
மத்திய கிழக்கில் அமைதி ஏற்பட அமெரிக்கா முன்வைத்துள்ள நிபந்தனைகளுக்கு ஈரான் ஒப்புக் கொள்ளாவிட்டால், அந்நாட்டின் மீது Operation Epic Fury 2.0 என்ற பிளான் பி தாக்குதல் தொடங்கப்படும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். இதற்கு மற்றொரு முக்கிய காரணம், அமெரிக்க உளவுத்துறை அளித்த ஒரு ரிப்போர்ட். அதன்படி அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) மற்றும் பென்டகனின் தற்காலிக நிதிக் கட்டுப்பாட்டாளர் ஜூல்ஸ் ஹர்ஸ்ட் (Jules Hurst) ஆகியோர் House and Senate Appropriations panels முன்னிலையில் அண்மையில் சாட்சியமளித்தனர். அதில் ஈரானின் தற்போதைய நிலை குறித்த உளவுத் துறை தகவல்களை அவர்கள் பகிர்ந்துக் கொண்டனர்.
அப்போது, ஈரான் மீதான போருக்காக அமெரிக்காவின் செலவு ஏற்கனவே 29 பில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டதாக பென்டகன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் முதல்கட்டத் தாக்குதலில் ஈரானின் ஏவுகணை தளங்கள் சேதமடைந்ததாகக் கூறப்பட்ட நிலையில், உளவுத்துறை அறிக்கைகள் இதற்கு மாறான தகவல்களை அளித்துள்ளன. டொனால்ட் டிரம்பும், பாதுகாப்புத் துறையும் "ஈரானின் ராணுவம் முற்றிலும் நசுக்கப்பட்டுவிட்டது" என்று பொதுவெளியில் கூறிவந்த பிரச்சாரத்தை இந்த உளவு அறிக்கை தவறு என்று அம்பலப்படுத்தியுள்ளது.
மேலும் ஹார்முஸ் நீரிணையை ஒட்டியுள்ள ஈரானின் 33 முக்கிய ஏவுகணைத் தளங்களில் 30 தளங்களை ஈரான் மீண்டும் முழு செயல்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக அமெரிக்க உளவு அறிக்கை தெரிவிக்கிறது. ஈரானின் 90% நிலத்தடி ஏவுகணைச் சேமிப்பு மற்றும் ஏவுதளங்கள் தற்போதும் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ இயங்கும் நிலையில் உள்ளதாகவும் கூறியுள்ளது.
போர் தொடங்குவதற்கு முன்னிருந்த ஏவுகணை இருப்பு அப்படியே உள்ளதாகவும் நடமாடும் ஏவுகணை ஏவுதளங்களில் 70 சதவீதத்தை ஈரான் இன்னும் பத்திரமாக வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் தனது ஏவுகணைகளை நிலத்தடி சுரங்கங்கள் வழியாக நகர்த்தி, அங்கிருந்தே நேரடியாக ஏவும் அதிநவீன உத்திகளைக் கையாள்வதால், அவற்றை அழிப்பது அமெரிக்காவிற்கு கடினமாக மாறிவிட்டதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். ஈரான் தனது நாட்டின் முக்கிய மலைப்பகுதிகளுக்கு அடியிலும், பாலைவனப் பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான அடிகள் ஆழத்தில் பிரம்மாண்டமான சுரங்க network-களை அமைத்துள்ளது.
இவை வெறும் சேமிப்புக் கிடங்குகள் மட்டுமல்லாமல், ஆயுதங்களை உற்பத்தி செய்யும் இடங்கள், ஏவுகணைகளைத் தயார் செய்யும் தளங்கள் மற்றும் வீரர்கள் தங்கும் முகாம்கள் என அனைத்தும் உள்ளடங்கிய ஒரு முழுமையான ராணுவ நகரமாகவே செயல்படுகின்றன. அமெரிக்க உளவு அமைப்புகளுக்குப் பெரும் தலைவலியாக இருப்பது ஈரானின் நடமாடும் ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் நிலத்தடி ஏவுதல் உத்திகள்தான்.
ஏவுகணைகள் நிலத்தடி சுரங்கங்களுக்குள்ளேயே தண்டவாளங்கள் அல்லது பிரம்மாண்ட வாகனங்கள் மூலம் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ரகசியமாக நகர்த்தப்படுகின்றன. இதனால், அமெரிக்காவின் உளவுச் செயற்கைக்கோள்களால் ஏவுகணை தற்போது எங்கு உள்ளது என்பதைத் துல்லியமாகக் கண்காணிக்க முடிவதில்லை.
நிலத்தடி சுரங்கங்களின் கூரைப் பகுதிகள் அல்லது மலைகளின் பக்கவாட்டுப் பகுதிகளில் தானியங்கி கதவுகள் அமைக்கப்பட்டிருக்கும். இவை Blast Doors என அழைக்கப்படுகின்றன. ஏவுகணைகளை ஏவ வேண்டிய நேரத்தில் மட்டும் இந்தக் கதவுகள் திறந்து, ஏவுகணை வெளியேறி அடுத்த சில நிமிடங்களில் விண்ணில் பாயும். ஏவுகணை விண்ணில் ஏவப்பட்ட அடுத்த கணமே அந்தக் கதவுகள் மூடப்பட்டுவிடும்.

அமெரிக்காவிடம் மலைகளையும், கான்கிரீட் அரண்களையும் ஊடுருவிச் சென்று அழிக்கும் அதிநவீன பங்கர்-பஸ்டர் குண்டுகள் உள்ளன. ஆனால், ஈரானின் சில முக்கிய ஏவுகணை தளங்கள் 500 மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில், திடமான பாறைகளுக்கு அடியில் அமைந்துள்ளன. இவ்வளவு ஆழத்தில் உள்ள இலக்குகளை வான்வழித் தாக்குதல் மூலம் முழுமையாக அழிப்பது தற்போதைய தொழில்நுட்பத்தில் மிகவும் கடினம். ஈரான் பல போலி ஏவுதளங்களையும், சுரங்க நுழைவாயில்களையும் உருவாக்கி வைத்துள்ளது. இதனால், அமெரிக்கா தனது விலையுயர்ந்த ஏவுகணைகளைத் தவறான இலக்குகள் மீது வீசி வீணடிக்கும் அபாயம் உள்ளது.
அமெரிக்கா ஒரு நுழைவாயிலை அல்லது ஏவுதளத்தைக் கண்டுபிடித்துத் தாக்குவதற்குள், ஈரான் அதே சுரங்கப் பாதையின் மற்றொரு முனையைப் பயன்படுத்தி அமெரிக்கப் போர்க்கப்பல்கள் அல்லது பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதலைத் தொடுத்துவிடும். அமெரிக்காவிடம் எவ்வளவுதான் நவீன விண்வெளி உளவுத் தொழில்நுட்பமும், சக்திவாய்ந்த குண்டுகளும் இருந்தாலும், ஈரானின் இந்த "மறைந்திருந்து தாக்கும்" உத்தி, அமெரிக்காவின் வான்வழி ஆதிக்கத்தை பெருமளவில் கட்டுப்படுத்தி, போரை நீண்ட நாட்களுக்கு இழுத்தடிக்கும் ஒரு ஆயுதமாக மாறியுள்ளது.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments