
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா விளையாடும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் அக்டோபர் 19ஆம் தேதி துவங்கியது. பெர்த் நகரில் இந்திய நேரப்படி 9:00 மணிக்கு துவங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. ஆரம்பம் முதலே மழையால் பாதிக்கப்பட்ட அப்போட்டி 4 முறை நிறுத்தப்பட்டதால் தலா 26 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது.
அப்படிப்பட்ட சூழ்நிலையில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ரோஹித் சர்மா 8 ரன்களில் அவுட்டான நிலையில் அடுத்து வந்த விராட் கோலி டக் அவுட்டானார். அடுத்த சில ஓவரில் மறுபுறம் தடுமாறிய புதிய கேப்டன் சுப்மன் கில் 10 ரன்னில் அவுட்டானதால் இந்தியா 25/3 என ஆரம்பத்திலேயே தடுமாறியது. அப்போது நிதானமாக விளையாட முயற்சித்த ஸ்ரேயாஸ் ஐயர் 11 ரன்களில் அவுட்டானார்.
மிடில் ஆடரில் நங்கூரமாக விளையாடிய அக்சர் பட்டேல் 31 (38) ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதிரடியாக விளையாட முயற்சித்த கேஎல் ராகுல் 38 (31) ரன்கள் எடுத்தார். இறுதியில் வாஷிங்டன் சுந்தர் 10, நிதிஷ் ரெட்டி 19* ரன்கள் எடுத்த உதவியுடன் 26 ஓவரில் இந்தியா 136/9 ரன்களை எடுத்தது. ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக மேத்தியூ குன்னேமான் 2, மிட்சேல் ஓவன் 2, ஜோஸ் ஹேசல்வுட் 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
அடுத்ததாக டிஎல்எஸ் விதிமுறைப்படி 26 ஓவரில் 131 ரன்கள் தேவை என்ற இலக்கைத் துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு டிராவிஸ் ஹெட் 8, மேத்தியூ ஷார்ட் 8 ரன்களில் அவுட்டானார்கள். மறுபுறம் பொறுப்பாக விளையாடிய கேப்டன் மிட்சேல் மார்ஷ் ரன் குவிப்பில் ஈடுபட்டார். எதிர்ப்புறம் வந்த ஜோஸ் பிலிப் அதிரடியாக விளையாட முயற்சித்து 37 (28) ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
இறுதியில் மார்ஸ் 46*, மாட் ரென்ஷா 21* ரன்கள் எடுத்ததால் 21.1 ஓவரிலேயே 131/3 ரன்களை எடுத்த ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. அதனால் மழையைத் தாண்டி இந்தியாவை சாய்த்த ஆஸ்திரேலியா 1 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. அத்துடன் பெர்த் ஆப்டஸ் மைதானத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் 3 தொடர் தோல்விகளுக்கு பின் ஆஸ்திரேலியா முதல் முறையாக வென்றுள்ளது.
மறுபுறம் 2025ஆம் ஆண்டு இதற்கு முன் விளையாடிய 8 ஒருநாள் போட்டிகளில் இந்தியா 8 வெற்றிகளைப் பெற்றது. குறிப்பாக ரோஹித் தலைமையில் சாம்பியன்ஸ் டிராபில் 5 போட்டிகளிலும் வென்று இந்தியா கோப்பையை முத்தமிட்டதை மறக்க முடியாது. இந்தியாவின் அந்த வெற்றி நடை இப்போட்டியில் புதிய கேப்டன் கில் தலைமையில் உடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
crictamil

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments