Ticker

6/recent/ticker-posts

Pen Club -ஆற்றலுள்ள பெண்களின் அமைப்பு-அறிமுகம் - 18



ஹூமதா ஏ கப்பார்.
கேகாலை மாவட்டம், மாவனல்ல, உயன்வத்தயை பிறப்பிடமாக கொண்ட இவர் அப்துல் கப்பார்- முன்வரா பேகம் தம்பதிகளின் புதல்வி ஆவார். 

மாவனல்ல, உய‌‌ன்வத்த நூராணியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் க.பொ.தர சா/தர யும் மாவனல்ல பத்ரியா தேசிய பாடசாலையின் வர்த்தகப் பிரிவு பழைய மாணவியும் ஆவார். 

சிறு வயது முதலே வாசிப்பிலும் எழுதுவதிலும் அதிக ஆர்வம் கொண்ட இவர் தேடிப் படிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.வார நாளிதழ்களிலும் வேறு பத்திரிகைகளிலும் வரும் சிறுவர் பகுதி பக்கத்திலுள்ள ஆக்கங்களை சேகரித்து அவற்றை ஒட்டி, வாசித்தல் சிறு வயதின் அவரது மிகச்சிறந்த பொழுதுபோக்காக இருந்தது. மேலும் எழுத்துலக பயணத்தில் அன்றிலிருந்து இன்றுவரை அவரது பெற்றோரின் பங்கு அளப்பரியது என்கிறார். வாசிப்பு மற்றும் எழுதும் ஆர்வம் அவர்களிடமிருந்து தான் தனக்கு கிடைக்க பெற்றதாக நெகிழ்வுடன் பகிர்கிறார் ஹுமதா. 
பாடசாலைக் காலத்திலிருந்தே வானொலிக்கும், பத்திரிகைகளுக்கும் ஆக்கங்களை அனுப்புவதில் ஆர்வமாக இருந்ததோடு மேடைப் பேச்சு களிலும், மாணவர் மன்றங்களிலும் தனது திறமைகளை சளைக்காமல் காட்டி வந்தார். 

பாடசாலைக் காலங்களில் தமிழ், ஆங்கில மொழித் தினங்களில் பங்கு பற்றி அகில இலங்கை மட்டம் வரை பரிசுகள் பெற்று பெற்றோர்க்கும் பாடசாலைக்கும் பெருமை ஈட்டிக் கொடுத்துள்ளார்.

பின்னர் வானொலி மற்றும் பத்திரிகைகளில் வெளி வரும் போட்டிகளிலும் ஆர்வமாகக் கலந்து கொண்டு வெற்றிகளை பெற்றுக் கொண்டுள்ளார்.நவமணி பத்திரிகையில் ரமலான் காலங்களில் நடாத்தப்பட்ட "ரமழான் பரிசு மழை "மற்றும் ரமழான் கால கட்டுரை போட்டியிலும் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

பாடசாலைக் காலத்தின் பின்னர் தன்னைப் பட்டை தீட்டிக் கொள்ள போதுமான களங்கள் கிடைக்கவில்லை எனக் குறிப்பிடும் அவர் ஆனாலும் எங்கு களம் கிடைத்தாலும் அதில் தனது திறமைகளை வெளிக் காட்டத் தவறியதில்லை எனக் குறிப்பிடும் அவர் தனது கிராமத்தில் உள்ள இளைஞர்கள் மூலம் ஒழுங்கு செய்யப்பட்ட திறந்த பிரிவு கட்டுரைப் போட்டியில் பல ஆளுமை மிக்க மூத்தவர்களுடன் போட்டி இட்டு தான் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டமை வாழ்வின் மிகப் பொன்னான தருணம் என்று நினைவு கூறுகிறார். 

திருமணத்தின் பின் சிறிது காலம் எழுத்துலகில் சஞ்சரிக்க முடியாமல் இருந்தாலும் பின்னர் சமூக வலைத்தளங்களில் தனது திறமைகளை காட்டி பல சான்றிதழ்களை பெற்றுள்ளார். 

ஹுமதா ஏ கப்பார் எனும் பெயரில் சமூக வலைத்தளங்களிலும் ,இலங்கையின் தேசிய நாளிதழ்களிலும்,மற்றும் மின் சஞ்சிகைகள்  மற்றும் வானொலி முஸ்லிம் சேவையிலும் எழுதி வரும் இவர் துணிந்தெழு சஞ்சிகையில் "எங்கே கோளாறு" எனும் தலைப்பில் தொடர் ஆக்கமொன்றை எழுதி வருகிறார். 

எழுத்து துறையில் தடம் பதிக்க நூல் ஒன்றை வெளியிடுவது மிக நீண்ட காலக் கனவு என்று குறிப்பிடும் அவர் இதுவரை காலமும் அதற்கு எந்த வாய்ப்புகளும் கிட்டவில்லை என்று கவலையுடன் பகிர்ந்து கொள்கிறார்.மிக விரைவில் எப்படியாவது நூல் ஒன்றை வெளியிட அவா கொண்டுள்ளதாகவும் குறிப்பிடுகிறார். 

சமூகம் மற்றும் ஆண் பெண் பொதுவான பிரச்சினைகள் பற்றி அதிகம் எழுதும் ஆர்வம் உள்ளவராக இருக்கின்றார் .

உளவியல் டிப்ளமா கற்கையை முடித்துள்ள இவர் உளவியல் சார் பதிவுகளையும் எழுதுவார். 

"எழுதுகோல்" எனும் முகநூல் பக்கத்தையும் "ag production " எனும் YouTube சேனல் ஒன்றையும் மிக அண்மைக்காலமாக நடத்தி வருகிறார். 

1000 க‌விஞ‌ர்க‌ள் 1000 கவிதைகள் எனும் பெரு நூல் தொகுப்பிலும் இவரது கவிதை ஒன்று வெளி வந்துள்ளமை அவரது எழுத்து துறைக்கு கிடைத்த அங்கீகாரம் ஆகும். 

இதுவரை காலமும் தனது எழுத்துப் பணிக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து தூக்கி விட்ட அத்தனை நெஞ்சங்களையும் எப்போதும் பிரார்த்தனைகளில் சேர்த்துக் கொள்வதாக நன்றியுடன் கூறிக் கொண்டு அவரது எழுத்து துறையில் இன்னும் பல சாதனைகள் படைக்க எல்லோரினதும் பிரார்த்தனைகள் கண்டிப்பாக கிடைக்க வேண்டும் என்கிறார் இளம் எழுத்தாளர் ஹுமதா ஏ கப்பார். 
தகவல்:
சம்மாந்துறை மஷூறா.

Post a Comment

3 Comments

  1. சிறப்பான ஆற்றல்களுடன் மிளிரும் சகோதரி ஹுமாதா ஏ கப்பார் எழுத்துத்துறையில் வெற்றித்தடம் பதித்து சாதிக்க நல்வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும்!

    ReplyDelete
  2. எழுத்துலகில் மென் மேலும் சிறந்து விளங்க வாழ்த்துக்கள் சகோதரி..

    ஷர்ஜிலா

    ReplyDelete
  3. சகோதரி ஹூமதா ஏ கப்பாரின் எதிர்கால வெற்றி இப்போதே அவரில் மிளிர்கிறது. நிச்சயமாக அவர் எதிர்காலத்தில் இன்னும் ஜொலிக்க இறைவன் அருள் செய்வான்

    ReplyDelete