அவர்களை வாசிப்பதில் அவர்களின் வாசிப்பு...!

அவர்களை வாசிப்பதில் அவர்களின் வாசிப்பு...!



அவன் தரம் 10  மாணவன். எனக்கு முன்னால் அமர்ந்திருக்கிறான்.

இது அவனுக்கு எனது மூன்றாவது வகுப்பு. உளவியலை கல்வியோடு கொண்டு செல்லும்போது மாணவர்களின் பல்வேறு நடத்தைகளை  நுண்ணிய முறையில் கவனிக்க வேண்டும். அப்பொழுதுதான்  அவர்களுக்குரிய அணுகுமுறைகள் என்னிலிருந்து எவ்வாறு செலுத்தப்பட வேண்டும் என்று தீர்மானிக்க முடியும்.

கவனித்தேன்.

அவன் யாரோ ஒருவர் மூலமாக  என்னை அறிந்து, விரும்பி  தொலைவில் இருந்து தேடி வந்தவன். 

வகுப்புக்கு முன் அவன் தாயோடு தொலைபேசியில்  உரையாடினேன்.அவன் பாடசாலை செல்ல மறுப்பதாகவும், கடந்த நான்கைந்து மாதங்களாக  பாடசாலைக்கு போகவேயில்லை எனவும், கேட்டால் பயங்கரமாக  கோபப்படுகிறான் எனவும் கூறினாள்.

இரண்டு நாட்கள் கழித்து  வந்தான்.

புத்தகங்களை ஓரம்கட்டிவிட்டு அவனோடு ஏதும் தெரியாதது போல் தனிப்பட்ட முறையில் பேச்சுக்கொடுத்தேன். மிகுந்த மரியாதையோடு பேசினான்.

பேசியதில் இருந்து அவன்   பாடசாலை செல்ல மறுப்பதற்கான காரணம் புரிந்தது.

அவனது பிரச்சினைஅவனுக்குள்ள  தடுமாற்றம்.ஆனால் கற்க வேண்டும் என்ற அதீத ஆசை.

இது இரண்டும் கலந்த அவன் நடத்தை, அவனை  ஒரு அசாதாரண நிலைக்கு ஆக்கியிருந்தது.

இந்த தடுமாற்றத்தை காணும் (சில ஜட)ஆசிரியர்கள், மாணவர்களுக்கு முன் அவனை கேலியாக எடுத்துக்கொண்டுள்ளனர்.. ஒருவர் மட்டுமல்ல தொடர்ந்து மூன்று பாட ஆசிரியர்களாலும் இவ்வாறே கணிக்கப்பட்டு இருக்கிறான்.

"உனக்கு எதுவுமே ஏறாது.."

"வீட்டு வேலைகள்  செய்யாமல் வந்து சும்மா நடிக்கிறாய்" 

என்றும், ஆசிரியர்களின் தண்டனைக்குப் பயந்து பாடசாலை போகாமல் அடுத்தடுத்தநாள் செல்லும்போது அவனை அதிபரிடம் கூட்டிச் செல்லும் அவமானமும் தொடர்ந்து நடக்க, கற்றலை விட சுயமரியாதை அவனுக்கு அந்த இடத்தில் பெரிதாக தேவைப்படுவதாய் அவனுக்கு தோன்றியிருக்கிறது.

தன்னால் இனிமேல் பாடசாலை செல்ல முடியாது என வீட்டோடு நிறுத்திவிட்டான்.

எதிர்காலம் பற்றிக் கேட்டேன்.தான் எப்படியாவது சிறந்த ஒருவனாக வரவேண்டும்.

தொழில் செய்ய வேண்டும் என்றான்.  அதற்குத் தேவையானது ஆங்கிலம் மட்டுமே. அதை அவனுக்கு ஏற்றாற்போல் கற்பிப்தற்காக சரியான ஒருவர்  வேண்டும் என்பதனை பல மாதங்களாக தேடி என்னிடம் வந்ததாக கூறினான்.

