Ticker

6/recent/ticker-posts

புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா-83


“ஓரினகோ” ஆற்றங்கரையிலிருந்து கால்கடுக்க நடந்துவந்த களைப்பினால், செரோக்கி விரித்துக் கொடுத்த ஜமுக்காளத்தில் தங்களையறியாமலேயே கண்ணயர்ந்துவிட்ட  அந்தக் குள்ள மனிதர்கள்  கொஞ்ச நேரத்தில் கண்விழித்துப் பார்த்தபோது,  அவர்களுக்கு முன்னால் பன்தட்டுக்களில் விதவிதமான  தின்பண்டங்கள் பரத்தியிருப்பதைக் கண்டதும்  அவர்களது நாவுகளில் ஜாலம் ஊறியது.   நீண்டநேரம் வயிற்றுப் பசியோடிருந்த தால், அவற்றை எடுத்து உண்பதில் அவர்களது கரங்கள் போட்டிபோட்டுக் கொண்டன.
 
தீயில் பதனிடப்பட்டிருந்த மான் மாமிசமும், மரவள்ளிக் கிழங்கும் நொடிப்பொழுதில் பன்தட்டுக்களைக் காலி செய்யவைத்துவிட்டபிறகுதான் நகரத்து உணவு முறைக்கும் வனவாசிகளின் தின்பண்டங்களுக்குமுள்ள வித்தியாசத்தை அவர்கள் உணர்ந்தனர்.
 
சிரட்டைகளில் மூலிகைக்கஞ்சை ஏந்திவந்த செரோக்கியின் தாய், பன்தட்டுக்கள் இவ்வளவு கெதியில் காலியாகியிருப்பதைக் கண்டதும்  திகைத்துப் போய் விட்டாள்!

தான் கொண்டுவந்த மூலிகைக் கஞ்சை அந்த மனிதர்களின் கைகளில் கொடுத்தபோது, அவர்களிடத்தில் காணப்பட்ட புன்னகை கலந்த நன்றிப் பெருக்கை அவள் வெகுவாக ரசித்தாள்!

புட்டகத்தை மாத்திரமே மறைத்திருந்த அங்கவஸ்தியுடனும், புழுதி படிந்த மார்க்கச்சையுடனும் அங்கிருந்து நகர்ந்து கொண்டிருந்த  அவளை நகரத்து நாகரிக மனிதர்கள்  மூலிகைக் கஞ்சைப் பருகியாவாறு  புதினமாகப் பார்த்தார்கள்!
 
ரெங்க்மாவைத் தூங்கவைத்துவிட்டு குகைக்குள் நுழைந்த செரோக்கி, விருந்தினர்கள் தங்குவதற்காக தான் வாழ்ந்த குகையைச்  சுத்தப்படுத்தி ஒழுங்குபடுத்தினான்.

போதிய ஜமுக்காளம் இல்லாமையால்  ரெங்க்மாவின் ஜகைவரை சென்று, நடந்த நிகழ்வுகளை  அவர்களிடமும் கூறிவிட்டு, அங்கிருந்து சில ஜமுக்காலங்களை  எடுத்து வந்தான்.
 
விபரமறிந்து பதறிப்போன அவர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், செரோக்கியைப் பின்தொடர்ந்து  வரலாயினர்!

உலகிலேயே அதிக ஜனத்தொகை கொண்ட நாடொன்றிலிருந்து வந்தவர்கள் இந்த மனிதர்கள், சில பல  ஆய்வுகளை மேற்கொள்வதற்காகத் அங்கிருந்து  உலகம் முழுவதற்கும் அனுப்பப்பட்ட குழுக்களில் “இல்ஹாடா குய்மாடா கிரண்டே” தீவை நாடிவந்த குழுவினராவர்! 

அமேசான் வனத்துக்குள் வந்து சேர்ந்த இவர்கள் வழிதவறி இங்கு வந்ததாலேயே ஆற்று நீரில் அடித்துச் செல்லப்படவிருந்த ரெங்க்மா உயிர் காப்பாற்றப்பெற்றாள்!
 
இவர்கள் தேடிவந்த  இடம் உலகிலேயே அதிக விஷம் கொண்ட பாம்பினங்கள் மட்டுமே வாழும்  தீவுப்பகுதியாகும். வந்தவர்களுள் பாம்பு பற்றிய நிபுணத்துவம் பெற்ற ஒருவரும் அடங்குவதால், எந்த விஷப்பாம்பாயினும் தம்மால் அவற்றை அடக்கிக்கொள்ள முடியும் என்று அவர்கள்  திடநம்பிகை கொண்டிருந்தனர்.


தன்னாதிக்கத்தை நிலை நிறுத்திக்கொள்ளத் துடித்துக் கொண்டிருக்கும் உலக நாடுகள் சில முன்னிலைக்கு வந்துவிடவேண்டுமென்ற நப்பாசையில் பூமியில்  சிலபல திருகுதாளங்களைச் செய்து வருகின்றமை கவலை தருவதாகும்!
 
சூரியன் மறைந்து புரோகோனிஷ் பகுதி மெதுமெதுவாக  இருளைக் கவ்விக்கொள்ள முற்பட்டது! ரெங்க்மாவின் ஜாகையிலிருந்து எடுத்துவந்த ஜமுக்காலங்களை குகைக்குள் கொண்டு சென்ற செரோக்கி அவற்றை  அழகாக விரித்து, இலவம் பஞ்சடைக்கப்பட்ட தலையணைகளை  வரிசையாக வைத்துவிட்டுத்  தன்மனைக்குள் நுழைந்தான்!

தன் தாயாரால் படைக்கப்பட்ட உணவுப்பதார்த்தங்களை உண்டு சுவைத்திருந்த  விருந்தினர்களை ஆதரவோடு குகைக்குள் அழைத்து வந்து, அவர்கள் இரவைக் கழிக்கப்போகும் இடத்தைச் சுட்டிக் காட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்!
 
அந்தக் குகைக்குள் நுழைந்த மூவரினதும்   மூளைகள் ஆய்வுப்பாதை நோக்கி மெல்ல நகரலானது!  
(தொடரும்)

Post a Comment

0 Comments