
சமூக ஊடகப் பயனர்கள் தங்களது புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவுகளைக் கொண்டு கார்ட்டூன் வடிவத்திற்கு மாற்றி பதிவிட்டு வருகின்றனர். இது சமூக ஊடகங்களில் 'ஜிப்லி ஆர்ட்' என்ற பெயரில் இப்போது பிரபல்யம் அடைந்துள்ளது.
1985ம் ஆண்டு ஹயாவ் மியாசாகி, இசாவோ தகாஹாட்டா என்பவர்களால் ஜப்பான் நாட்டில் 'ஸ்டூடியோ ஜிப்லி' என்ற பெயரில் ஒரு அனிமேஷன் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்டது.
ஹயாவ் மியாசாகி ஜப்பானின் அனிமேஷன் துறையின் தந்தை என்று அழைக்கப்படுபவராவார்.
2003ம் ஆண்டு ஸ்பிரிட்டட் அவே திரைப்படத்திற்காக சிறந்த அனிமேஷன் அகாடமி விருது மற்றும் கோல்டன் குளோப் விருதையும் வென்றுள்ள இவர், 2015ம் ஆண்டில் வாழ்நாள் சாதனைக்கான அகாடமி விருதை வென்றார்.
1990களில் ஜப்பானில் நான் இருந்தபோது, இந்த ஜிப்லி முறையிலான கார்டூன் கதைப்புத்தகங்களை ஜப்பானியர் விரும்பிப் பார்ப்பதைக் கவனித்துள்ளேன். அக்காலை, ஜப்பான் மக்களின் இயல்பான தினசரி வாழ்க்கை முறையை மிகவும் நுணுக்கமாக, கையால் வரையப்பட்ட ஜிப்லி படங்கள் காட்டியமையே அதற்குக் காரணமாகும்.

மேலும், இவ்வாறான படங்களில் பயன்படுத்தப்பட்ட வண்ணங்கள் கதையின் உணர்வை வெளிப்படுத்தவும், கதாப்பாத்திரங்களின் உணர்ச்சிகளை பிரதிபலிக்கவும் உதவியதால் பெருவாரியான ஜப்பானியர் இந்த ஜிப்லி படங்களை விரும்பலாயினர்.
ஜிப்லி முறையானது அனிமேஷன் திரைப்பட துறையில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
தொடர்ந்து வந்த காலங்களில் பல அனிமேஷன் திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் கலைஞர்கள் ஜிப்லி முறையை தங்களது படைப்புகளில் பயன்படுத்தலாயினர். திரைப் படங்கள், தொலைக்காட்சி விளம்பரங்களும், குறும்படங்களும் ஜிப்லி முறையில் உருவாக்கப்படலாயின.
தற்போது இந்த ஜிப்லி முறை திடீரென பிரபலமானதற்குக் காரணம் Chat GPT தான்!
இதன் மூலம் புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்து அதனை கார்டூன், அனிமேஷன் பாணிகளில் மாற்றியமைக்கலாம். இதன் செயல்பாட்டிலுள்ள எளிமையும், பயனர்களுக்கு வசதியான அணுகல்முறையும் இது விரைவாக பிரபலமாவதற்கான காரணங்களாகும்.

இதனால் சாட் ஜிபிடியின் பணிச்சுமை அதிகமாகியுள்ளதாக அறிய முடிகின்றது.
செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்படும் இந்தப்படைப்புகள், உண்மையாக கலைஞர்களின் படைப்புகளுக்கு போட்டியாக இருக்கும் என்று ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சாம் ஆல்ட்மன் கருதுகிறார்.
இந்நிலையில் 'ஸ்டூடியோ ஜிப்லி' நிறுவனத்தின் நிறுவனரான ஹயாவ் மியாசாகியின் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலானது.
அதில், "மனிதர்களின் உண்மையான உணர்வுகளை செயற்கை நுண்ணறிவால் புரிந்துகொள்ள முடியாது. இந்த தொழில்நுட்பத்தை என்னுடைய பணியில் ஒருபோதும் நான் பயன்படுத்த விரும்பமாட்டேன். அது மனித வாழ்க்கைக்கே அவமானமானது" என்று கூறியுள்ளார்.
அவர் உருவாக்கிய பல அனிமேஷன் திரைப்படங்கள் உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றன.
அவரது திரைப்படங்களில் இயற்கையின் முக்கியத்துவம், மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான உறவுகள் மற்றும் போரின் அபாயங்கள் போன்றவை கருப்பொருள்களாக அமைந்துள்ளவை குறிப்பிடத்தக்கது.
செம்மைத்துளியான்

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments