ஏறக்குறைய நான்கு நூற்றாண்டு காலமாக கிழக்கு துர்கிஸ்தானிய மக்கள் தமது மனவுறுதி, நம்பிக்கை தளராமல் சுதந்திரத்திற்காகப் போராடி வருகின்றார்கள்.
இப்போராட்டத்தின் விளைவாக மில்லியன் கணக்கான உய்கூர் முஸ்லிம்கள் சஹீதாக்கப்பட்டார்கள். வல்ல அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொள்வானாக.
மேலும் இலட்சக்கணக்கானவர்கள் இன்றும் சிறைக்கூடங்களிலும், வதை முகாம்களிலும் முடங்கிக்கிடக்கின்றனர்.
இன்றுவரை உலகம் முழுவதிலும் கொரோனா நோய்த்தொற்றாளர்கள் மூன்று இலட்சத்தையும் தாண்டிவிட்ட நிலையில் சீனாவில் மட்டும் 82,816 பேர்கள் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
கொரோனா நோய்த்தொற்றால் சீனாவில் 4632 பேர்களும் சீனாவுக்கு வெளியில் ஏனைய 210 நாடுகளில் இரண்டு இலட்சம் பேர்களுக்கும் அதிகமானோர் மரணத்தைத் தழுவியுள்ளமை வருந்துதற்குரியது.
கொரோனா வைரஸை வெற்றிகொண்ட நாடுகளாக யெமன் (Yeman) சென்.பாசவா (St.Barth) மொரிடானியா (Mauritania) கிறீன்லாந்து (Greenland) போன்ற நாடுகள் கொள்ளப்படுகின்ற நிலையில் - கொரோனா வைரஸ் தொற்றிய எவரும் அடையாளம் காணப்படாத நாடுகளாக கொமரூஸ் (Comoros) லெசதோ (Lesotho) மாஷல் தீவு (Marshall Isl.) மைக்ரோனேசியா (Micronesia) நாவுரு (Nauru) வடகொரியா (North Korea) பலாவு (Palau) சமோவா(Samoa) வனவாடு (Vanuato) டொன்கா (Tonga) சாவோ தோமீ (Sao Thomee) சொலமன் தீவுகள் (Solomon Isl.) தாஜிகிஸ்தான் (Tajikistan) துர்கிமேனிஸ்தான் (Turkmenistan) தொவாலு (Tovalu) என்பன கொள்ளப்படுகின்றன.
உலக நிலைமை இவ்வாறிருக்க, இணையத்தளங்களினூடாக கொரோனா வைரஸ் தாக்கம் சீனர்களுக்கு இறைவன் கொடுத்த தண்டனை, சாபம் என்றவாறாக சிலர் கருத்து வெளியிட்டு வருகின்றமை கவலைக்குரியதே.
அது அவ்வாறல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இறைவனின் சோதனை மனித குலத்திற்கு பல்வேறு வடிவங்களில் வந்து சேரும். அவற்றுள் இதுவும் ஒருவகை என்பது எமது நம்பிக்கையாக இருக்க வேண்டும்.
அதுவுமல்லாமல் சீன அரசின் நிகழ்ச்சி நிரலும், கொள்கையுமே கிழக்கு துர்கிஸ்தானிய மக்களைக் கொடுமைப்படுத்த வைக்கின்றதே தவிர, சீன மக்கள் அதற்குப் பொறுப்புக்கூறும் நிலைக்கு அப்பாற்பட்டவர்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
பொதுவுடமை என்ற பெயரில் சீனா முழுவதிலும் - கிழக்கு துர்கிஸ்தான் உட்பட - அடக்குமுறை ஆட்சி நடைபெறுகின்றது என்பதை சீனத்தவர் உட்பட உலக மக்கள் அனைவருமே நன்றாகப் புரிந்து வைத்துள்ளார்கள்.
இந்தக் கொள்ளை நோயிலிருந்து உலகத்தார் அனைவரையும் காக்க வேண்டுமென்று இறைவனிடம் பிரார்த்தித்துக் கொண்டு, வரலாற்றுக்கு வருவோம்.
மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான “கிழக்கு துர்கிஸ்தான்” உலகின் மிகப்பெரிய நாடுகளின் வரிசையில் 19வது இடத்தில் இருக்கின்றது. ஒரு காலத்தில் இங்கு 95 வீதமாக முஸ்லிம்களே வாழ்ந்து வந்துள்ளனர்.
பட்டுப்பாதையில் அமைந்திருந்த பல நாடுகளில் இஸ்லாம் பரவுவதற்கும் அறபு முஸ்லிம் வியாபாரிகள் காரணமாக இருந்தனர்.
அவ்வாறே கிழக்கு துர்கிஸ்தானில் இஸ்லாம் பரவுவதற்கும் அறபு முஸ்லிம் வியாபாரிகள் முக்கியமான காரணமாக அமைந்தனரெனலாம்.
கிழக்கு துர்கிஸ்தானுக்கும் சீனாவிற்குமிடையிலான தொடர்புகள் கி.மு 08ம் நூற் றாண்டு முதல் கி.பி. 08ம் நூற்றாண்டு வரை தொடர்ந்துள்ளது.
கிழக்கு துர்கிஸ்தானில் “உய்கூர்” இனத்தவர்கள் பெரும்பான்மையினராக இருந்துள்ளனர்.
மூன்றாவது கலீபா உஸ்மான் (ரழி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் “ஹகம் பின் அம்ரு அல் கிபாரி” மூலம் இஸ்லாம் இங்கு அறிமுகமாகியுள்ள வேளை , இங்கு வாழ்ந்த “உய்கூர் “ இனத்தைச் சேர்ந்தவர்கள் இஸ்லாத்தின் கொள்கை, வாழ்க்கை முறை, சாந்தி, சமாதானம், சமத்துவம், சகோதரத்துவம், வணக்க வழிபாடுகளால் ஈர்க்கப்பட்டு - இஸ்லாத்தில் இணைந்து கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
காலம் செல்ல இக்கோத்திரத்தைச் சேர்ந்த அதிகமானோர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதால் நாடு இஸ்லாம் மயமாகியது.
(தொடரும்)
Email;vettai007@yahoo.com
0 Comments