
இவ்வளவு தாங்க வாழ்க்கை !!
இன்று நம் மனத்தை மகிழ்விக்கும் ஒரு தகவல் ; வாழ்வின் எதார்த்தத்தைப் புரிய வைக்கும் ஒரு குறள் ; மனிதன் ஏனோ சிந்திக்க மறுக்கும் ஒரு செய்தி ; ஆனால் “நிஜம்” அது உரைக்கும் ஒரு குறள் பற்றி அறிவோம். அதாவது, ஒரு பொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல.(குறள் 337)
என்பதே அது. உண்மை தானே ! தான் வாழ்வது எத்தனை நாட்கள் என்பதே அறியாத மனிதன் தன் வாழ்வில் எண்ணுவது மட்டும் கோடிக் கணக்கில் ; அதுவும் குறைவு தான். அதற்கும் மேலே ஆசைப்படுகின்றான் என வள்ளுவர் எச்சரிக்கின்றார். அதற்குச் சாட்சி கூறுவது போல் ஒரு சம்பவம் இதோ...
கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு செய்தித்தாளில் கட்டம் கட்டப்பட்டு வந்த தெளிவான ஒரு செய்தி, முழுமையாகக் கட்டி முடிக்கப்படாத நிலையில் ஒரு நான்கு அடுக்கு மாடிக்கட்டடம். அதன் உரிமையாளர், ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை காலை நேரம் கட்டடத்தின் மொட்டை மாடியில் நின்று தன்
கட்டடத்தை ரசித்துக் கொண்டிருந்தார். ரசித்துக் கொண்டே பின்நோக்கி வந்தவர்... இதைத்தான் விதி என்பதா ! அந்தோ பரிதாபம். கால் இடறி, தடுப்புச் சுவர் இல்லாத நிலையில் இருந்த கட்டடத்தின் உச்சியில் இருந்து கீழே விழுந்தார்... அதே சமயம்,
கீழே சாலையில் மணல், ஏற்றிய லாரி ஒன்று வழிமாறி அங்கு வந்து விட, தவறு உணர்ந்து திரும்பிச் செல்ல பின் பக்கமாக லாரி வர, அந்த நேரத்தில் தான்... கட்டட உரிமையாளர் மேலேயிலிருந்து கீழே விழுந்தார். எவ்வித சிராய்ப்புக் காயமும் இன்றி ஈரமணல் மீது லாரியின் உள்ளே விழுந்தார்.
அந்த ஒரு கணப் பொழுதில் சாவின் வாயில் வரை சென்றுவிட்ட அம்மனிதர் தான் பிழைத்து எழுந்தது கனவா? அல்லது நிஜமா? எனக் குழம்பி, வியந்து, பரவசப்பட்டுப் போனார். மிகப்பெரும் செல்வந்தரான அக்கட்டட உரிமையாளர், அந்த லாரி ஓட்டுநருக்கு ஏதாவது செய்ய வேண்டி தன் வேலையாட்களை அழைக்க அன்று ஞாயிற்றுக்கிழமையானதால் ஒருவரும் அங்கு இல்லை என்பதை உணர்ந்தார். லாரி ஓட்டுநரோ தனக்கு எதுவும் வேண்டாம் என மறுக்க, இல்லை என் கையால் ஒரு குளிர்பானமாவது குடித்து விட்டுத்தான் செல்ல வேண்டும். அதை நானே வாங்கி வருவேன் எனக் கூறிவிட்டு, எதிர்முனையில் இருந்த மளிகைக் கடைக்கு ஓடிச் சென்றார் அக்கட்டட உரிமையாளர்.
செய்வதறியாது நின்றார் லாரி ஓட்டுநர். குளிர்பானம் வாங்க ஓடிச் சென்ற அந்த தனவந்தர். அதனை வாங்கிக் கொண்டு தன் நன்றியறிதலைக் காண்பிக்க ஓடி வந்தார். அப்போது தான் அந்த விபரீதம் நடந்தது. ஆம்... அவ்வழியாக மிக வேகமாக வந்த கார் ஒன்று படுவேகமாக மோதியதால் அக்கட்டட உரிமையாளரான அச்செல்வந்தர் நடுசாலையில் அக்கணமே உயிரிழந்தார். கண்மூடித்திறப்பதற்குள் இது நடந்தேறிவிட்டது.
தன் வாழ்க்கை சில கணங்களில் முடியப்போவது அறியாமல் அம்மனிதர் குளிர்பானம் வாங்கச் சென்றுள்ளார். இதனை என்னவென்று சொல்வது? இப்படி எத்தனையோ சம்பவங்களைச் சான்றாகக் கூறலாம். சிந்திக்க வேண்டிய செய்தியல்லவா இது!
ஒரு மனிதன் நூறாண்டு வாழ்வதாக வைத்துக் கொண்டாலும் 36500 நாட்கள் தான் உயிர் வாழ்கின்றான். அதிலும் பாதி நாட்கள் இரவு, அப்படிப்
பார்த்தால் 18250 நாட்கள் தான். இதில் குழந்தைப் பருவம். மாணவப் பருவம், இளமைப் பருவம், முதுமைப் பருவம் என்றும் நோய் நொடிகள் என்றும், வெட்டிப் பொழுது போக்குவது என்றும் எத்தனை நாட்கள் கழிந்து விடுகின்றன. நூறாண்டு வாழும் வாய்ப்பு பெற்ற மனிதருக்கே கூட்டிக் கழித்துப்பார்த்தால் 1000 நாட்கள் தேறுவதே கடினம். இதனை நாம் எப்படிப் பயன்படுத்த வேண்டும். கோடிக்கணக்கில் பொருள் ஈட்ட அலைகின்றான்.
துன்பத்தில் உழல்கின்றான். எனவே, பொறாமை, பேராசை, கோபம், கடுஞ்சொல் போன்றவற்றைத் தவிர்த்து, அன்பு, கருணை, விட்டுக் கொடுத்தல். இன்சொல் மூலம் நாமும் வாழ்ந்து பிறரும் வாழ வழி செய்யலாமே ! உலகம் தழைக்க நம் பங்கை அளிக்க முன்வருதல் நலம் தருமே! இதை உணர்ந்து வாழ்வோம்! உயர்வோம்!
காத்திரு... நடக்க இருப்பது சரியான நேரத்தில் சரியான இடத்தில் சரியான காரணத்துடன் நடக்கும்...!(தொடரும்)


0 Comments