Ticker

6/recent/ticker-posts

படிக்க சொல்லி வற்புறுத்திய தாய்... கத்தரிக்கோலை கையிலெடுத்த மகன்... அதிர வைக்கும் பின்னணி!


சிதம்பரத்தில் பெண் ஒருவரை கழுத்தறுத்து கொல்ல முயன்ற வழக்கில் திடீர் திருப்பமாக, அவரின் 14 வயது மகனே கொலைபாதக செயலில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது… 90 சதவீதம் மார்க் எடுக்கும் மாணவரை, மேலும் நன்றாக படிக்க கூறி நச்சரித்ததால் கத்திரிக்கோலை கையில் எடுத்ததாக கூறியதன் பின்னணி என்ன?

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த தம்பதி நடராஜ் – கோமதி. நடராஜ், அங்குள்ள தனியார் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வருகிறார். தீபாவளிக்கு மறுநாள் கடந்த 21 ஆம் தேதி வீட்டில் கோமதி மற்றும் அவரின் இளைய மகன் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது, திடீரென அத்துமீறி உள்ளே நுழைந்த இருவர், கோமதியை அவரின் மகனின் கண் முன்னே கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடிதாக கூறப்பட்டது.

இதில், கழுத்து மற்றும் கைப்பகுதியில் பலத்த காயமடைந்த கோமதி, ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்துள்ளார். சத்தம் கேட்டு அருகில் இருந்த உறவினர்கள் ஓடி வந்து மயங்கி கிடந்தவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து வந்த சிதம்பரம் டிஎஸ்பி பிரதீப், நேரில் விசாரணை மேற்கொண்டார்.

அப்போது, கோமதி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியது யார்? ஏதேனும் முன்விரோதம் காரணமாக கொலை முயற்சி நடைபெற்றதா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டார். உயிர்க்கு ஆபத்தான நிலையில் அவசர கிசிச்சை பிரிவில் இருந்த கோமதியிடம் விசாரணை நடத்த முடியாமல் போனது.

இருந்த போதும், இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. விசாரணையில், சம்பவத்தின் போது வெளியாட்கள் யாரும் வந்து செல்லவில்லை என்பதை போலீசார் உறுதி செய்தனர்.

பின்னர், போலீசாரின் சந்தேக பார்வை, கோமதியுடன் இருந்த அவரின் மகன் மீது திரும்பியது. தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்தியதில் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியானது. நடராஜ் – கோமதியின் இளைய மகன் நன்றாக படித்து வந்துள்ளார் இவர், தேர்வில் 80 முதல் 90 சதவீத மதிப்பெண் எடுத்துள்ளார்.

இருந்த போதும் இது பத்தாது… மேலும் நன்றாக படிக்க வேண்டும் என தாயார் கோமதி அழுத்தம் கொடுத்து வந்தது தெரியவந்தது. எப்போது பார்த்தாலும் படி… படி... என தாயார் தொடர்ந்து நச்சரித்ததால் அவர் மீது மாணவர் கடும் கோபம் கொண்டுள்ளார். தீபாவளிக்கு மறுநாளும் வழக்கம் போல் அதே பல்லவியை படித்துள்ளார். அப்போது, தாயாரை பார்த்து மகன் முறைத்ததால் அவரை அடித்துள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த சிறுவன், தூங்கிக்கொண்டிருந்த தனது தாயை தாக்கியுள்ளார். படி என்று கூறினால், தன்னையே எதிர்து அடிப்பாயா எனக் கூறி பதிலுக்கு தாயும் மகனை தாக்கியுள்ளார். அப்போது, திடீரென பேப்பர் கட் செய்வதற்காக வைத்திருந்த கத்திரிக்கோலை எடுத்து தனது தாயை குத்தியுள்ளார். அப்படியும் ஆத்திரம் தீராமல் கழுத்து மற்றும் கையில் மாறி மாறி குத்தியது விசாரணையில் தெரியவந்தது.

இந்த நிலையில், மருத்துவமனையில் இயல்பு நிலைக்கு திரும்பிய கோமதி அனைத்தும் உண்மை தான் என கூறியுள்ளார். இருந்த போதும், பெற்ற மகன் ஆத்திரத்தில் ஏதோ செய்துவிட்டான் என்பதால், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என போலீசாரிடம் கூறியுள்ளார். ஆனால், சிறுவனின் தந்தை நடராஜ் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்ந்து படி… படி… என அழுத்தம் கொடுத்ததால் 14 வயது சிறுவன் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே, அவருக்கு உளவியல் சிகிச்சை அளிக்க பெற்றோர் முடிவு செய்துள்ளனர். நன்றாக படிக்க கூறி அழுத்தம் கொடுத்த தாயார் மீது, பெற்ற மகனே கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் சிதம்பரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

news18

 


Post a Comment

0 Comments