பிறந்ததும் முதல் ஆகாரமே பெருமானாரின் திருக்கரங்களால் ஊட்டப்படும் பாக்கியம் பெற்ற அன்னை அஸ்மாவின் திருக்குழந்தை...
வல்ல நாயனின் அன்புக்கு முழு உரிமை பெற்ற உத்தம நபிﷺ அவர்களின் திருவாயால் உண்மையாளர் என அழைக்கப்பட்டவர்கள் அபூபக்கர் ஸித்தீக் ரழியல்லாஹு அன்ஹு...
இத்தகு பாக்கியம் பெற்றவரின் மூத்த மகள்தான் போராளிப் பெண் அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா...
ஒரு பெண்ணை போராளி என்று சொல்லப்படுகிறதே!
பெண் என்ன அவ்வளவு வீரம் மிக்கவளா என்று ஒரு சந்தேகக் கீற்று சிலரின் உள்ளத்தில் தோன்றலாம்...
வலிமையான உள்ளமும், போராடும் குணமும் கொண்ட இவர்களது வரலாற்றை படித்தால் இவர்களுக்கு போராளி பெண் என்பது முற்றிலும் பொருந்தும் என்று யாவரும் ஏற்றுக் கொள்வார்கள்...
ஹிஜ்ரத்தின் போது அன்னை அஸ்மாவின் பங்களிப்புகளையும், சேவைகளையும் நாம் ஏற்கனவே இத் தொடரில் பதிவிடப்பட்ட பதிவுகளில் படித்தோம்...
நிறை மாத கர்ப்பிணியாக இருந்த அன்னை அஸ்மாவும் புனித பயணமான ஹிஜ்ரத்தை மேற்கொண்டார்கள்...
மதீனாவை சென்றடைந்த பொழுது, பிரசவ வேதனையை அடைந்து ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்கள்...
இந்தக் குழந்தையின் பிறப்பு, முஸ்லிம்கள் அனைவரையும் மகிழ்வித்தது...
மதீனாவின் தெருக்களிலே தக்பீர் முழக்கத்துடன் இக்குழந்தையை தூக்கி ஊர்வலம் சென்று கொண்டாடினார்கள் மதீனா வாசிகள்...
இந்த அளவு அவர்களை மகிழ்விக்க காரணம் தான் என்ன???
மக்காவிலிருந்து மதினாவிற்கு ஹிஜ்ரத் செய்த மக்காவாசிகளில் ஒருவரும் அங்கு சென்ற பின் பிள்ளை பேரு பெறவில்லை... எவருக்கும் பிள்ளை தங்கவில்லை...
அந் நிலையில் யூதர்கள் இவர்களுக்கு எதிராக சூனியம் செய்ததால் தான் இந்த மோசமான நிலை என்று ஒரு வதந்தி மக்களிடையே பரவியது...
ஒருவேளை இந்த வதந்தி உண்மையாக இருக்குமோ! என்று அஞ்சி அவர்களின் மனங்கள் சோர்ந்து இருக்கும் வேளையில் தான் இக்குழந்தை பிறந்தது...
அவர்களது கவலைகளை உடைத்தெறிந்த இக்குழந்தையை கொண்டாடாமல் இருப்பார்களா என்ன!!!
பிறந்தவுடன் அண்ணலார் ﷺ அவர்களிடம் கொடுக்கப்பட்ட குழந்தையை முதன்முதலாக தன் திருக்கரங்களால் ஏந்தி, அவர்களது உமிழ் நீரைக் கொண்டு ஈத்தங் கனியை அக்குழந்தைக்கு கொடுத்தார்கள்...
தாய்ப்பாலுக்கு முன் பெருமானாரின் புனித உமிழ்நீர் உடலில் சென்று கலக்கும் பெரும் பேறு கிடைத்தது அன்னை அஸ்மாவின் இக் குழந்தைக்கு...
பின்பு அண்ணலார்ﷺ அவர்கள் அக்குழந்தைக்கு அப்துல்லாஹ் என்ற பெயரையும் வைத்து துஆவும் செய்தார்கள்...
குழந்தையின் பாட்டனரான அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் குழந்தையின் வலது காதில் பாங்கும் இடது காதில் இகாமத்தும் கூறுமாறு சொன்னார்கள்...
எனவே! பிள்ளை பிறந்தவுடன் பாங்கும் இகாமத்தும் சொல்வது பாரம்பரிய சடங்குகளில் ஒன்றல்ல! மாறாக, அண்ணலார்ﷺ அவர்கள் தன் திருவாயால் ஏவிய ஒரு விடயம் என்பதை எவராலும் மறுக்க முடியாது...
பிற்காலத்தில் அப்துல்லாஹ் என்று பெருமானாரால் நாமம் சூட்டப்பட்ட இந்தக் குழந்தை வளர்ந்து யஸீத் என்பவருக்கு பின் கலீபா பதவியை தாங்கிய மாவீரர் அப்துல்லாஹ் பின் ஸுபைராக வரலாற்றில் தடம் பதித்தது...
(தொடரும்)
0 Comments