Ticker

6/recent/ticker-posts

தொடர்ந்து பெய்யும் மழையினால் பாதிப்புக்கள் அதிகமாகிக் கொண்டு போகின்றது


இது மழைக்காலம்.  மழையினால் பூமிக்கு நன்மை . ஆனால் அதையும் தாண்டி தொடர்ந்து பெய்யும் மழையினால்  பாதிப்புக்கள் அதிகமாகிக் கொண்டு போகிறது என அன்றாடத் தரவுகள் கூறுகின்றன.  மக்கள் அவதிப் படும் நிலையை இம் மழை ஏற்படுத்தி விட்டது.

பல இடங்களிலும் பயிர்கள் நாசம். இருப்பிடங்கள் பாதிப்பு என தினமும் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. இதனால் ஒரு பகுதியோ, சில மக்களோ பாதிப்படைந்தார்கள் என்பதை விட முழு நாடும் அவஸ்தைப் படுகிறது என்பதே உண்மை. இயற்கையின் சீற்றம் ஏதோ ஒரு விதத்தில் எல்லோரையும் உரசிப் பார்க்கிறது
.
ஓயாத மழையே நீ ஓய்வெடுக்க மாட்டாயா எனக் கேட்டுக் கொண்டிருக்கிறான் மனிதன்.


இயற்கை சீற்றத்தோடு சேர்ந்து செயற்கை நிகழ்வுகளும் மனிதர்களை சீண்டிக் கொண்டே தான் இருக்கின்றன. மனிதனின் சக்தியையும் மீறிய செயல்கள் அன்றாடம் நடப்பதை தடுக்கும் நிலையைத் தாண்டி நாளை பற்றிய கேள்விக்குறிகள் அதிகமாகி ஒருவித மனஉளைச்சலில்  தத்தளிக்கிறான் மனிதன்.

இயற்கையும் செயற்கையும் சேர்ந்தே மனிதனைத் தாக்குகின்றதோ என எண்ணத் தோன்றுகிறது. மனிதனும் மற்ற உயிரினங்களும் இவ்வுலகில் பிறந்தவை என்பதை விட அவை அனைத்தும் இறைவனால் படைக்கப் பட்டவை என்பதே உண்மை. பிரபஞ்சமே படைக்கப் பட்ட ஒன்று தானே. அதைப் படைத்தவனே பரிபாலனமும் செய்கிறான். அவன் ஆட்சியாளர்களை ஆள்பவன். அரசர்களுக் கெல்லாம் அரசன்.



அவனின்றி அணுவும் அசையாது. இது எல்லா மதங்களும் ஏற்றுக் கொண்டாலும் ஓரிறை விசுவாசிகளான நாம் இந்த விதி மீது அதிகமாகவே நம்பிக்கை கொண்டுள்ளோம். எனவே, இவ்வாறான இக்கட்டான சூழ்நிலைகளில் எமது நம்பிக்கை மீது நாம் கைவைத்துப் பார்ப்பதும் நம் கடமை. 

எனக்கு ஒரு திருமறை வசனம் ஞாபகம் வருகிறது. 

"நபியே நீர் கூறுவீராக(மனிதனே) உனக்கு கிடைக்கும் எந்த  நன்மையும் அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கிறது . இன்னும் உனக்குத் ஏதும் தீங்கு ஏற்பட்டால் அது உன்னால் தான் வந்தது."
(அல்குர்ஆன் 4:79)

இவ் வசனம் ஒவ்வொரு மனிதனது வாழ்வின் பிறப்பு முதல் இறப்பு வரை அவனுக்கான ஒரு எச்சரிக்கை என்பதை உணரமுடிகிறது.

உலகில் அன்பின் இலக்கணம் தாய் தான். இது மனிதனுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும்  பொருந்தும் . மனிதரிலும்  விலங்கிலும் தாய்மை எனும் அற்புதத்தில் அதற்கு ஈடுஇணை இல்லை. அந்த தாயை விட பல மடங்கு எம்மைப் படைத்தவன் எம் மீது அன்புள்ளவன். அவன் இரக்கமுள்ளவன் , அன்பாளன், அருளாளன் என்பதே அவனது பண்புகளில் முதன்மையானது. 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ் அன்பை நூறு பாகங்களாகப் பங்கிட்டான். அவற்றில் தொண்ணூற்று ஒன்பது பாகங்களைத் தன்னிடமே வைத்துக்கொண்டான். (மீதியிருக்கும்) ஒன்றையே பூமியில் இறக்கினான். இந்த ஒரு பங்கினால்தான் படைப்பினங்கள் ஒன்றன் மீதொன்று பாசம் காட்டுகின்றன. எந்த அளவுக் கென்றால், மிதித்துவிடுவோமா என்ற அச்சத்தால் பிராணி தனது குட்டியை விட்டுக் கால்குளம்பைத் தூக்கிக் கொள்கிறது."
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்- ஆதாரம் -முஸ்லிம் 53:10  

இறையன்பின் தொன்னூற்றி ஒன்பது பாகங்களும் அவனிடமே இருக்கின்றன.இறைவன் இரக்கமுள்ளவன் என்பதற்கு இந்த நபிமொழி போதுமானது.

