டிண்டர் செயலியில் பழக்கம்.. பாரில் சந்திப்பு- இலங்கை வீரர் தனுஷ்க குணதிலக்க மீதான பாலியல் புகாரில் வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்

டிண்டர் செயலியில் பழக்கம்.. பாரில் சந்திப்பு- இலங்கை வீரர் தனுஷ்க குணதிலக்க மீதான பாலியல் புகாரில் வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க தொடர்ச்சியாக பாலியல் புகார்களுக்கு உள்ளாகி வரும் நிலையில், இலங்கை கிரிக்கெட் வரியத்தின் நடத்தையும் கேள்விக்குறியாகியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இருந்து அரையிறுதிக்குக் கூட முன்னேறாமல் இலங்கை அணி வெளியேறியுள்ளது. ஆனால், தற்போது அந்த அணி தொடர்ந்து செய்திகளில் இடம்பிடித்து வருவது இந்த தோல்விக்காக அல்ல, அந்த அணியின் ஆல் ரவுண்டர் தனுஷ்க குணதிலக்க ஏற்படுத்தியுள்ள தலைகுணிவுக்காக. பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதாக அவர் ஆஸ்திரேலிய போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை பொதுமக்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மட்டுமல்லாது அரசியல் தலைவர்கள் கூட இந்த விவகாரம் குறித்து கடுமையாக விவாதித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் இலங்கை கிரிக்கெட் வாரியத்தையும் (SLC) அவர்கள் குறை கூறி வருகின்றனர்.

இலங்கையில் வெளிவரும் முன்னணி ஆங்கில ஏடான ‘தி டெய்லி மிரர்’ நாளிதழில் வெளியான தகவல்படி, தனுஷ்க மீது ஏற்கனவே பல புகார்கள் உள்ளபோதிலும் அவர் தொடர்ந்து அணிக்காக தேர்வு செய்யப்பட்டு வந்துள்ளார்.

ஆஸ்திரேலிய ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்ட ஆஸ்திரேலிய பாலியல் குற்றப்பிரிவு தளபதி, துணை கண்காணிப்பாளர் ஜேன் டோஹெர்டி அளித்த அறிக்கையின்படி, தனுஷ்க டிண்டர் டேட்டிங் செயலி மூலம் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் பழகி வந்துள்ளார். சிட்னியில் உள்ள ஒபேரா பாரில் கடந்த புதன் கிழமையன்று முதன்முதலில் இருவரும் சந்தித்து பேசியுள்ளனர். பின்னர் ரோஸ்பே பகுதியில் உள்ள அப்பெண்ணின் வீட்டுக்கு செல்ல இருவரும் முடிவு செய்து சென்றுள்ளனர். உடலுறவுக்கு அப்பெண்ணும் தயாராகவே இருந்தபோதிலும் ஆணுறை அணிந்து உடலுறவு கொள்ளவேண்டும் என்று தனுஷ்க குணதிலக்கவிடம் அவர் கூறியுள்ளார். இதற்கு தனுஷ்க மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர்களிடையே விவாதம் எழுந்தபோது, தனுஷ்க அப்பெண்ணை தாக்கியதோடு கட்டாயப்படுத்தி பாலியல் உறவில் ஈடுபட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் இருந்து இலங்கை அணி தாயகம் திரும்ப தயாராகிக்கொடிருந்த நிலையில், இந்த பாலியல் புகார் தொடர்பாக சனிக்கிழமையன்று தனுஷ்கவை ஆஸ்திரேலிய போலீசார் கைது செய்தனர். பின்னர் ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு ஜாமீனும் மறுக்கப்பட்டுள்ளது.

