Ticker

6/recent/ticker-posts

Ad Code



தந்திரத்தால் நரியை மிஞ்சிய மனிதன்!


மனிதன் ஒருவன் காட்டுவழிப் பாதை ஒன்றில் தனது கைத்தடியோடு நடந்து சென்றுகொண்டிருந்தபோது, தூரத்தில் மரமொன்று தீப்பற்றி எரிவதைப் பார்த்தான். எவனோ ஒருவன் மரத்துக்குத் தீ மூட்டிவிட்டான் போலும் என்று நினைத்துக் கொண்டு, மரத்தைக் கடந்து நடக்கலானான்.

அப்போது பாம்பொன்று சீறுவதைப் போன்ற சத்தம் அவனுக்குக் கேட்டது. உடனே திரும்பி வந்து எரியும் மரத்தைப் பார்த்தான்.  மரத்தின் கிளைகளுக்கிடையில் மலைப்பாம்பொன்று  தீப்பிடித்து எரியும் தருவாயில்  இருப்பதைக் கண்டான்.

 மனிதனைக் கண்ட பாம்பு  தன்னைக் காப்பாற்றும்படி  அவனைப் பார்த்துக் கெஞ்சியது. மலைப்பாம்பின் பரிதாப நிலை கண்டு மனமிரங்கிய மனிதன்  தன் கையிலிருந்த நீண்ட தடியை மரக்கிளைகளுக்கிடைனயில் நீட்டினான்.  உடனே அப்பாம்பு தடியை நன்கு சுற்றிக் கொண்டது.

தடியை மனிதன் தரையிலிறக்கியதும்,  அப்பாம்பு பாய்ந்து அவனின் கழுத்தைச் சுற்றிக் கொண்டது. நன்றிகெட்ட பாம்பு மனிதனின் கழுத்தைச் சுற்றி இறுக்கிப் பிடித்தவாறே,

“இந்த மரத்திற்குத் தீ வைத்தவன் மனிதனே. அதனால் மனிதனாகிய உன்னை நான் விழுங்கப்போகிறேன்” என்று கூறி, அவனை விழுங்க முயன்றது.

 பாம்பின் நன்றிகெட்ட செயலை ஆட்சேபித்த மனிதன்,

“ஆபத்தில் உதவியவனுக்கு தீங்கிழைப்பது தகுமா?” என வாதாடினான்.

ஆனால் மனிதனின் வாதத்தை பாம்பு ஏற்கவில்லை.  இறுதியாக,

“என்னை நீ விழுங்க முன்னர் யாரிடமாவது நியாயம் கேட்போம்” என்று பாம்பிடம் மனிதன் கெஞ்சினான். பாம்பும் அதற்கு உடன்பட்டது.

தன்னைச் சுற்றிக் கொண்ட பாம்போடு அந்த மனிதன் நடக்கத் கொடங்கினான்.

சிறிது தூரத்தில் ஒரு கழுதை வந்துகொண்டிருப்பதை அவன் பார்த்தான்.

கழுதையை நெருங்கிய மனிதன் தன்னுடைய வாதத்தைக் கூறினான். பாம்பும் அதன் நியாயத்தைக் கூறியது. இருவரின் வாதங்களையும் கேட்ட கழுதை பாம்பைப் பார்த்து,

“மனிதன் ஈவிரக்கமற்றவன். காலையிலிருந்து மாலை வரை நான் பொதி சுமந்து கஷ்டப்படுகிறேன். பதிலுக்கு அவன் எனக்களிப்பது செம்மையான அடியும், கால் வயிற்றுக் கஞ்சியுமே. நான் சாகும் வரை அவன் என்னைப் பொதி சுமக்க வைப்பான் என்பது உறுதி. நன்றிகெட்ட இவனை நீ தாராளமாக விழுங்கலாம்.” ஏன்று தீர்ப்புக் கூறியது.

கழுதையின் கூற்றைக் கேட்ட மனிதன்,

“இந்தக் கழுதையின் கருத்தை மட்டும் கொண்டு மனிதனைப் பற்றித் தவறான முடிவுக்கு வந்துவிடாதே. இந்நொருவரிடமும் சென்று நாம் இது பற்றிய நியாயத்தைக் கேட்போம்.” என்று பாம்பிடம் கூறினான்.

பாம்பும் அதற்குச் சம்மதித்தது.

