
சிலருக்கு எல்லாமே கிடைத்தாலும் வாழ்வில் அதிருப்தி கொள்கிறார்கள். எல்லாம் இருந்தும் ஏன் நமக்கு என எதுவும் இல்லை என்று நினைக்கிறது மனம். காரணம் என்ன தெரியுமா? பொதுவாக மனம் என்பது விந்தையான ஒன்று. நாம் மனதை இதயத்துடன் தொடர்பு படுத்துகிறோம்.
ஆனால் அது மூளை சம்பந்தப்பட்டது. மனம் அதிருப்தி அடைய காரணம் நம்முடைய உணர்ச்சிகள்தான். நம்முடைய வாழ்வில் அவ்வப்பொழுது நிகழும் ஏமாற்றங்கள், தோல்விகள், தடுமாற்றங்கள் போன்றவை பல எதிர்மறை எண்ணங்களை நம் மனதில் தோற்றுவிக்கிறது. இதன் விளைவாக எதிலும் திருப்தி கொள்ளாமல் மனம் அதிருப்தி அடைகிறது.
கடந்து சென்றதைப் பற்றியே நினைத்து அப்படி செய்திருக்கலாமோ, இப்படி பேசி இருக்கலாமோ, இப்படித்தான் செய்திருக்க வேண்டும் என்று பலவாறு சிந்தித்து நாம் இழந்ததைப் பற்றியே நினைத்து வருந்தி கொண்டிருப்போம். இது என்ன வாழ்க்கை? நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று புலம்பிக் கொண்டிருப்போம். இதனால் நம்மிடம் இருக்கும் நிறைய அருமையான விஷயங்களை புரிந்து கொள்ளாமல் தவற விடுகிறோம்.
எப்போதுமே மனித மனம் என்பது கிடைத்ததை எண்ணி மகிழாமல் எட்டாக் கனியாக இருப்பதை நினைத்து ஏங்கும். அன்று மட்டும் இப்படி செய்திருந்தால் இன்று நான் பெரிய கோடீஸ்வரனாகி இருப்பேன் என்று எண்ண வைக்கும். இருப்பதை விட்டு பறக்க துணியும். அதனால்தான் நாம் வேண்டிப் பெற்ற ஒன்றைக் கூட புதிதாக ஒன்று வந்தவுடன் பழையதை புறக்கணிக்க செய்திடுகிறோம். மனம் என்பது ஒரு குரங்கு. அது அடுத்து என்ன, அடுத்து என்ன என்று எதிலும் திருப்தி அடையாமல் தேடிக்கொண்டே செல்லும்.
இருப்பதைக் கொண்டு மனம் நிறைவடையாமல் அதிக எதிர்பார்ப்புகளை கொண்டிருப்பதால், அந்த எதிர்பார்ப்புகள் நிறைவடையாமல் போகும்பொழுது ஏமாற்றம் மிஞ்சும். இதனால் மனம் வருந்தி அதிருப்தி அடையும். இதற்கான எளிய தீர்வு ஒன்று உண்டு. இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியுடன் வாழகற்றுக் கொள்வதும், தேவைக்கு மீறி ஆசைப்படாமல் இருப்பதும் என்று வாழப்பழகுவதுதான்.
மனம் அதிருப்திகொள்ள மற்றொரு காரணம் ஒப்பீடு செய்வது. தேவையில்லாமல் நம்மை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்ப்பதும், அதன் மூலம் அதிருப்தி கொள்வதும் வீணான செயல். நாம் நாமாக வாழ பழகவேண்டும். அடுத்தவருடன் ஒப்பிட்டு நம் மனதையும், உடலையும் கெடுத்துக்கொள்ளக்கூடாது. போதும் என்ற மனமே போன் செய்யும் மருந்து என்பார்கள். அந்த மனநிலையை அடைந்தால் தேவையற்ற அதிருப்திக்கு உள்ளாக மாட்டோம்.
திருப்தி அடையாத மனநிலை என்பது முழுவதும் தவறு என்று சொல்ல முடியாது. உதாரணத்திற்கு போதும் என்ற மனம் கொண்டால் விஞ்ஞானிகளால் புது கண்டு பிடிப்புகளை கண்டறியத்தான் முடியுமா? பெருகிவரும் நோய்களுக்கு புது மருந்துகள்தான் உருவாகுமா? வாழ்க்கை வசதிகள்தான் பெருகுமா? எனவே உலகம் தொடர்ந்து இயங்க வேண்டுமானால் திருப்தி அடைய வேண்டிய விஷயங்களுக்கு போதும் என்ற மனநிலையை அடைவதும், தேவைப்படும் விஷயத்திற்கு திருப்தி அடையாத மனநிலையை கொள்ளவும் வேண்டும்.
kalkionline

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments