
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி கடந்த 2023-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் போது மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார். தனது கணுக்காலில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாமல் அந்த தொடரில் விளையாடிய முகமது ஷமி அந்தத் தொடர் முடிந்த கையோடு தனது காயத்திற்கான அறுவை சிகிச்சையும் லண்டன் சென்று மேற்கொண்டார்.
அதன் பிறகு கிட்டத்தட்ட ஓராண்டுக்கு மேலாக சர்வதேச கிரிக்கெட்க்கு திரும்பாமல் இருந்த அவர் அண்மையில் நடைபெற்ற உள்ளூர் தொடர்களான ரஞ்சி, சையத் முஷ்டாக் அலி, விஜய் ஹசாரே என அனைத்து வகையான உள்ளூர் போட்டிகளிலும் விளையாடி தனது உடற்தகுதியை நிரூபித்திருக்கிறார். இதன் காரணமாக அவர் தற்போது மீண்டும் இங்கிலாந்து அணிக்கெதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.
மேலும் எதிர்வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி என முக்கிய தொடர்களிலும் அவர் பங்கேற்று விளையாட இருக்கிறார். இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட இருக்கும் அவர் இந்திய அணியின் முன்னாள் வீரரான அஜித் அகார்கரின் மாபெரும் பல ஆண்டுகால சாதனை ஒன்றினை முறியடித்து வரலாறு படைக்க காத்திருக்கிறார்.
அந்த வகையில் இந்திய அணிக்காக கடந்த 2013-ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான முகமது ஷமி 101 போட்டிகளில் விளையாடி 100 இன்னிங்ஸ்களில் 195 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்நிலையில் எதிர்வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் அவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் உலக அளவில் அதிவேகமாக ஒருநாள் போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைப்பார்.
இந்த பட்டியலில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரான மிட்சல் ஸ்டார்க் முதலிடத்தில் இருக்கிறார். மிட்சல் ஸ்டார்க் 102 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 200 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளதே இதுவரை சாதனையாக இருந்து வருகிறது. அதனை ஒரே போட்டியில் முறியடிக்க ஷமிக்கு வாய்ப்புள்ளது.
ஒருவேளை இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் போட்டில் அவரால் 5 விக்கெட்டுகளை வீழ்த்த முடியாத பட்சத்தில் எஞ்சியுள்ள 2 போட்டிகளில் சேர்த்து அதாவது மூன்று போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினால் 103 போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிவேகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்துவார். இந்திய அளவில் அஜித் அகார்கர் 133 போட்டிகளில் விளையாடி 200 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளதே இதுவரை சாதனையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
crictamil

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com


0 Comments