
அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள ஜப்பானிய நிறுவனத்துக்குச் சொந்தமான நிப்பான் டைனாவேவ் காகித ஆலையில் ஏற்பட்ட பயங்கர இரசாயனத் தொட்டி வெடிப்பு, மாநிலத்தின் நவீன வரலாற்றிலேயே மிக மோசமான தொழில்துறை பேரழிவாக மாறியுள்ளது. இந்த விபத்தில் உயிருடன் யாரையும் மீட்கும் நம்பிக்கை இல்லை என அதிகாரிகள் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லாங்வியூவில் அமைந்துள்ள ஆலையில் செவ்வாய்க்கிழமை காலை நிகழ்ந்த இந்த வெடிப்பில் இதுவரை இரண்டு பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒன்பது பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. “மீட்புப் பணிகள் தற்போது உடல் மீட்பு நடவடிக்கையாக மாற்றப்பட்டுள்ளன” என கவுலிட்ஸ் மாவட்ட தீயணைப்புத் தலைவர் ஸ்காட் கோல்ட்ஸ்டீன் தெரிவித்தார்.
900,000 கேலன் கொள்ளளவு கொண்ட ‘வெள்ளைக் கரைசல்’ (White Liquor) நிரப்பப்பட்ட இரசாயனத் தொட்டிதான் வெடித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காகிதக் கூழ் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சோடியம் ஹைட்ராக்சைடு, சோடியம் சல்பைடு போன்ற ஆபத்தான இரசாயனங்கள் வெளியேறியதால், சம்பவ இடம் முழுவதும் நச்சு அச்சத்தில் மூழ்கியுள்ளது.
வெடிப்பு நிகழ்வதற்கு வெறும் 15 நிமிடங்களுக்கு முன்பே தொழிலாளர்களின் பணிமாற்றம் நடைபெற்றதால், நிர்வாக அலுவலகம், ஓய்வு அறை, செயல்பாட்டு மையம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமானோர் இருந்ததாக தெரியவந்துள்ளது.
இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
இந்த பேரழிவு சுற்றுச்சூழலையும் கடுமையாக பாதித்துள்ளது. கொலம்பியா ஆற்றில் இரசாயன மாசு பரவியதையடுத்து, ஆற்றங்கரையில் பல மீன்கள் இறந்து கிடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், லாங்வியூ நகரின் குடிநீர் பாதுகாப்பாக இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
சம்பவத்தைத் தொடர்ந்து 46 கூட்டரசு பாதுகாப்புப் படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர். வான்வழிக் கண்காணிப்பு, நச்சு நீக்க நடவடிக்கை, பாதுகாப்பு ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஆலையின் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து பல்வேறு விசாரணைகளும் தொடங்கப்பட்டுள்ளன.
nambikkai

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com






0 Comments