இன்னும் இறைவன் மனிதனுடன் எந்தளவு நெருக்கமாக இருக்கிறான் என்பதற்கு 

"நாம் அவனுக்கு பிடரி நரம்பை விட மிக நெருக்கமாக இருக்கிறோம்."
(அல்குர்ஆன்:50:16)

எனும் திருமறை வசனம் சாட்சி கூறுகிறது.இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது, மனிதனுக்கு வரும் சோதனைகள் அவனே தேடிக் கொண்டதே அன்றி வேறில்லை . 

இன்று உலகில் எங்கு பார்த்தாலும் பிரச்சினைகள் . தீவிரவாதம், இனவாதம், யுத்தங்கள் அனைத்தையும் அப்படியே ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டது கோவிட் -19 எனும் தொற்று நோய். ஏழை பணக்காரன்  என்ற பாகுபாடின்றி அத்தனை பேரையும் அதிர வைத்தது அது.  உலகையே ஆட்டம் காண வைத்தது . சீனாவில் முதலில் இது இனங்காணப்பட்ட போது அது எமது நாட்டுக்கு வந்து எங்கள் வீட்டுக் கதவுகளையும் தட்டும் என்று கனவிலும் எவரும் நினைத்திருக்க மாட்டார்கள் . எமக்கு சம்பந்தமில்லாத எங்கோ ஒரு நாட்டில் நடக்கும் ஒரு ஆச்சரியமாகவே ஆரம்பத்தில் பார்த்தோம். 

உலகை ஆட்டிப் படைத்த வல்லரசுகளும் அவர்களது ஆயுதங்களும் ஆட்டம்கண்டு ஸ்தம்பித்துப் போயின. ஒரு வைரஸ் கிருமி வல்லரசுகளை அச்சுறுத்தியது. அணு ஆயுதங்களையும் அடித்துப் போட்டது. உலகின் மூலை முடுக்கில் வாழ்ந்த ஒவ்வொரு மனிதனையும் தேடிச் சென்றது அதனால் ஏற்பட்ட மரண பயம். படைப்பினங்களை மட்டுமே நம்பி வாழ்ந்த மனிதனுக்கு படைத்தவனை அடிக்கடி ஞாபகப் படுத்தியது.குரோதங்களோடு வாழ்ந்தவர்களுக்கு குடும்ப உறவுகளின் பெறுமதியை உணர்த்தியது. தீய குணங்களை கொஞ்சமாவது மறந்து வாழும் ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. 

ஒன்றுபட்டு ஒற்றுமையாக வாழவேண்டும் என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் உருவானது. இருப்பவர் இல்லாதார் என்ற பேதமின்றி எல்லோரையும் மரண பயம் ஒன்று சேர்த்தது. கொடுத்துதவும் கரங்கள் கொரோனா பரவிய வேகத்தைவிட அதிக வேகத்தில் இயங்கின. இருப்பவர் இல்லாதவர் என்ற பேதமின்றி பயத்தோடு பசியும் பஞ்சமும் கூடவே குடியிருந்தது. 

சமூக இடைவெளி , தனிமைப் படுத்தல், ஊரும் நாடும் முடக்கப் படுதல் என இதுவரை எவருமே அனுபவித்திராத சோதனைகள் இரண்டு வருடங்களாகத் தொடர்ந்தன. தற்பாதுகாப்பும் தடுப்பூசியும் பழைய நிலையிலிருந்து மெதுவாக மாறி இன்று முடக்க நிலை தளர்த்தப் பட்டிருக்கிறது. 

ஆனாலும் அன்றாட வாழ்க்கை முறைமட்டும் திரும்பவே இல்லை. அரச ஊழியர்கள் தவிர ஏனைய தொழில்களும் வியாபாரங்களும் இனி பழைய படி மீண்டும் திரும்புமா என்ற சந்தேகம் எல்லோர் மனதிலும் இல்லாமலில்லை. நாளை....? என்ற கேள்விக் குறி தொடர்ந்து கொண்டே போகிறது. 

இந்த நிலையில் தான் தொடர் மழையின் பாதிப்பு அடிக்கு மேல் அடியாக அத்துமீறிப் பெய்து கொண்டிருக்கிறது. 

மழைக்காக ஏங்குவதும் மழையில் நனைந்து விளையாடுவதும் ஒரு அலாதியான சந்தோசம் தான். அதே மழை வரமாவதும் சாபமாவதும் காலநிலை மாற்றத்தின் இருபக்கங்கள்.தேவைக்கேற்ப அவ்வப்போது பெய்யும் மழையும் கோடைகாலத்தில் பெய்யும் மழையும் ஒரு வரம் தான். அதே மழை அடை மழையாக தொடர்ந்து பெய்தால் அது சோதனையாக மாறி விடுகிறது.

"மனித சமூகம் தங்கள் கரங்களால் எதை சம்பாதிக்கிறார்களோ அதன் காரணமாகவே தரையிலும்  (நிலத்திலும்) கடலிலும் அராஜகமும், குழப்பமும் தோன்றுகின்றன."
(அல்குர்ஆன் ;30:41)

இத் திருமறை வசனம் மனிதர்களை சிந்திக்கத் தூண்டும் ஒரு வசனம். 

இறைவனின் அருட்கொடைகளில்  உயிரினங்களின் அத்தியாவசியத் தேவைகளில்  மிக முக்கியமான ஒன்றே நீர்.நீரின்றி எந்த ஒரு  உயிரினமும் வாழ இயலாது. அந்த நீர் எனும் இறைவனின் அருட்கொடை தேவைக்கு அதிகமாகும் போது  அது வெள்ளப் பெருக்காவும் வேறு அனர்த்தங்களுக்கான காரணியாகவும் மாறி விடுகிறது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் 
நாம் அவனிடம் கையேந்துவதைத் தவிர அதைத் தடுக்க எந்த ஒரு மனித சக்தியும் ஆற்றல் பெறுவதில்லை . இறை சோதனைகள் சமூகத்தில் பாவங்கள் அதிகரிக்கும் போது அல்லது பாவங்கள் மலிந்து அவை சகஜமாக நடக்கும் போது தான் இறைவன் புறத்திலிருந்து இறக்கப் படும் என்பது வரலாறு கூறும் உண்மை. 

நீர் , நிலம், ஆகாயம், காற்று, நெருப்பு என்ற ஐம் பூதங்களையும் அவன்  கொஞ்சம் அசைத்தாலே உலகம் சுக்குநூறாகிப் போகும். இயற்கை அனர்த்தங்கள், தொற்று நோய்கள் , பஞ்சம், அநீதியான ஆட்சி, வன்முறைகள் போன்று இன்னும்  பல சோதனைகளையும் கூறிக் கொண்டே போகலாம்.

தற்போது தொடர்ச்சியாக நடக்கும் பல நிகழ்வுகளும்  இவ்வாறான சோதனைகள் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனாலும் அவற்றைப் புரிந்து திருந்தி வாழும் நிலையிலும் மனிதனில்லை. உலகமயப் பட்ட சிந்தனைகளாலும் , தீய குணங்களாலும் மனிதன் தான் இறைவனிடமிருந்து இடைவெளியை உருவாக்கிக் கொண்டான். ஆனாலும் , இறைவன் அவனது திருமறையில், 

"நீங்கள் எங்கே இருந்தாலும் அவன் உங்களுடன் இருக்கிறான்."
(அல்குர்ஆன்; 57:4)

என்றும்,

"நிச்சயமாக உங்கள் இறைவன் ( உங்கள் மீது) மிக்க இரக்கமுடையவனாகவும் கிருபையுள்ளவனாகவும் இருக்கிறான்."
(அல்குர்ஆன் ; 16:07)

என்றும்,

சர்வ வல்லமை மிக்கவன் தன் படைப்புக்களில் ஒன்றான மனிதன் மீது அளவுகடந்த அன்பும் கருணையும் கொண்டுள்ளான் என்பதையும் மனிதர்கள் மீதான அவனது நெருக்கத்தையும் அழகாகக் கூறிக் காட்டுகிறான். ஆனால் மனிதன் மட்டும் அவனது செயல்பாடுகளால் இறை நேசத்தில் இருந்தும்  இறைவனுக்கு நன்றி செலுத்துவதில் இருந்தும்  தூரமாகிப் போகிறான். 

















Post a Comment

0 Comments