
காலைப் பொழுது மெல்ல புலர்ந்து, தென்காற்று ஜாதிமல்லியின் நறுமணத்தை அள்ளிவந்து மைதானத்தில் பரப்பியது.
மைதானத்திலுள் கிரிக்கட் விளையாடியவர்கள் வேர்க்க விறுவிறுக்க மெதுவாகக் கலைந்து போகலாயினர்.
செம்மெரூன் சேலையணிந்த பெண்ணொருத்தி அதிகாலையில் 'ஜோக்கின்' முடித்துவிட்டு மின்தூணொன்றுக்கருகில் நின்று சற்று இளைப்பாறலானாள்.
பக்கவாட்டுப் பார்வையில் ஒரு மென்மையான புன்னகை அவளிடத்தில் மின்னியது; ஏதோ ஒரு இரகசியத்தைச் சொல்லத் தயாராக இருப்பது போல!
அவள் மல்லிகா; அவளது கண்களில் ஒரு கதை மறைந்திருந்தது. அவள் அணிந்திருந்த சேலையின் பொற்கோலங்கள், காலை மஞ்சள் வெய்யில்பட்டு மின்னின.
அவள் தன் முடியில் சூடியிருந்த ஜாதிமல்லி, காற்றில் அசைந்து, அவளைச் சுற்றி ஒரு மென்மையான மந்திர வாசனை வீசியது.
மல்லிகா இங்கே அடிக்கடி வருவாள்; அதனால் இந்த மைதானம் அவளுக்கு எப்போதும் தஞ்சம். அம்மாவின் கண்டிப்பும், தங்கையின் குறும்புத்தனமும், நகரத்து வாழ்க்கையின் சலிப்பும் அவளை ஒவ்வொரு நாளும் இந்த அமைதியான இடத்தை நாடி வரச்செய்தது. ஆனாலும் இன்று, அவளது புன்னகையில் ஒரு புதிய ஒளி தெரிந்தது.
அருகேயிருந்த வேப்ப மரத்தடியில் அமர்ந்திருந்த சிறுவன் மல்லிகாவைக் கவனித்தான். அவனுக்கு பத்து வயதிருக்கலாம். அவனது கையில் ஒரு நோட்டுப் புத்தகமும், பேனாவும் இருந்தன.
மைதானத்துக்கு வருபவர்களைப் பார்த்து, ரசித்து அவர்களைப் பற்றி கற்பனையாகக் கதைகளை உருவாக்கி எழுதுவது அவனின் அன்றாட வழக்கமாக இருந்தது.
மல்லிகாவின் புன்னகை அவனைத் தனது கதைக்குள் கருவாக ஈர்க்க வைத்தது.
"இந்த அக்காவுக்கு என்ன சந்தோஷம் இன்றைக்கு?" அவன் மனதில் எழுந்த கேள்வி; மெல்ல எழுந்து அவனை மல்லிகாவை நோக்கி நடக்க வைத்தது!
"அக்கா, இன்னிக்கு உங்க சிரிப்பு வித்தியாசமா இருக்கு. ஏதாவது மகிழ்ச்சியா இருக்கீங்களா?" அவன் கேட்டான்! அவனது கண்களில் மின்னிய ஆர்வம்; அவனது அப்பாவித்தனமான கேள்வி அவளை மென்மையாகச் சிரிக்க வைத்தது!
"நேற்றைக்கு ஒரு நல்ல சமாசாரம் எனக்குக் கிடைத்தது. அதான் இந்தச் சிரிப்பு" அவளது குரலில் இனிமை வெளிப்பட்டது.
"என்ன சமாசாரம், அக்கா? சொல்லுங்க!" சிறுவன் ஆர்வமாகக் கேட்டான்.
மல்லிகா ஒரு நொடி தயங்கினாள். பிறகு, தூணில் சாய்ந்தபடி இடமாகப் பேசலானாள்.
"எனக்கு வேலை கிடைச்சிருக்கு, இங்கதான்; DSOவுக்கு பக்கத்துல எக்கடமிக் சிட்டீ இருக்கே; அங்க ஒரு கல்லூரீல, ஒரு பேராசிரியையாக. இனி நான் கல்லூரிப் பசங்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பேன்."
சிறுவனின் முகம் மலர்ந்தது.
"அடடே...சூப்பர் அக்கா! நீங்க புரொபஷரா? அப்போ நானும் நானும் படிச்சு முடிச்சி உங்க கல்லூரிக்கே வருவேன்."
மல்லிகாவுக்கு சிரிப்பு வந்துவிட்டது!
"கட்டாயம் படித்து முடித்து வா! அதுசரி கையில நோட்டும், பேனாவும் எதுக்கு?"
"கவிதை எழுத!" அவன் விடுக்கின்ற பதில் தந்தான்!
"உன்னை மாதிரி ஒரு பையன் என் வகுப்புல இருந்தா, நான் நன்றாகக் கவிதை எழுத வைப்பேன்." சிறுவன் வெட்கப்பட்டு தலை குனிந்தான்.
"நான் எழுதுறது எல்லாம் சும்மா கிறுக்கல், அக்கா."
"இல்லை... உன்னால் முடியும் தம்பி...!" மல்லிகா சிறுவனை அருகில் அழைத்தாள்.
"உன்னோட கிறுக்கல் ஒரு நாள் பெரிய கவிதையா மலரும்... உனக்கு ஒரு கனவு இருக்கு. அது எனக்குத் தெரியும்...அதை நீ விடாம பிடிச்சுக்கோ."
அந்த நொடியில், மல்லிகாவின் செம்மெரூன் சேலையில் பொற்கோலங்கள் வெளிச்சத்தில் மின்னின.
அவளது புன்னகையில், ஒரு புதிய தொடக்கத்தின் நம்பிக்கையும், சிறுவனின் கனவுக்கு விதை போட்ட மகிழ்ச்சியும் கலந்திருந்தன.
ஜாதிமல்லியின் நறுமணம் காற்றில் மிதந்து, இன்றைய காலைப் பொழுதை இன்னும் மறக்க முடியாததாக மாற்றியது.
அப்போது, சர்ரென்ற மெல்லிய சத்தம் வந்தது. அதனோடு ஒரு இனம் புரியாத நாற்றம் மைதானமெங்கும் பரவியது!
மைதானத்தின் புல்லுக்கு நீர் பாய்ச்சுகின்ற தொழிலாளி, நீர்க் குழாயைத் திறந்து விட்டு விட்டான். இனிமேல் இங்கு நிற்க முடியாது. மல்லிகா சிறுவனைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு, அங்கிருந்த் நகர்ந்தாள்.
சிறுவன் தன் நோட்டைத் திறந்து, "செம்மெரூன் சேலையில் ஒரு கனவு..." என்று தனது கவிதைக்கு தலைப்பிட்டுக் கொண்டான்.
அந்த விடிகாலை, ஒரு புன்னகையும் ஒரு மெளனக் கனவும் சந்தித்து, புதிய கவிதை ஒன்றை உருவாக்க வைத்தது!
(யாவும் கற்பனை)
செம்மைத்துளியான்.

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments