Ticker

6/recent/ticker-posts

த.வெ.க. தலைவர் விஜய் மீது வழக்குப் பதிவு!


தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி, பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக த.வெ.க. தலைவர் விஜய் வியாசர்பாடி அம்பேத்கர் கலைக்கல்லூரியில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் நேற்று (30.03.2026) வேட்புமனுத் தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து அவர் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். இந்த பிரச்சாரத்தை முடித்துவிட்டு திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினை எதிர்த்து வி.எஸ்.பாபு போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் விஜய் பிரச்சாரம் செய்தார்.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்த பிறகு அவர் மேற்கொண்ட தேர்தல் பரப்புரையின் போது, அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக எண்ணிக்கையிலான ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தியதாகப் புகார் எழுந்தது. 

அதாவது 5 ஒலிபெருக்கிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், சுமார் 30 ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தியதாகவும், பிரச்சாரத்தின் போது பொதுப் பாதையைப் பயன்படுத்துதல், ஆம்புலன்ஸ் செல்லும் பாதையை மறைத்தல் உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி தேர்தல் நிலை கண்காணிப்புக் குழு அதிகாரி புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் விஜய் உள்ளிட்ட 500 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் பெரவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

nakkheeran


 


Post a Comment

0 Comments