
முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (மே 17) அவரது X பக்கத்தில் தற்போதைய தவெக அமைச்சர்களின் பேச்சை கண்டித்து கடுமையான பதிவை ஒன்றை பதிவிட்டுள்ளார்.
ரூ.10 லட்சம் கோடி கடன்
அதில், "முற்றிலும் உண்மைக்குப் புறம்பாகவும், மாநிலத்தின் நிதி நிர்வாகம் குறித்தான சாதாரண அடிப்படைப் புரிதல் இல்லாமலும், 'பத்தரை லட்சம் கோடி எடுத்துட்டு கழுவிட்டுப் போய்ட்டாங்க' என்று போகிற போக்கில் புழுதி வாரித் தூற்றி, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தொழில்துறை அமைச்சர் அவதூறு பரப்புகிறார்" என தங்கம் தென்னரசு, அமைச்சர் கீர்த்தனாவை சாடி உள்ளார்.
மேலும், உள் நோக்கோடு திமுகவிற்கு எதிராக ஆதாரமில்லாமல் மக்களிடையே ஒரு மாய பிம்பத்தை சமூக வலைதள ஜோடனைகள் மூலம் கட்டமைக்க முயற்சிப்பதும், விஷமத்தனமானது மட்டுமல்ல; வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும் என்றும் தங்கம் தென்னரசு குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரின் முதிர்ச்சியின்மை
அதுமட்டுமின்றி, "அரசு நிர்வாகத்தில் அனுபவமின்மை காரணமாக, மக்களை ஏமாற்றிக் குழப்பும் வகையில் தமிழ்நாட்டின் நிதி நிர்வாகம் குறித்து இட்டுக்கட்டிக் கூறுவது அவரது முதிர்ச்சியின்மையைக் காட்டுகிறது" என்றும் அவர் அமைச்சர் கீர்த்தனாவை பெயர் குறிப்பிடாமல் விமர்சித்துள்ளார்.
அதேநேரத்தில் தற்போது நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள செங்கோட்டையன் மற்றும் நிதித்துறை செயலாளர் எம்.சித்திக் ஆகியோர் தொழில் துறை அமைச்சருக்கு தமிழ்நாட்டின் நிதி நிலைமை குறித்து ஆலோசனை வழங்க வேண்டும் என்றும் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
பொய்யும், புனைகதைகளும்...
இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு அவரது பதிவில் இறுதியாக, "அரசு நிர்வாகத்திலும், அமைச்சரவையிலும் பல ஆண்டுகள் அனுபவமிக்கவரான நிதி அமைச்சர் செங்கோட்டையனும், நிதித்துறை நிர்வாக நடைமுறைகளில் நேரடி அனுபவமிக்க தற்போதைய நிதித்துறை செயலாளரும், இடித்துரைத்து தொழில் துறை அமைச்சரின் கற்பனைக் குதிரைக்குக் கடிவாளம் போட்டு நிறுத்த முன்வருவார்களா? அல்லது பொய்யும், புனைகதைகளும் மிக்க இத்தகைய மலிவான பிரச்சாரங்களுக்குத் துணை போகப் போகிறார்களா?" என கேள்வி எழுப்பி உள்ளார்.
தவெக அளித்த வாக்குறுதிகள்
மகளிருக்கு மாதம் ரூ.2,500; ஆண்டுக்கு 6 கட்டணமில்லா சிலிண்டர்; மகளிருக்கு அரசுப் பேருந்துகளில் இலவச பயணம்; ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.25 லட்சம் மதிப்பிலான இலவச மருத்துவக் காப்பீடு; ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு ஒரு பவுன் தங்கம் மற்றும் தரமான பட்டுச்சேலை; தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தங்க மோதிரம், வெல்கம் கிட் உள்ளிட்ட பல்வேறு 'கவர்ச்சி' திட்டங்களை தவெக தரப்பில் வாக்குறுதிகளாக வழங்கப்பட்டன.
தமிழ்நாடு கஜானா காலியா...?
தேர்தலில் வென்று ஆட்சியமைத்து, முதலமைச்சராக பதவியேற்ற மேடையிலேயே விஜய், தனக்கு சற்று கால அவகாசம் வேண்டும் என்றும் அரசுக்கு ரூ.10 லட்சம் கோடி கடன் இருப்பதாகவும் பேசியிருந்தார். இதையே நலத்திட்டங்கள் செயல்படுத்தப்போவது எப்போது கேள்விக்கு, தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவும் பதிலாக அளித்தார். கடந்த கால திமுக அரசு, கஜானாவை காலி செய்துவிட்டதாக குற்றஞ்சாட்டியிருந்தார். அதற்கே தற்போது தங்கம் தென்னரசு கடுமையாக சாடி உள்ளார்.
ஸ்டாலின் கொடுத்த பதிலடி
விஜய் பதவியேற்பு மேடையில் ரூ.10 லட்சம் கோடி கடன் என பேசியதற்கு அன்றே, முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் பதிலடி கொடுத்திருந்தார். அதில், அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது என்றும் தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்டிலேயே தெளிவாக நாங்கள் சொல்லிட்டோம் என்றும் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
மேலும் இதுகுறித்து தங்களுக்குத் தெரியாதா? அதற்குப் பிறகுதானே நீங்கள் பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீர்கள்? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீர்கள் என முதலமைச்சர் விஜய்யை, ஸ்டாலின் கடுமையாக தாக்கி பேசியிருந்தது கவனிக்கத்தக்கது.
zeenews

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments