பெண் காதிகளை நியமித்தல் – அடிப்படையற்ற வாதம்!

பெண் காதிகளை நியமித்தல் – அடிப்படையற்ற வாதம்!



முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்திருத்தம் தொடர்பில் மற்றொரு சர்ச்சைக்குரிய விடயமாகப் பார்க்கப்படுவது பெண்களையும் காதிகளாக நியமிக்க அனுமதி வழங்கப்பட வேண்டும் என்னும் வாதமாகும். 

அதாவது தற்போதுள்ள சட்டத்தில் ஆண்களை மட்டுமே காதியாக நியமிக்க முடியும் எனவும் இது முஸ்லிம் பெண்கள் மீதான பாரபட்சம் எனவும் பெண்கள் காதிகளாக நியமிக்கப்படுவது அவர்களின் அடிப்படை உரிமை எனவும் இது தொடர்பாக விமர்சிப்பவர்களது வாதம் அமைந்துள்ளது.

இது வெளித்தோற்ற அளவில் மிக நியாமான வாதம் போன்று தோன்றினாலும் இந்த நிலைப்பாடு சரியானதா என அறிவதற்கு எமக்குச் சில அடிப்படைப் புரிதல்கள் அவசியமாகின்றது.
முஸ்லிம் விவாக வைவாகரத்துச் சட்டம் என்பது இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றுகின்ற மக்களை ஆளுகின்ற இஸ்லாமிய மார்க்க விதிகளைப் பின்பற்றி உருவாக்கப்பட்டுள்ள ஒரு தனியார் சட்டமாகும். ஆகவே இந்தச் சட்டங்கள் இஸ்லாமிய வழிகாட்டுதலின் அடிப்படையில் மட்டுமே வரையறுக்கப் படமுடியும் என்பது வெளிப்படை. இஸ்லாமிய வழிகாட்டுதல்களைத் தவிர்த்து இதர மார்க்க நம்பிக்கைகளோ, சித்தாத்தங்களோ, தனி மனிதர்களின் விருப்புகளோ, பின்பற்றுதல்களோ, வேறு எந்தச் சிந்தனைத் திணிப்புகளோ இஸ்லாமிய தனியார் சட்டத்தினை வரையறுக்கவும் முடியாது, அதனைத் திருத்தியமைக்கவும் முடியாது. அவ்வாறு செய்யப்படுமானால் தனியார் சட்டம் ஒன்றின் அவசியத்திற்கு அது முரணானதாக அமையும்.

பெண்களைக் காதிகளாக நியமித்தல் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதே இங்கு அடிப்படையான வினாவாக அமைய முடியும். இஸ்லாத்தில் காதி என்பது பெண்களுக்கு அனுமத்திக்கப்பட்டுள்ள பணியா இல்லையா? என ஆராய்ந்து அந்த வழிகாட்டலுக்கு அமைவாகச் சட்டம் இயற்றப்பட வேண்டுமே அன்றி வேறு எந்த அழுத்தங்களுக்கும் இடமளிக்க முடியாது.

ஆண்களையும் பெண்களையும் அவர்களது இயல்பான சுபாவங்கள், பொதுவான மனவோட்டம், உடலியல் சார்ந்த சாத்தியப்பாடுகள் என்பவற்றைக் கருத்தில் கொண்டு வெவ்வேறான துறைகளில் வெவ்வாறான முறையில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கி இருக்கிறது.  

அந்த வகையில் கல்வி, பாதுகாப்பு, இருப்பு, போன்ற அடிப்படை விடயங்களில் ஆண்களுக்கு நிகரான சமவுரிமையைப் பெண்களுக்கு வழங்கிய இஸ்லாம், திருமணக் கொடை, குடும்பக் கட்டமைப்பு, விவாகரத்து போன்ற விடயங்களில் ஆண்களை விடவும் ஒரு படி அதிகமான உரிமையை அவர்களுக்கு வழங்கி இருக்கிறது. 

அது போலவே நிர்வாகம், நீதி சார்ந்த விடயங்களில் இஸ்லாம் ஆண்களை முன்னுரிமைப் படுத்தி இருக்கிறது.

இஸ்லாமிய சட்டங்களை நோக்குகின்ற போது நீதி செலுத்துதல்/ நீதிபதிகளாக இருத்தல் என்பது அரசாட்சியின் (கிலாபத்) ஒரு பாகமாகவே பார்க்கப்படுகின்றது. நேர்மையான ஆட்சியினனை வழங்குவது பற்றியும் நீதம் செலுத்துவது பற்றியும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்ற அல்குர்ஆன் வசனங்களும் ஹதீஸ் வழிகாட்டல்களும் அதிகம் உள்ளன. எனவே காதியாக செயற்படுதல் என்பது ஆட்சியின் ஒரு பாகம் என்ற புரிதல் முக்கியமானது. 

பெண்களிடம் ஆட்சி அதிகாரம் ஒப்படைக்கப்படுவதை இஸ்லாம் வெளிப்படையாகத் தடை செய்துள்ளது.

பெண்களுக்கு ஆட்சி அதிகாரத்தை (தலைமைத்துவத்தை) வழங்குபவர்கள் வெற்றிபெற மாட்டார்கள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (புஹாரி)

இந்த ஹதீஸ் வழிகாட்டலின் அடிப்படையில் பல மார்க்கக் கிரந்தங்களில் காதியாக இருத்தல் என்பது பெண்களுக்குரிய பணி அல்ல என்பது தெளிவாக விவரிக்கப் பட்டுள்ளது.  

இது இவ்வாறிருக்க, பெண்களைக் காதிகளாக நியமிக்கக் கோருபவர்கள் சுட்டிக்காட்டுவது மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளில் முஸ்லிம் பெண்கள் காதிகளாக நியமிக்கப்பட வழங்கப்பட்டுள்ள அனுமதியாகும். அந்த நாடுகள் போல ஏன் எமது தனியார் சட்டத்தில் இதை அனுமதிக்க முடியாது என்பதே அவர்களது வாதம். அவர்கள் மேற்கோள் காட்டும் இந்த நாடுகள் இஸ்லாமிய அரசுகள் அல்ல என்பதனை நாம் அறிவோம். தவிரவும் அங்கே அமுல் படுத்தப்படுகின்ற சட்டங்கள் அனைத்தும் 100% இஸ்லாமிய சட்டங்கள் இல்லை என்பதுவும் வெளிப்படை. உதாரணமாக மேலே சொல்லப்பட்ட நாடுகளில் வங்கி முறைமையானது வட்டியை அடிப்படையாகக் கொண்டே இயங்குகிறது.  அதனை மேற்கோள் காட்டி வட்டியானது மார்க்க விதிமுறைக்கு அமைவானது என வாதிட முடியுமா? முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகள் அனுமதித்துள்ள அனைத்துமே மார்க்க வழிகாட்டல்களுமல்ல. அந்த நாடுகள்தான் இஸ்லாமிய மார்க்கச் சட்டத்தின் கருவூலங்களுமல்ல. இஸ்லாமிய வழிகாட்டல்களைத் தேடவேண்டிய இடம் அதன் சட்ட மூலாதாரங்களே அன்றி இதர நாடுகளின் சட்டப் புத்தகங்கள் அல்ல.

மேலும் இஸ்லாமிய வரலாற்றில் மார்க்க அறிவில் பெண்கள் தலைசிறந்தவர்களாக விளங்கிய காலங்களாக நபிகளார் வாழ்ந்த காலம், கலீபாக்களின் காலம், தாபிஈன்களின் காலம், தபஉ தாபிஈன்களின் காலங்களைக் குறிப்பிடலாம். இந்தக் காலங்களிலே முஸ்லிம் பெண்கள் பல துறைகளில் சிறந்து விளங்கிய வரலாறு உள்ளது. மார்க்கச் சட்டங்களை இமாம்களுக்கு கற்றுத்தருபவர்களாகப் பெண்கள் இருந்திருக்கிறார்கள். ஆனாலும் பெண்கள் காதிகளாக நியமிக்கப்பட்டதற்கான சான்றுகள் காணப்படவில்லை. எனவே இஸ்லாமிய மார்க்க விதிமுறைக்கு அமைவாக உள்ள தனியார் சட்டத்தில் பெண்களைக் காதிகளாக நியமிக்கக் கோருவது ஏற்புடையது அல்ல.


ஆனாலும் தற்போது முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்திற்கு முன் வைக்கப்பட்டுள்ள திருத்தத்தில் பெண்களைக் காதிகளாக நியமிக்க வேண்டும் என்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இப்பரிந்துரையானது எந்த மார்க்க விதிமுறையின் அடிப்படையில் பெறப்பட்டது என்ற தெளிவு அதில் தரப்படவில்லை. குறித்த விடையம் தொடர்பில் முன்னாள் நீதி அமைச்சர் மிலிந்த மொரகொட அவர்களினால் நியமிக்கப்பட்ட குழுவில் அங்கம்வகித்த மார்க்க அறிஞர்கள் இதற்கு எதிரான நிலைப்பாட்டினைக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டமானது இஸ்லாமிய மார்க்க விதிமுறைகளைப் பின்பற்றி உருவாக்கப்பட்டுள்ள ஒரு தனியார் சட்டமாகும். எனவே அவை தொடர்பான தீர்மானங்கள் அந்த மார்க்கத்தினுடைய விதிமுறைகளுக்கு அமைவாக இருக்கின்றனவா என்பதை மார்க்க அறிஞர்கள் உத்தரவாதப்படுத்த வேண்டியது அவசியம். 

மேலும் காதியாக நியமிக்கப்படுகின்ற ஒருவர் திருமணம் ஒன்றின் போது மணமகளுக்கு 'வொலி'யினுடைய (பாதுகாவலர்) அந்தஸ்தில் ஒருவர் இல்லாத போது 'வொலி'யாகவும் செயற்பட வேண்டி இருக்கின்றது. இஸ்லாமிய விதிமுறைகளுக்கு அமைவாக ஒரு பெண்ணிற்கு இன்னொரு பெண் 'வொலி 'யாக இருக்க முடியாது. இந்த அடிப்படையில் பார்க்கின்ற பொழுது பெண்கள் காதிகளாக நியமிக்கப்படுதல் என்பது சாத்தியமற்ற ஒன்றாகின்றது. எனவேதான் பெண் காதிகள் தொடர்பான திருத்தத்திற்கு மார்க்க அறிஞர்களின் சம்மதம் அல்லது ஆலோசனை பெறப்படவில்லை என்பது தெளிவாகின்றது. 

மேற்சொன்ன அடிப்படைகளை வைத்துப் பார்க்கின்ற பொழுது இஸ்லாமிய மார்க்கச் சட்டத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள, இஸ்லாத்தை மார்க்கமாக ஏற்று வாழ்கின்ற மக்களை மட்டுமே ஆள்கின்ற தனியார் சட்டமாகிய முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் பெண்களை காதிகளாக நியமிக்கக் கோருவது அடிப்படையற்றது, ஏற்றுக்கொள்ள முடியாதது.



 


Post a Comment

Previous Post Next Post