தன்னைச் சுற்றிய பாம்புடன் மனிதன் மீண்டும் நடந்தான். சிறிது நேரத்தில் ஒரு குதிரை தன்னெதிரே வருவதைக் கண்டான். அது அருகில் வந்ததும் தன்னுடைய வாதத்தையும், பாம்பின் வாதத்தையும் கூறி நியாயம் கேட்டான்.  குதிரை மனிதனைப் பார்த்து பரிதாபமுற்று,

“மனிதன் உன் உயிரைக் காப்பாற்றினான். ஆதனால் நீ அவனை விழுங்குவது நியாயமற்றது.” என்று கூறியது.

ஆனால், பாம்பு குதிரையின் தீர்ப்பை ஏற்க மறுத்துவிட்டது. அது மனிதனை நோக்கி,

“மேலும் ஒரே ஒருவரிடம் நாம் தீர்ப்புக் கேட்போம். அதுவே, இறுதித் தீர்ப்பாக இருக்கட்டும்.” ஏன்று கூறியது.  அதற்கிணங்கிய மனிதன், தன்னைச் சுற்றிய பாம்போடு  தொடர்ந்து நடக்கலானான்.

சற்றுத் தூரம் நடக்கவே, பாறையொன்றின் மீது அமர்ந்திருந்த நரியொன்றைக் கண்ட மனிதன், அதனை நோக்கி நடந்தான்.

மனிதனைக் கண்டதும் நரி அச்சத்தோடு, எழுந்து நின்று ஓடத் தயாரானது.

பின்னர் அது சற்றுக் கூர்ந்து கவனித்தபோது, நடந்து வந்து கொண்டிருந்த மனிதனைச் சுற்றி  மலைப்பாம்பொன்று  இருப்பதைக் கண்டது.

மனிதனுக்கும் பாம்புக்குமிடையில்  ஏதோ தகராறு இருப்பதை நரி புரிந்து கொண்டது. அதனால் அது அங்கிருந்து ஓடாமல், மனிதன் தன்னருகே வரும் வரைக்கும்  காத்திருந்தது.

நரியை அணுகிய மனிதன்,  தன்னுடைய வாதத்தையும் பாம்பின் வாதத்தையும்  கூறி நியாயம் கேட்டபோது, நரி சற்று யோசித்தது.

‘இந்த மனிதனை பாம்பிடமிருந்து காப்பாற்றுவது அவ்வளவு சுலபமான காரியமல்ல. ஆனால் இவனைக் காப்பாற்றுவதால் நமக்கென்ன இலாபம்? மனிதன் கோழி வளர்ப்பதுண்டு. இந்த மனிதனும் கோழி வைத்திருக்கலாம்.  எனவே, இவனைக் காப்பாற்றுவதற்காக ஐந்து கோழிகளைக் கேட்டுப்பார்ப்போம். அதற்கு அவன் உடன் பட்டால்  எப்படியாவது அவனைக் காப்பாற்றிவிடுவோம்’ என்றவாறாக நரி எண்ணிக்கொண்டு,  பாம்பு கவனியாதிருந்தபோது, தன் முன்னங்காலை உயர்த்தி ஐந்து விரல்களையும் காட்டி ‘ஐந்து கோழிகள் தனக்குப் பரிசாகத் தரவேண்டும்’ என்று மனிதனுக்குச் சைகை காட்டியது.

நரியின் சைகை மனிதனுக்குப் புரியவில்லை. தன்னை இந்த இக்கட்டிலிருந்து  காப்பாற்றுவதாக  நரி சைகை மூலம் தெரிவிக்கின்றது என்று நினைத்த மனிதன், ‘சரி’ என்றவாறாகத் தலையை அசைத்தான்.

மனிதன் தலையை அசைத்ததும், ஐந்து கோழிகளையும் அப்போதே பெற்றுக் கொண்டது போன்ற உவகையில் நரி மனிதனைக் காப்பாற்ற எண்ணமிட்டது.

தனக்கு எதுவுமே விளங்காததுபோன்று  பாசாங்கு செய்த நரி,  பாம்பையும் மனிதனையும் பார்த்து,

“நீங்கள் கூறுவதொன்றும் எனக்குப் புரியவில்லை. நிகழ்ந்த சம்பவத்தை நான் நேரில் ஒருமுறை பார்க்க வேண்டும். அப்போதுதான் என்னால் சரியான தீர்ப்பைக் கூற முடியும்.  இதோ பெரிய மரமொன்றிருக்கின்றது. முதலில் பாம்பு இந்த மரத்தின்மேல் ஏறி, அதன் கிளைகளில் முன்பிருந்தது போல் இருக்கட்டும்.” என்று கூறியது.

பாம்பும் அவ்வாறே செய்தது.