முதல் நாளே அவனுக்குள்ள அந்த தடுமாற்றத்தை புரிந்து கொண்டேன். ஆம்.அது இயல்பு நிலை அல்ல.

ஒவ்வொரு வகுப்புகளும் தொடங்கும் முன்னோ, இடையிலோ மாணவர்களிடம் வாசிப்பை கேட்பதும், அதனை உற்சாகப்படுத்துவதும் அதற்குரிய விருப்பத்தை வழங்குவதும் என் வழக்கம். வாசிக்கும் தன்மையிலிருந்து மாணவர்களின் கல்வி மட்டத்தையும், அவர்கள் மனநிலை மட்டத்தையும் (emotional) புரிந்து கொள்ளலாம்.

அவன் வாசிப்பை தொடங்கினான்.
முதல் வரியை தொடர்ந்து  இரண்டாவது வரியில் சாதாரணமாக இருந்த வாசிப்பு மூன்றாவது வரியில்/ சொல்லில் தடுமாறுகிறது. அடுத்தடுத்த சொற்களில் அவனது உதடுகள்அவசியமற்று அசைகின்றன. இடையிடையே தரப்பட்ட சொற்களுக்கு மேலதிகமாக, அர்த்தமில்லாத எழுத்துக்களை இணைத்து பந்தி  வாசிக்கப்படுகிறது.

ஒரு சிறிய எழுத்துப்பிழை என்னால் திருத்தப்படும் ஒவ்வொரு முறையும் "sorry sorry" என்று பதட்டத்தோடுவருந்துகிறான். அத்தோடு ஒரு மௌனம்.பெருமூச்சு. மீண்டும் கவலையோடு வாசிப்பை தொடங்குகிறான்.

ஆம்.இது  நினைப்பது போன்று சாதாரண நடத்தை அல்ல.இது
"Reading Anxiety"


இது பற்றிய  மேலதிக தகவல்களை இனித் தருகின்றேன்.

கற்பதற்கோ வாசிப்பதற்கோ ஆர்வம் இவர்களுக்கு இல்லாமல் இல்லை.  ஆனாலும் ஏனோ, வாசிப்பு என்று வரும்போது அவர்களுடைய உள்ளமானது உடனடியாக கவலைகளால் மூழ்கி விடுகின்றது.

இலகுவில் உச்சரிக்க முடியாத சொற்களை உச்சரிக்கும் போது அவை பிழையாகிவிடுமோ என்றோ, இதன் காரணமாக தான் கேலி செய்யப்படுவேனா,பிறர் தன்னைக் குறைவாக  நினைத்து விடுவார்களா என்றோ, இதனால் தான்  தண்டிக்கப்பட்டு விடுவேனோ  என்ற அச்சமே இவர்களுக்கு இந்த பதட்டத்தை அதிகரிக்கின்றன.

இதனால் தங்களால் வாசிப்பு என்பதனை செய்ய முடியாது என்றுசந்தேகிக்கின்றனர். 

இந்த எதிர்மறையான  எண்ணங்களுடன் போராடியவாறு வாசிக்கத் தொடங்குகின்றனர்.

உண்மையில், வெறும் கல்வியோடு மட்டும் இந்த அச்சம் மாணவர்களுக்குள் முடிந்துவிடுவதில்லை.

பிற்காலத்தில்  அவர்களது வாழ்க்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தி விடக் கூடியது. 

Reading Anxiety யுடன் பலமான எதிர்மறை உணர்ச்சிகளுடன் மூளை தொடர்பு படுகிறது. இதனால் புதிய தகவல்களை செயலாக்குவதற்கு அதற்கு இயலாமல் போகிறது. விளைவாக, அவர்களுடைய கற்றல் பலவீனமடைகிறது.சுய நம்பிக்கை இழக்கப் படுகிறது.