தனுஷ்க இதுபோன்ற ஒழுக்கமின்மை புகாரில் சிக்குவது இது  முதன்முறையல்ல. டெயில் மிரார் நாளிதழுக்கு இலங்கை கிரிக்கெட் வாரியத்தைச் சேர்ந்த சிலர் அளித்த தகவல்படி, கடந்த இரண்டு ஆண்டுகளில் பெண்களிடம் தவறாக நடந்துகொண்டதாக 3 புகார்களிலும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது இலங்கை அணியைச் சேர்ந்த 2 வீரர்களுடன் இணைந்து கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக ஒரு புகாரிலும் தனுஷ்க சிக்கியுள்ளார்.

2 பாலியல் புகார்களை பொறுத்தவரை, மிரிஸ்ஸாவில் உள்ள இரவு விடுதிக்கு சென்றபோது அங்கு பெண் ஒருவரிடம் தனுஷ்க அத்துமீற முயன்றதாகவும் அப்பெண் அவரை கன்னத்தில் அறைந்ததாகவும் கூறப்படுகிறது.

இதேபோல், 2018 ஆம் ஆண்டில், கொள்ளுப்பிட்டியாவில் உள்ள அவரது ஹோட்டல் அறையில் நோர்வே பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக 6 போட்டிகளில் பங்கேற்க தனுஷ்கவுக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் தடை விதித்தது.

தனுஷ்காவின் கூட்டாளியான சந்தீப் ஜூட் செல்லையா அணி வீரர்களுக்கான ஹோட்டல்  அறையில் இரண்டு நார்வே பெண்களில் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து, தனுஷ்காவை போலீசார் விசாரித்தனர்.

தனுஷ்கா குற்றம் சாட்டப்பட்டவர் அல்ல என்று காவல்துறை கூறியது, ஆனால் கிரிக்கெட் வாரிய விசாரணையில் அவர் அணியின் ஒழுக்கத்தை மீறியதற்காகவும், ஒப்பந்தத்தை மீறியதற்காகவும் குற்றம் சாட்டப்பட்டார்.

போட்டியின்போது வீரர்கள் நள்ளிரவில் வீரர்கள் தங்கள் அறைகளில் இருக்க வேண்டும் மற்றும் விருந்தினர்களுக்கு அனுமதி கிடையாது என்ற இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் கட்டுப்பாடுகளை அவர் மீறியிருந்தார்.  கடந்த 2017ம் ஆண்டு இரவு பார்ட்டிக்கு சென்றதால் பயிற்சியை அவர் தவறவிட்டார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளான நிலையில், அடுத்த சில மாதங்களிலேயே மேற்கூறிய குற்றச்சாட்டிலும் அவர் சிக்கினார்.

2021ம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது, கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக நிரோஷன் டிக்வெல்லா மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோருடன் சேர்ந்து தனுஷ்கவும் ஓராண்டு தடையை எதிர்கொண்டார்.

இத்தகைய சர்ச்சையான பின்புலத்தை அவர் கொண்டிருந்தாலும், எப்படி இலங்கை கிரிக்கெட் வாரியம் அவரை தொடர்ந்து அணிக்கு தேர்வு செய்தது என்ற கேள்வி தற்போது தீவிரமாக எழுந்துள்ளது. பல குற்றச்சாட்டுகள் உள்ள ஒரு வீரர் வாழ்நாள் தடையை சந்தித்திருக்க வேண்டும், ஆனால் தனுஷ்கா ஏன் தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டு சுற்றுப்பயணங்களுக்கு அனுப்பப்பட்டார் என்ற கேள்வி இப்போது எழுகிறது என்று விளையாட்டு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது ஆஸ்திரேலியாவில் தனுஷ்க பாலியல் வல்லுறவில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டு பரவத் தொடங்கியதையடுத்து, இது தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ளதாகவும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடும் தண்டனை விதிக்கப்படும் என்றும் இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும், தனுஷ்க குணதிலகாவை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அனைத்து போட்டிகளிலும் விளையாட தடை விதித்துள்ளது. இனி அணித் தேர்வில் தனஷ்கவின் பெயர் பரிசீலிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
news18



 


Post a Comment

Previous Post Next Post