இப்போது நரி மனிதனை நோக்கி,  “மரத்திற்குத் தீ வை” என்று கூறியது.

மனிதனும் அவ்வாறே செய்தான்.  பின்னர் தன் கையிலிருந்த  நீண்ட தடியால்  பாம்பைக் காப்பாற்ற முனைந்தான் மனிதன்.

நரி அவனைப் பார்த்து, “முட்டாள் மனிதனே! என்ன காரியம் செய்யப்பார்க்கின்றாய்? பாம்பு எரிந்து சாகட்டும்!” ஏன்று கூறியது.

மனிதன் தன் முட்டாள் தனத்தை எண்ணி வெட்கமடைந்தான். தன்னைக் காப்பாற்றியதற்காக நரிக்கு நன்றி தெரிவித்தான்!

நரி அவனை நோக்கி, “இப்போது நீ எனக்குத் தருவதாகக் கூறிய ஐந்து கோழிகளையும் கொண்டு வா” என்றது.

நரியின் வார்த்தையைக் கேட்ட மனிதன் ஆச்சரியடைந்தான்.

பின்னர் நரி தன் சைகை மூலம் ஐந்து கோழிகளைத் தன்னிடம் கேட்டிருப்பதை அறிந்த மனிதன், தன் உயிரைக் காப்பாற்றிய நரிக்கு ஐந்து கோழிகளைக் கொடுக்க இசைந்தான்.

நரியை அழைத்துக் கொண்டு அவன் தன் வீடு நோக்கி நடந்தான். மனிதனின் வீட்டு எல்லையிலிருந்த வேலி அருகில் நரி நின்று கொண்டது.

வீட்டுக்குச் சென்ற மனிதன்  ஒரு சாக்கினை எடுத்தான். பின்னர் கோழிக்கூட்டினுள் நுழைந்து ஒவ்வொரு கோழியாகப் பிடித்து சாக்கில் போட ஆரம்பித்தான்.

கோழிகளின் சத்தத்தைக் கேட்ட அவனது மனைவி அங்கு வந்தாள்.

“ஏன் கோழிகளைப் பிடித்து சாக்கில் போடுகின்றீர்கள்?” என்று கேட்டாள். அவன் காரணத்தைக் கூறியதும்  கோபமடைந்தவள்,

“நீங்கள் நரிக்குக் கொடுப்பதற்காகவா நான் படாதபாடுபட்டுக் கோழி வளர்க்கின்றேன்? பேசாமல் அந்தச் சொறி நாயை சாக்கில் போட்டு நரிக்குக் கொடுத்துவிடுங்கள்” என்று கூறினாள்.

மனைவி கூறியது அவனுக்குச் சரியாகப் பட்டது.

மூலையில் ஒதுங்கிக் கிடந்த சொறி நாயை சாக்கில் போட்டுக்கொண்டு நரி நின்றிருந்த வேலியருகே  சென்றான்.

மனிதனின் வரவை எதிர்பார்த்து ஆவலோடு காத்திருந்த நரிக்கு தூரத்தில் மனிதன் சாக்கோடு வருவதைக் கண்டதும் நாவில் எச்சில் ஊறியது.

நரியிடத்தில் வந்த மனிதன் சாக்கினை அதனிடம் கொடுத்துவிட்டு,  அந்த இடத்தை விட்டும் அகன்றான்.

‘தற்போதைக்கு ஒரு கோழியை எடுத்து ருசி பார்ப்போம்’ என்று எண்ணிய நரி, சாக்கினை மெதுவாக அவிழ்த்ததும்,  சாக்கிலிருந்த சொறி நாய் உறுமிக்கொண்டே வெளியில் பாய்ந்து, நரியைத் துரத்திக்கொண்டு ஓடியது!

நாய்க்குப் பயந்தோடிய களைப்பில்,  தான் முன்பு படுத்திருந்த அதே பாறையின் மீது ஏறிப்படுத்துக் கொண்ட நரி, களைப்பு நீங்கி  நிதானமாக மூச்சுவிடத் தொடங்கியது.

‘என்னுடைய நன்மைக்காக நான் எத்தனையோ மிருகங்களைத் தந்திரமாக ஏமாற்றியிருக்கின்றேன்.  தந்திரத்தில் என்னை வெல்வார் எவருமில்லை என்று நான் இறுமாந்திருக்கின்றேன். ஆனால் முழு முட்டாளாகத் தோன்றிய அந்த மனிதன் என்னையே ஏமாற்றி விட்டான்’ எனத் தனக்குள் பேசிக்கொண்டது!

(முற்றும்)

Post a Comment

0 Comments