ச நீதிமன்றமும் தற்போது உறுதி செய்துள்ளது.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments