சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஸ்டீபன் ஃபிளமிங் விலகுவதாக அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் சிஎஸ்கே உடனான ஸ்டீபன் ஃபிளமிங்கின் 18 ஆண்டுகள் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.

ஃபிளெமிங், ஐபிஎல் தொடங்கப்பட்ட ஆண்டான 2008-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வீரராகச் சேர்ந்து, 2009 முதல் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார். ஃபிளெமிங்கின் தலைமையில், சிஎஸ்கே 5 ஐபிஎல் கோப்பைகளையும், 2 சாம்பியன்ஸ் லீக் இருபது20 தொடர்களையும் வென்றுள்ளது. இந்த அணி சாதனை அளவாக 12 முறை பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றதுடன், 10 ஐபிஎல் இறுதிப் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளது.

கடைசியாக சிஎஸ்கே அணி 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக சிஎஸ்கேவின் தோல்விகள் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. பிளே ஆஃப் செல்ல முடியாமல் அணி தடுமாறி வந்தது. இந்நிலையில் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஃபிளமிங் விலகி உள்ளார்.

சிஎஸ்கே வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின் படி, ஃபிளெமிங்கிற்கும் சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்திற்கும் இடையே நடைபெற்ற தொடர்ச்சியான, வெளிப்படையான மற்றும் நேர்மையான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, மரியாதையுடனும் நன்றியுடனும் இந்த முடிவு எட்டப்பட்டது என்று சிஎஸ்கே அறிவித்துள்ளது. சூப்பர் கிங்ஸ் அணியும் ஸ்டீபன் ஃபிளெமிங்கும் பரஸ்பரம் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

news18