
ஐபிஎல் தொடரின் 23 வது போட்டி (ஏப்ரல் 15) பெங்களூருவின் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில், ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மற்றும் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற ஆர்சிபி அணி கேப்டன் ரஜத் பட்டிதார், பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
சொதப்பிய லக்னோ அணி
வழக்கம்போல் தொடக்க வீரர்களாக மிட்செல் மார்ஷ் மற்றும் எய்டன் மார்க்ரம் களம் இறங்கினர். இருவரும் நல்ல பார்ட்னர்ஷிப்பை கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எய்டன் மார்க்ரம் 12 ரன்களில் அட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதையத்து நிகோலஸ் பூரான் 1, அப்துல் சமாத் 0 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கடுமையாக தடுமாறியது. பவர் ப்ளேவில் வெறும் 35 ரன்களை மட்டுமே அடித்தனர்.
ரஷிக் சலாம் அசத்தல் பந்து வீச்சு
முக்கிய வீரர்கள் ஆட்டமிழந்த நிலையில், ஆயூஷ் பதோனி களத்தில் நின்று ரன்களை சேர்த்தார். ஆனால் அவரும் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து முகுல் செளதிரி 39 ரன்கள் எடுத்தார். இதன் காரணமாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 146 ரன்களை எடுத்து ஆல் அவுட் ஆனது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சார்பில் அதிகபட்சமாக ரஷிக் சலாம் தர் 4 விக்கெட்களையும் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். இதையத்து குர்ணால் பாண்டியா 2 விக்கெட், ஜோஷ் ஹேசல்வுட் 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இம்பேக்ட் வீரராக விராட் கோலி
இதனைத் தொடர்ந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 147 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. விராட் கோலி இம்பேக்ட் வீரராக களமிறங்கினார். அவருடன் பில் சால்ட் வழக்கம்போல் வந்தார். இவர்களும் நல்ல தொடக்கத்தை கொடுப்பார்கள் என நினைத்த நிலையில், பில் சால்ட் 7 ரன்னில் ஆட்டமிழந்தார். அவர் பிரின்ஸ் யாதவ் பந்தில் போல்ட் ஆனார். இதையடுத்து களம் வந்த தேவ்தத் படிக்கல்10, ரஜத் பட்டிதார் 27, ஜிதேஷ் சர்மா, 23 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
ஆர்சிபி அணி வெற்றி
இம்பேட் வீரராக வந்த விராட் கோலி அதிரடியாக விளையாடி 49 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 1 ரன்னில் அரைசதம் தவறவிட்டார். இதன் பின்னர் ரோமோரியோ சேப்பார்ட் மற்றும் டிம் டேவிட் களம் வந்து போட்டியை முடித்து வைத்தனர். ஆர்சிபி அணி மொத்தமாக 5 விக்கெட்களை இழந்து இலக்கை அடைந்தது. 15. 1 ஓவரில் 149 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றனர். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக பிரின்ஸ் யாதவ் 3 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார், அவேஷ் கான் 2 விக்கெட்களை கைப்பற்றினார்.
ரிஷப் பண்ட் காயம்
ரிஷப் பண்ட் எய்டன் மார்க்ரம் ஆட்டமிழந்தபின் களம் வந்தார். ஆனால் ஜோஷ் ஹேசல்வுட் வீச பந்தில் அவருக்கு இடது கையின் முட்டி பகுதியில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக பாதியிலேயே வெளியேறினார். பின்னர் கடைசி நேரத்தில்தான் களத்திற்கு வந்தார். ஆனால் அவரால் ரன்களை ஏதும் எடுக்க முடியவில்லை. 6 பந்துகளில் வெறும் 1 ரன் மட்டுமே எடுத்தார். இரண்டாவது இன்னிங்ஸில் அதாவது ஆர்சிபி அணி பேட்டிங் செய்கையில் ரிஷப் பண்ட் களத்திற்கு வரவில்லை. அவருக்கு பதிலாக நிகோலஸ் பூரான் லக்னோ அணியை வழிநடத்தினார்.
புள்ளிப்பட்டியலில் ஆர்சிபி முதல் இடம்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளது. 5 போட்டிகளில் விளையாடி உள்ள ஆரிசிபி அணி 4ல் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் உள்ளது. நெட் ரன் ரேட் +1.503 ஆக உள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் அதே 7 வது இடத்தில் உள்ளது. அந்த அணிக்கு இப்போட்டியுடன் சேர்த்து மூன்றாவது தோல்வியாகும். எல்எஸ்ஜி அணி 4 புள்ளிகளுடன் உள்ளது. நெட் ரன் ரேட் -0.804 ஆக உள்ளது. இது லக்னோ அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. இதன் காரணமாக வரும் போட்டிகளில் தொடர் வெற்றிகளை பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
ஆர்சிபி அணியின் அடுத்த போட்டி
ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அடுத்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இப்போட்டி ஏப்ரல் 18 ஆம் தேதி சனிக்கிழமை டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் அடுத்த போட்டி
ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி அடுத்த போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இப்போட்டி ஏப்ரல் 19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முலன்பூரின் நியூ சண்டிகர் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
zeenews

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com






0 Comments