
உலகம் ஒரு விளைச்சல் நிலம். இங்கு அறுவடையை எதிர்பார்க்கக் கூடாது.
இது சோதனைக் களம். இங்கு கூலியை எதிர்பார்க்கக் கூடாது.
இங்கு இழப்புகள் மூலம் அடியார்களை அல்லாஹ் சோதிப்பான். அந்த சோதனை எப்படி வேண்டுமென்றாலும் இருக்கலாம். பல வடிவத்தில் வரும்.
நேசத்திற்குரியவர்களை இழப்பதும் சோதனைதான்.
செல்வத்தை இழப்பதும் சோதனைதான்.
கெட்ட அண்டை வீட்டுக்காரர் ஒரு சோதனை.
துரோகம் செய்யும் உறவு ஒரு சோதனை.
ஆபத்தில் கைவிட்ட தோழன் ஒரு சோதனை.
அநீதி இழைக்கும் ஆட்சியாளர் ஒரு சோதனை.
சோதனைகளின்போது யார் பொறுமையாக இருக்கிறாரோ அவர் வெற்றிபெறுகிறார்.
யார் ஆத்திரப்படுகிறாரோ அவர் தோல்வியடைகிறார்.
இறைத்தூதர்கள் உட்பட சோதனைகளில் இருந்து யாரும் தப்பவில்லை.
உலகையே ஆண்ட நால்வரில் ஒருவர்தான் துல்கர்னைன். தமக்கு மரணம் நெருங்குவதை உணர்ந்த அவர், தமது தாய்க்கு ஓர் ஆட்டை அனுப்பி வைத்து கூடவே ஒரு செய்தியும் சொன்னார்.
செய்தி இதுதான்: "தான் மரணித்தால் இந்த ஆட்டை அறுத்து சமைத்து சோதனைக்கு உள்ளாகாத வீட்டைத் தேடிக் கண்டுபிடித்துக் கொடுக்க வேண்டும்''.
மகனுடைய உபதேசத்தை நிறைவேற்றிய தாய், சோதனைக்கு உள்ளாகாத வீட்டைத் தேடத் தொடங்கினார். எவ்வளவோ முயன்றும் அவரால் அப்படி ஒரு வீட்டைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இறுதியில் அவர் இப்படிச் சொன்னார்: "மகனே! அல்லாஹ் உனக்கு அருள் புரியட்டும்! உயிருடன் இருந்தபோதும் மரணித்த பின்னரும் என்னோடு நல்ல முறையில் நீ நடந்துகொண்டாய்''.
யார் வீட்டில்தான் சோதனை இல்லை? ஆகவேதான் அல்லாஹ் கூறுகிறான்:
"பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் நீங்கள் உதவி தேடுங்கள்'' (திருக்குர்ஆன் 2:45)
nambikkai

கட்டுரைகள் | Ai SONGS |
0 Comments