வாசிப்பு என்பது கற்றலின் அனைத்து பகுதிகளிலும் முக்கியமான ஒரு அடிப்படை திறன் என்பதனால் Reading Anxiety கல்விச் செயற்திறனில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

ஒரு மாணவன் Reading Anxiety உடன் போராடுகிறார் என்றார் அவர் மற்ற பாடங்களிலும் பிரச்சினைகளை சந்திப்பவனாக இருப்பான். அவனது அன்றாட வாழ்க்கையையும் இது பாதிப்பதாக அமைந்துவிடும்.

நமதுகவலைகள் எந்த வடிவத்திலாவது  நமது உடலை பாதித்து விடுகின்றது.

அதன்படி, இந்த அச்சம் காரணமாக அவர்களுக்குள்

#ஓய்வின்மை  

#தூக்கமின்மை 

#எரிச்சல் 

#நெஞ்சு இறுக்கம்

#நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு
 
#மனநிலை எண்ணங்கள் பாதிப்படைதல்

#சுயமரியாதையை குறைத்து மதிப்பிடுவது

#ஒருநிலையற்ற மனநிலை

#பொதுவான பயம்,போன்றன இந்த பிரச்சினையுடன் தொடர்புபட்டுவிடுகிறது.

Reading Anxiety ஒரு பிள்ளைக்கு இருப்பதை எவ்வாறு அறியலாம்?

பின்வரும் அறிகுறிகளை அவதானியுங்கள்.

#வாசிப்பதற்கு வெறுப்பு காட்டுதல் அல்லது எதிர்ப்பு காட்டுதல்.

#முடியாது' அல்லது 'நான் விரும்பவில்லை' போன்ற பதில்களை கூறுதல்.

#உதவிகளை எதிர்பார்த்தல் அதாவது,என்னால் இதனை தனியாக வாசிக்க முடியாது  சேர்ந்து வாசியுங்கள் என ஆசிரியர்களின்/பிறரின் உதவியை நாடுதல்.

#வாசிக்கும் போது அடிக்கடி பாத்ரூம் செல்வது அல்லது வேறு காரணங்களை உருவாக்கி நேரத்தை கடத்துதல். இதன்மூலம் வாசிப்பை தவிர்த்தல்.

அத்தோடு சத்தமாக வாசிக்கும்போது

#பதட்டம் ஏற்படுதல்

#முகம் சிவத்தல் 

#படபடப்பு 

#நடுங்கும் குரல் 

#கைகள் நடுங்குதல்

#உதடுகள் மேலதிகமாக அசைதல் போன்றவை ஏற்படுதல்.

வாசிக்கும்போது இந்த மாற்றங்கள் பிள்ளைகளுக்கு  ஏற்படுகின்றனவா என்று ஆசிரியர்களாகிய  நாம் எம் மாணவர்களிடம்  கண்டிப்பாக உற்று நோக்குவது கடமையாகும்.

உண்மையில் இதில் இருக்கும் ஏதாவது அறிகுறிகள் பிள்ளைகளிடம் இருப்பது தெரிந்தால் அவர்களை அமைதியாக அணுக வேண்டும்.

அவர்களது தலையைத் தடவிக் கொடுத்தோ, அல்லது கைகளை பற்றியோ, முடியுமானால் ஒரு அணைப்பு மூலமாக அவர்களை அமைதி படுத்துங்கள்.ஆசுவாசப்படுத்துங்கள்.

Just say" very good.well done"

மேலும் கண்டிப்பாக  சில கேள்விகளை கேளுங்கள்.உதாரணமாக:

#சத்தமாக வாசிக்கும்போது நீங்கள் எந்த மாதிரியான மனநிலையை உணருகிறீர்கள்?

#வாசிக்கும்போது உங்களை மிகவும்  மிகவும் பயமுறுத்தும் காரணம்  எது?

#நீங்கள் வாசிக்கும்போது எந்த முறை உங்களை இலகுவாக மாற்றும் என்று நினைக்கிறீர்கள்?

