சின்ன வயதில் ஒருமுறை எங்கள் பாட்டி வீட்டுக்கு போயிருக்கிறேன். பெரிய மாமா, வீட்டுக்கு பின்புறம் சுவரில் கொழுவி இருந்த முகம் பார்க்கும் கண்ணாடியை, விரைந்து வந்து கொண்டோடின சில குரங்குகள் . அப்புறம் ஒரு மரத்தில் கவனமாய் வைத்துக்கொண்டு அவை முகம் பார்த்தன. பின், கண்ணாடியின் பின்புறத்தை சுரண்டின. அப்படிச் சுரண்டி சுரண்டி ரசம் அழிந்து போக, கண்ணாடி தம் முகங்கள் காட்டாத துயரில் தூக்கி வீசின. விழுந்து உடைந்த கண்ணாடியை மாமாவும் நானும் பார்த்துக்கொண்டிருந்தோம்.
குரங்குகள் அப்படித்தான். அந்த கிராமத்தின் பள்ளிக்கூடத்தில் பிள்ளைகள் காலைக் கூட்டத்தில் ஒருநாள் நின்றிருந்தார்கள். முடிந்து போய் பார்த்தால், பிள்ளைகள் கொண்டு வந்திருந்த உணவுப்பெட்டிகளை எல்லாம் கொண்டு போய் தின்று, வெறும் பெட்டிகளை வீசின அவை நம்மை நோக்கி.. மூர்க்கத்தனத்தின் உச்சி வெயிலடித்தது காலைப்பொழுதிலும்..
அக்கா அந்த கிராமத்து வீட்டில் இருந்தாள் ஒரு போது. கூரை இடையால் உள்புகுந்த ஒரு குரங்கு, குழந்தைகளுக்கு வாங்கி வைத்திருந்த பெறுமதியான பால்மா பேணியைக் கொண்டோட, அக்கா அன்றே கத்திக்கத்தி அந்த வீட்டுக் கூரைக்கு சீலிங் அடிக்க முடிவெடுத்தாள்... அப்புறம் குரங்குகள் வரவில்லை தான்.. அக்கா இல்லாத வீட்டுக்கு யார் வந்தென்ன? வராது விட்டால் என்ன..? வரண்டு கிடக்கிறது இப்போதெல்லாம் வாசமாயிருந்த அந்த வீடு.
உடல்நலக் குறைவாய் இருந்த ஒரு உறவினரைப் பார்க்கப் போயிருந்தேன் ஒரு ஊருக்கு கடந்த மாதம். உறவினர் மகள்.. பேரழகி அவள். அழுதுகொண்டே காட்டினாள் குரங்கு கொண்டுபோய் ஓரிரு நாள் வைத்திருந்து விட்டு சார்ஜ் தீர்ந்ததும், வீசி விட்ட ஃபோன் அவளது கையில்.. ஐயோ.. screen நொறுங்கிக் கிடந்தது. கணவர் வெளிநாட்டில் இருந்து அனுப்பியதாம்.. அழும்போதும் கூட அவள் முகம் சிவந்து அழகாய்த்தான் இருந்தது.
பிட்டு, ரொட்டி, இடியப்பம் எல்லாம் சுவைபட செய்து விற்கும் அந்த எங்கள் உறவுப் பெண்ணை வெளியில் எங்கேயும் காணமுடியாது. வெளியே வந்துவிட்டால் குரங்குகள் உள்நுழைந்து விடுமாம்.. குரங்குகளால் அவள் இல்லமே அவளுக்கான சிறையாகி இருந்தது. ஜாலங்கள் தூவி மனுஷர் வாழ்வில் குரங்கே விளையாடுகிறதே.. ஐயையோ..
மனிதாபிமானம் குறைவாயிருந்த எங்கள் சாச்சாவிடம் ஒரு துவக்கு இருந்தது.. ஒரு குரங்கை சுட்டு, தொங்க வைத்திருந்தார் முற்றத்தில். மரங்களை நாசப்படுத்தும் கோபம் அவற்றோடு அவருக்கு. மற்ற குரங்குகள் கொஞ்ச நாட்கள் வாராதிருந்தன. அப்புறம் அவர் கொடூரத்தோடு அவையும் வாழப் பழகின, கொரோனாவுடன் நாம் வாழப் பழகியிருப்பதுபோல..
எங்கள் பரிதாபங்கள் மிகைத்த சாச்சி சொன்னாள் ஒரு தடவை. "பெண்களோடு குரங்குகளுக்கு பயம் வருவதில்லை.அவை நம்மைப் பயங்காட்டும்." ஒரு நாள் கொழுத்த அழகான அந்த எங்கள் சாச்சி, ஒரு குரங்கிடம் எதிர்பாராமல் குசினிக்குள் மாட்டிக் கொண்டாள்.. கொஞ்சம் காயங்களோடு சிவந்திருந்தது அவள் கழுத்துப் பகுதி. சாச்சா அவளுக்குத் தந்த காயங்களைவிட இது ஒன்றும் பெரிதில்லை என்று நான் மனசுக்குள் நினைத்தேன். இப்போதோ அவர்கள் எல்லோரும் இறந்து விட்டார்கள். அப்புறம், நான் குரங்குகளைக் கண்டால் சாச்சி சொல்லித்தந்தது போல பயப்படாத மாதிரி நடிப்பேன்.. சாச்சி எப்போதும் மனசுக்குள் சிரிக்கிறாள்.. பெருகிக் கிடக்கிறது அவளுக்கான பேரன்பு..
இப்போதெல்லாம் குரங்கை விரட்ட குரங்கே போல முகமூடிகள் விற்கிறார்கள் கடைகளில். அதை போட்டுக்கொண்டு, குரங்கை விரட்டுவது கொஞ்சம் வெற்றிகரமான முறை என்கிறார்கள். அவர்களது முகமூடி சிலபேருக்கு அவர்கள் முகம் போலவே பொருந்தியும் இருக்கிறது...
இலங்கை எழுத்தாளர் புன்யாகாந்தி விஜேநாயக்க எழுதிய 'குரங்குகள்' கதையை ஒருமுறை நான் மொழிபெயர்த்தேன் 'ஜீவநதி'க்காக. சுதந்திரத்தை, அன்பை, காப்பை, அரவணைப்பை தரத் தவறிய ஒரு சூழலில் இருந்து ஒரு இளம்பிக்குவாக வரும் ஒரு சிறுவன், அந்த ஆலயச் சூழலில் வந்து விளையாடும் குரங்குகளிடம் தாய்மையை தேடுகிறான்.. பெரிய பிக்குகள் அதையும் கூட தடுக்கிறார்கள். அவன் அதற்கப்புறம் குரங்குகளை விட்டு விலகி விடுகிறான், பால்யத்தின் எல்லா அழகொளிரும் அம்சங்களையும் விட்டு நீங்கிய அவனை மொழிபெயர்ப்பில் அழுதழுதே கொண்டுவந்தேன் நான்..
மனிதனை மிகைத்த பரிமாணம் அவை பெறக்கூடும். குரங்கும் ஒரு மறைவிடம் பார்த்துக்கொண்டு போய்விடுமாறு மனிதனை வேண்டக்கூடும். பேய்ப்பயம் சூழ்கிறது எனக்குள்...


0 Comments