குறள் 408
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு.

மாப்ள... படிக்காத முட்டாப் பயலுவகிட்ட பணம் ரொம்ப சேந்திருக்கும். நல்ல படிச்ச மேதாவிங்க பணம் இல்லாம வறுமையில இருப்பாவொ. 

படிச்சவங்க கிட்ட இருக்க வறுமைய விட படிக்காதவனுவொகிட்ட இருக்க பணம் ரொம்ப மோசமானது மாப்ள.. 

குறள் 411
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை.

மாப்ள.. நாம எதையும் காதால கேட்டுத் தெரிஞ்சுக்கிடுதோம்லா..  நமக்குக் கெடச்சிருக்க நெறைய செல்வங்கள்ல அது ஒண்ணு. 

நம்மகிட்ட இருக்க எல்லாச் செல்வங்களையும் விட ரொம்ப ஒசந்தது இந்த செவிச் செல்வம் தான் மாப்ளை. 

குறள் 423
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

ஏல.. கிறுக்குப் பயல.. ஊருல எல்லாந் தெரிஞ்ச  நாலு பேரு நாலு வெதமா சொல்லத் தான் செய்வாவொ. நீ தான் மூதி எது சரின்னு கண்டு பிடிச்சு அதுக்கேத்த மாதிரி நடக்கணும். 

குறள் 424
எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு.

மாப்ளை நீ மெத்தப் படிச்சிருக்கங்கது சரிதான்டே.

நீ எதையாவது பேசுனன்னா, அது நம்மூர்ல  இருக்க குப்பனுக்குஞ் சுப்பனுக்கும், நல்ல வெளங்குத மாரி இருக்கணும். 

அதே நேரம், பெரிய பெரிய லகடுகள்லாம், எவ்வளவு பொடி வச்சு நுட்பமா பேசினாலும், அதை புரிஞ்சிக்கிடுத தெறமை ஒனக்கு இருக்கணும். 

நீ நல்ல படிச்சவந்தாங்கிறதுக்கு, இதுதாம் மாப்ளை அடயாளம். 

குறள் 432.
இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு.

அடுத்தவொளுக்கு தேவப்படுததை கொடுக்காம இருக்கது, 

பெரியவொன்னு தெரிஞ்ச பொறவும்,  அவொளை மதிக்காம நடக்கது, 

மோசமானதுகளுக்கில்லாம், சந்தோசப் படுதது... 

இதையெல்லாம், பெரிய பொறுப்பில இருக்கவொ செஞ்சா அது ரொம்பப் பெரிய தப்பு மாப்ள. 

குறள் 439
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.

நீ தாம் பெரிய இவங்கிற நெனப்புல தலகால் புரியாம மானத்துக்கும் பூமிக்கும் ஒரேயடியா குதிக்காதடே! 

யாருக்கும் சல்லிக் காசு பிரயோஜனம் இல்லாத வேலையெல்லாஞ் செய்யணும்னு நெனய்க்காத.  புரியுதாடே மாப்ள..(தொடரும்)