போன்ற  உங்கள் கேள்விகள் மூலம் அவர்கள் வழங்கும் பதில்களை கொண்டு பிள்ளையின் இந்த அச்சம் எங்கிருந்து உருவாகிறது என்பதனை புரிந்து கொள்ள முடியும்.

அத்தோடு நிற்காது இவர்களுக்கான ஒரு இலகுவான முறையை அல்லது திட்டத்தை வசதியாக்கி, உருவாக்கிக் கொடுத்து அவர்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும்.

அத்துடன் இவற்றையும் முயற்சி செய்யுங்கள்.

#உங்களோடு சேர்ந்து வாசிக்கும் படி முதல் கட்டமாக செய்யுங்கள்.

#பின்னர் அதனையே படிப்படியாக தனியாக வாசிக்க விடுங்கள் .

#சிறிய பந்திகளை கொடுங்கள்.

#வாசிப்புக்கான பகுதியை  முன்கூட்டியே வாசித்து தயாராகி வரும்படி கொடுங்கள்.

#உங்கள் பிள்ளைகளுக்கு  வீட்டில் வாசிப்பதற்கான ஒரு அமைதியான இடத்தை ஒதுக்குங்கள்.

#ஒவ்வொரு இரவிலும் வாசிப்பதற்கான ஒரு நேரத்தை ஏற்படுத்துங்கள்.

#சப்தமாக வாசிப்பதற்கு பிள்ளையை ஊக்குவியுங்கள். ஏனெனில் சப்தமாக வாசிப்பதன் மூலம் பிள்ளை தொடர்ந்து அவற்றை  சுயமாக செவிமடுக்கும் போது அவர்களுக்குள் ஒரு சுறுசுறுப்பை உணருவார்கள்.

#பிள்ளை தனக்கு  உச்சரிக்க முடியாத வார்த்தைகளை எழுதி வைக்கும்படி செய்யுங்கள்

#அர்த்தம் தெரியாத சொற்களுக்கு கண்டிப்பாக அதன் பொருளை சொல்லிக்கொடுங்கள்.

#உங்கள் பிள்ளை /மாணவன்  ஏதாவது ஒரு பகுதியை வாசித்து முடித்தபின்னர் அவனை மனமுவந்து பாராட்டுங்கள். (appreciate) 

Star, Smiley stickers, அல்லது சின்னச்சின்ன பரிசுகள் கொடுத்து அவனை ஊக்குவியுங்கள்.

நீங்கள் கொடுக்கும்  இந்த சிறிய விடயம் அவர்களுக்குள் பெரிய வெற்றிகளை கொண்டாடுவதற்கு சமமானது.

#வாசிக்க முன் அவர்கள் மனநிலையை சந்தோஷமாக வைத்துக் கொள்ள உதவுங்கள்.

#அத்துடன்  இப்படியானவர்களுக்கு அவர்களது  Self confidenceஐ அதிகரிப்பதற்காக உதவும் physical exercise பயிற்சிகளை கொடுங்கள்.

உதாரணமாக :
#ஆழ்ந்த சுவாசப்பயிற்சி ▪️ரிலாக்சேஷன் (relaxation)

#வாசிக்கும்போது ஸ்மைலி பந்தை  கைகளால்அழுத்த விடுதல்.

#சுயமாக  ஒரு தலைப்பில் பேச விடுவது.
போன்றன மூலம் இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியும்.

ஒரு சிறந்த வாசகனாக மாறுவது சிறிய வயதில் அவர்களுக்கு ஏற்படும் சுய நம்பிக்கையிலிருந்து ஆரம்பமாகிறது. 

எனவே ஒரு அறிவுபூர்வமான, ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதற்கு ஆசிரியர்களாகிய எமது பங்களிப்பு எந்தளவிற்கு அத்தியாவசியமாக இருக்கிறது என்பதனை உணர்ந்து செயல்படுங்கள்.

Laila Akshiya
Teacher,Dip in psyc
Mental health.
Student counselor
(Skills Inshight)

Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post