Ticker

6/recent/ticker-posts

ரோஹித் சர்மாவை பெரும்பாலும் இம்பேக்ட் வீரராக பயன்படுத்துவது ஏன்? – மஹேலா ஜெயவர்த்தனே விளக்கம்


ஐ.பி.எல் கிரிக்கெட் வரலாற்றில் ஜாம்பவான் அணிகளில் ஒன்றான மும்பை இந்தியன்ஸ் அணியானது ஐந்து சாம்பியன் பட்டத்தை வென்று அதிக கோப்பைகளை வென்ற ஐபிஎல் அணியாக சிஎஸ்கே அணியுடன் சமநிலையில் உள்ளது. ரோகித் சர்மா தலைமையில் அந்த அணி 5 கோப்பைகளை வென்றிருந்தாலும் எதிர்கால அணியை பலப்படுத்தும் நோக்கில் ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு ஹார்டிக் பாண்டியா தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அவரது தலைமையின் கீழ் கடந்த ஆண்டு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை அணி படுமோசமான தோல்விகளை சந்தித்திருந்தது.

இதன் காரணமாக எதிர்வரும் 2026 ஐபிஎல் தொடரில் பலமான கம்பேக் கொடுக்கும் நோக்கில் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியானது தயாராகி வருகிறது. இந்த 2026 ஐபிஎல் தொடரானது மார்ச் 28-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் வேளையில் இந்த தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்கள் தற்போது மும்பையில் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த தொடரிலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மா பெரும்பாலும் இம்பேக்ட் பிளேயராகவே விளையாட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் ஏற்கனவே கடந்த ஆண்டு அவர் பெரும்பாலான போட்டிகளில் இம்பேக்ட் வீரராக பேட்டிங் மட்டுமே செய்து வந்தார். அதனால் இம்முறையும் அவர் இம்பேக்ட் வீரராகவே விளையாட வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ரோகித் சர்மாவை ஏன் இம்பேக்ட் வீரராக விளையாட வைக்கிறோம்? என்பது குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளரான ஜெயவர்த்தனே சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறியதாவது : ரோகித் சர்மாவை நாங்கள் கடந்த சில ஆண்டுகளாக பயன்படுத்தும் முறை குறித்து பல்வேறு கேள்விகள் நிலவி வருகின்றன. ஆனால் அப்போதெல்லாம் அவருக்கு சிறு சிறு காயங்கள் இருந்ததாலேயே ரோகித் சர்மாவுக்கு தேவையான ஓய்வு கொடுக்கவே இம்பேக்ட் வீரராக களமிறக்கினோம்.

சொல்லப்போனால் அவர் களத்தில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி அணியின் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வீரர். ஆனால் இந்த ஆண்டு நிச்சயம் என்னால் முடிந்தவரை அவரை அதிக நேரம் களத்தில் வைத்திருக்க முயற்சிப்பேன். இருப்பினும் பந்து வீச்சாளர்களை சுழற்சி முறையில் மாற்ற வேண்டுமென்றால் சில கடினமான முடிவுகளை எடுக்க நேரிடும்.

அந்தவகையில் அணியில் ஆல்ரவுண்டர்களாக இல்லாத வீரர்களுக்கு பதிலாக இம்பேக்ட் வீரரை பயன்படுத்த வேண்டிய தேவை இருக்கும். அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் சூரியகுமார் யாதவ் மற்றும் ரோகித் சர்மா ஆகியோரே ஆல்ரவுண்டர்களாக இல்லாமல் இருக்கிறார்கள். எனவே அவர்களில் ஒருவரை இம்பேக்ட் வீரருக்காக மாற்ற வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

crictamil


 


Post a Comment

0 Comments