11.ஓய்தல் ஒழி
புற ஓய்வை இங்கே தவிர்த்தல் அரிதே!
அக ஓய்வுக் கிடங்கொடுத்தல் சோம்பலாக்கும்!உள்ளம்
சிறகை விரித்தென்றும் உற்சாகம் பொங்க
முடங்காமல் பார்ப்ப தறிவு.
12.ஒளடதங் குறை
குப்பை உணவும் துரித உணவுகளும்
அப்பப்பா எண்ணற்ற நோய்களை மேனிக்குள்
எப்படியோ தாக்கவைக்கும்! உண்ணும் உணவுகளில்
சற்றே கவனமுடன் உண்டால் மருந்துகளை
முற்றும் குறைக்கலாம் சொல்.
13.கற்றதொழுகு
கற்பதை நல்லதாய்க் கற்றுத் தெளியவேண்டும்!
கற்றுத் தெளிந்ததும் உள்வாங்கி வாழ்க்கையில்
அப்படியே பின்பற்றி வாழ்ந்தால் மதிப்புண்டு!
எப்படியோ வாழ்தல் இழிவு.
14.காலம் அழியேல்
காலத்தை வீணாய்க் கழித்துவிட்டால் மீண்டுமந்தக்
காலம் திரும்பக் கிடைக்காது கண்மணியே!
காலத்தைப் பொன்போல் கடமையைக் கண்போல
வாழ்க்கையில் போற்றிமுன் னேறு.
15.கிளைபல தாங்கேல்
பிரித்துப் பிரித்துப் பிரித்தாளும் சூழ்ச்சி
பிரிவினை உண்டாக்கித் துண்டாடிப் பார்க்கும்!
பிரிவினைச் சக்திகள் நாட்டின் களைகள்!
பிரிவைச் சகிப்பது கேடு.
16.கீழோர்க்கு அஞ்சேல்
துன்பங்கள் தந்து துவளவைக்கும் கூட்டத்தைக்
கண்டுகொள்ள வேண்டாம்! புறக்கணித்து முன்னேறு!
வன்மனம் கொண்டவர்க்கும் நன்மைகள் செய்யவேண்டும்!
என்றும் பெருந்தன்மை ஏந்து.
17.குன்றென நிமிர்ந்து நில்
எத்தனைச் சோதனைகள் சுற்றி வளைத்தாலும்
அத்தனையும் இங்கே தவிடுபொடி யாவதற்குச்
சற்றும் கலங்காமல் குன்றாய் நிமிர்ந்தேதான்
முற்றும் இலக்குநோக்கி நில்
18.கூடித் தொழில் செய்
தனிமரம் தோப்பாக மாறாது! ஆனால்
தனிமனிதன் கூட்டாகச் சேர்ந்து குழுவாய்
இணைந்து குழுவுணர்வால் ஒன்றாய் உழைக்கும்
முனைப்பால் உயரலாம் நம்பு.
19.கெடுப்பது சோர்வு
மலையென செல்வம் குவிந்திருந்த போதும்
களையெனச் சோம்பல் வளர்வதை நாளும்
நிலைகொள்ளச் செய்தால் செல்வம் அழியும்!
உலகில் கெடுப்பது சோர்வு
20.கேட்டிலும் துணிந்து நில்
கேடுகள் வாழ்வைத் தடுமாறச் செய்யலாம்!
கேடுகளின் தாக்கத்தால் கோழையாக மாறாமல்
கேடுகளை வெற்றிகொள்ள கண்ணே! துணிந்துநில்!
மாறும் ! நிலைமாறும் பார்.
(தொடரும்)


0 Comments