குப்புறப்படுத்திருந்த உருவத்தைச் சுற்றி நின்றிருந்த  நாகரிகமாக உடுத்தியிருந்த  மனிதர்களை  விலக்கிவிட்டுக் கிட்டநெருங்கியபோது... அது  ரெங்க்மாதான் என்பதை சந்தேகமின்றி கண்டு கொண்ட  செரோக்கி  பதறிப்போய்விட்டான்!

அவளைச் சுற்றிநின்று இவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பதை அப்போதைக்கு அவனால்  புரிந்துகொள்ள முடியாதிருந்தது!

அவளுக்கருகில் முற்றும் நனைந்த நிலையில் குந்தியிருந்தவனைப் பார்த்ததும் கடுங்கோபங்கொண்டான்  செரோக்கி!  அவனை அலாக்காகத் தூக்கித்  தூர எறிந்துவிட்டு ரெங்க்மாவுக்கு அருகில் சென்றான்!

தொலைதூரத்தில் போய் விழுந்த அந்த நல்லவன் எழுந்து நின்று,  தனது மேலாடையை பொறுக்கி எடுத்துக் கொண்டு,  தன்னைச்  சுதாகரித்துக் கொண்டவனாக, தன்மீது படிந்திருந்த துகள்களைத்  தட்டிவிட்டவாறு மீண்டும் தன் சகாக்களை நாடி நடந்து வந்தான்.

செரோக்கியைச் சமாதானப்படுத்துவதிலும், காப்பாற்றப்பட்டவளுக்கான முதலுதவி செய்வதிலும் அவர்கள்  பிரயத்தனம் எடுத்துக்கொண்டிருந்தனர்!

அவர்களுள்  மற்றொருவன், ரெங்க்மாவின் அருகில் சென்று அவளை மல்லாத்தி வைத்து, அவளது வயிற்றுப்பகுதியை அமுக்கியபோது...  அவளது வாய், மூக்குப்பகுதிகளிலிருந்து நீர் வெளியேறிக்கொண்டிருந்தது!

வனப்பகுதி ஆய்வொன்றிற்காக வந்திருந்த குழுவினர் ஆற்றங்கரையோரமாக நடந்து வந்துகொண்டிருந்தபோது,  நீருக்குள் தத்தளித்து உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த மனித உருவத்தைக் கண்டு  அவர்களுள்  ஒருவன்  தனது மேலாடையைக்  கலைந்து விட்டு நீருக்குள் பாய்ந்து முகம் தெரியாத அந்த உருவத்தைக் கரைசேர்த்தான்!  

அதற்கு செரோக்கி கொடுத்த மரியாதை அவனைக் காததூரம் தூக்கியெறிந்ததுதான்!

நிதானமாக தன் நினைவை மீட்டிக்கொண்ட அவன், தன் மனைவியைக்  காப்பாற்றியவனையே தான் தூக்கி எறிந்ததை நினைத்து தன்னையே நொந்து கொண்டான்!  அவனது  கோபம் மெல்ல மெல்ல அடங்கவே அங்கு அவன் வெட்கித்து நிற்கலானான்!

தன்  தவறுக்காக வருந்திய அவன்  ஒருவித  அசட்டுச் சிரிப்போடு அந்த நல்லவனைப் பார்த்தான்!
 
அவனோ எதையும் கண்டுகொள்ளாதவனாக மற்றவர்களோடு சேர்ந்து ரெங்க்மாவை உணர்நிலைக்குக் கொண்டுவருவதில் தன்னை முழுமையாக  ஈடுபடுத்திக் கொண்டிருந்தான்!

வயிற்ருக்குள் சென்றிருந்த நீர் ‘பதக்... பதக்’ என்று வெளியேறியவுடன்  கொஞ்சம் கொஞ்சமாக உணர்வு பெற்று கண்களை மெல்லத்திறந்தவள் ரெங்க்மா சுற்றி நின்றவர்களைப்  பயம் கலந்த  தோரணையில் நோட்டமிட்டாள்!

அவர்களுக்கு மத்தியில்  செரோக்கியைக் கண்டபோது அவளது பயம் மாயமாய் மறைந்து போனது!

தற்போதைய தன் கோலம்கண்டு வெட்கித்துப்போயிருந்த  அவளைப் பார்த்ததும் செரோக்கி  ஆற்றங்கரை ஓரமாக வேகமாக ஓடலானான்!
(தொடரும்)