
மனதை வலிமையுடன் வைத்துக்கொள்வதற்கு முதற்படியாக மனத்தில் மாசு படிய விடக்கூடாது. மனதில் மாசுபடிதல் என்றால் அச்ச உணர்வும், குறுகுறுக்கும் தன்மையும் மனதைத் தொடாத ஒரு நிலைதான்.
நமது மனத்திலே அச்ச உணர்வு தோன்றுவதற்கு முதற்காரணம் குற்ற மனப்பான்மையே! யாராவது ஒரு மனிதனைக் கண்டு நாம் அஞ்சுகிறோம் என்றால் ஏதோ ஒருவிதத்தில் அந்த மனிதரிடம் நாம் நியாயமாக நடந்து கொள்ளவில்லை என்றுதான் அர்த்தம்.
ஒரு மனிதரைப் பற்றி பிறரிடம் புறங்கூறியிருந்தால் அந்த மனிதரைப் பார்க்கும்போது நமது மனசாட்சி உறுத்திக் கொண்டே இருக்கும். மனமறிந்து ஒருவருக்கு நாம் தீங்கு செய்து அது யார் கண்களிலும் படமாலிருந்தாலும் தீங்கு செய்தவர் நாம்தான் என்று யாரும் கண்டு பிடிக்காத நிலையிலும் மனம் அமைதியை இழந்துவிடும்.
நேர்மை தவறி நடப்பவர்கள் அனைவருமே குறுகுறுத்த மனப்போக்கையே பெற்றிருப்பார்கள். இவை போன்று எவ்வளவோ சுட்டிக்காட்டலாம்.
இவையெல்லாம் மனம் மாசடைந்த நிலையின் அடிப்படை.
இவர்கள் மன உறுதியைப்பெற வேண்டுமானால் தங்கள் மனப்போக்கைப் புரட்சிகரமாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
மனதறிந்து பிறர் நோகும் வண்ணம் நடந்து கொள்ளக்கூடாது.
முதுகுக்குப் பின் பிறரை விமர்சனம் செய்யும் கோழைத்தனத்தை விட்டு விடவேண்டும்!
நீங்கள் குற்ற மனப்பான்மையும், அச்ச மனப்பான்மையும் பெறாமல் மாசற்ற மனதைப் பெறவேண்டுமானால் உங்கள் நடவடிக்கைகள் எதிலுமே ஒளிவுமறைவு இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
மூடிமறைத்து எந்த செயலிலும் ஈடுபடாதீர்கள். மறைவாக செய்யப்படும் எதுவுமே மனசாட்சிக்கு விரோதமாகத்தான் இருக்கும். நல்ல எண்ணங்களையே நினையுங்கள். மோசமான சிந்தனைகள் உங்கள் மனத்தை ஆக்கிரமிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
எந்த நிலையிலும் அனாவசியமான அதிர்ச்சிக்கு இடமளிக்காதீர்கள். நமது வாழ்க்கையைப்பற்றி நாம் எந்தவிதமான கனவுகளைக் கட்டுகிறோமோ அவற்றில் எண்பது சதவிகிதத்திற்குக் குறையாமல் நிறைவேறும் என்பது ஓர் அதிசய உண்மை. கனவுகள் மனக் கோட்டைகள் என்றால் அதிலே நமக்கு நிச்சயமான பிடிப்பும் நம்பிக்கையும் ஆர்வமும் இருக்கவேண்டும் என்பது அவசியம். எண்ணங்களுக்கு தனி சக்தி உண்டு திட்டமிட்ட ஒரு ஒழுங்குமுறையுடன் கூடிய தொடர் எண்ணங்கள் பின்னால் ஒரு திட்பமிட்ட காலத்தில் நிகழ்ச்சிகளாக உருவெடுத்து மனிதவாழ்க்கையில் நிலைக்கின்றன.
எனவே வெற்றிக்கான சிந்தனை விதைகளை நாளும் விதையுங்கள். நிச்சயம் சாதனை படைக்கலாம். நம்மிடம் உள்ள குறைகளைப் பெரிதுபடுத்திக் கொள்ளக்கூடாது.
நம்பிடம் அமைந்திருக்கும் சிறப்பாற்றலை உணர்ந்து அதை முன்னிறுத்தி நமது ஆற்றலை, தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும். இந்த ஆற்றலைப் பயன்படுத்தி உற்சாகத்துடன் உழைக்க முற்பட்டோமானால் மனம் எந்த நிலையிலும் சலனப்படாமல் அமைதியுடன் திகழும்.
kalkionline

கட்டுரைகள் | Ai SONGS |
0 Comments