Ticker

6/recent/ticker-posts

எந்த பட்டன் அழுத்தினாலும் பாஜகவுக்கு ஓட்டு... வாக்கு இயந்திரம் குறித்து வீடியோ பரப்பிய நபர் கைது..!

மேகாலயா மாநிலத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் இம்மாதம் இறுதியில் நடைபெறவுள்ளது. அங்குள்ள 60 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பிப்ரவரி 27ஆம் தேதி அன்று தேர்தல் நடைபெறுகிறது. மார்ச் 2இல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. தேர்தலில் ஆளும் கட்சியான தேசிய மக்கள் கட்சியும், தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜகவும் தனித்தே களமிறங்குகின்றன.

அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வரும் நிலையில், அம்மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நபர் வாக்கு இயந்திரம் குறித்து போலி செய்தி பரப்பிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். போலாங் ஆர் சங்மா என்ற நபர் மின்னனு வாக்கு இயந்திரமான EVM இயந்திரத்தில் எந்த பட்டன் அழுத்தினாலும் அது பாஜகவுக்கு வாக்கு செல்வது போல அமைக்கப்பட்டுள்ளதாக வீடியோ கிளிப் ஒன்றை கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி சமூக வலைத்தளங்களில் பரப்பினார்.

இந்த வீடியோ வைரலான நிலையில், அவருக்கு எதிராக ரோங்ஜெங் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் அலுவலர்கள் காவல்துறையில் புகார் அளிக்கவே அவர் மீது இபிகோ 171ஜி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார். தேர்தல் குறித்து அவதூறு பரப்பிய குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி என்பது போலி செய்தி எனவும், எனவே இந்த வீடியோ போலி செய்தியை பரப்புகிறது என்றும் தேர்தல் ஆணையம் விளக்கம் தந்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் முற்றிலும் பாதுகாப்பானது அதில் யாரும் மோசடி செய்ய முடியாது எனவும் தலைமை தேர்தல் அலுவலர் விளக்கமளித்துள்ளார்.

EVM இயந்திரம் குறித்து சில எதிர்க்கட்சிகள் தொடர் சந்தேகங்களை எழுப்பி வந்த நிலையில், இதற்கு எந்த ஆதாரமும் இல்லை என தேர்தல் ஆணையமும் தொடர்ச்சியாக விளக்கமளித்து வருகின்றது. அப்படி மோசடி இருந்தால் தங்கள் முன்னணிலையில் இதை நிரூபித்து காட்டலாம் எனவும் தேர்தல் ஆணையம் முன்னர் அழைப்பி விடுத்திருந்தது.

news18



 


Post a Comment

0 Comments