
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து 370 நீக்கம், அயோத்தி வழக்கு உள்ளிட்ட முக்கிய விவகாரத்தில் செயலாற்றிய ஞானேஷ் குமார் ஐ.ஏ.எஸ். புதிய இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பதவிக் காலம் வரும் பிப்ரவரி 18-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையரைத் தேர்வு செய்வதற்கான கூட்டம் வரும் பிப்ரவரி 17-ம் தேதி நடைபெற வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
புதிய தலைமை ஆணையரைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் மேக்வால் மற்றும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இடம் பெறுவர். இதுவரை 480 பெயர்கள் அடுத்த தலைமைத் தேர்தல் ஆணையர் தேர்வில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த 480 பெயர்களில் இருந்து ஐந்து நபர்களை தேடுதல் குழு தேர்வு செய்து, தேர்வு குழுவுக்கு அனுப்பும். அதில் இருந்து ஒருவரை, பிரதமர் நரேந்திர மோடி, சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் மேக்வால் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி ஆகியோர் அடங்கிய மூவர் குழு தேர்ந்தெடுக்கும்.
அப்படி அந்த ஐந்து பெயர் பட்டியலில், மூத்த ஐ.ஏ.எஸ்.-ஆன ஞானேஷ் குமாரின் பெயர் முன்னிலையில் இருக்கிறது. அதிகப்பட்சமாக இவர் அடுத்த தலைமைத் தேர்தல் ஆணையராக வரலாம் என்றும் பேசப்படுகிறது.
1988 பேட்ச் ஐ.ஏ.எஸ்.-ஆன ஞானேஷ் குமார், கேரளாவைச் சேர்ந்தவர். இவர் முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் பணிபுரிந்தவர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கீழ் வரும் ஒத்துழைப்பு அமைச்சகத்தின் செயலாளராகப் பணியாற்றிக் கடந்த 2024-ம் ஆண்டு, ஜனவரி மாதம் 31-ம் தேதி ஓய்வு பெற்றார். இதற்கு முன்னதாக இவர், நாடாளுமன்ற விவகாரத்துறையிலும் செயலாளராக பணியாற்றியுள்ளார்.
ஆகஸ்ட் 2019 இல் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டபோது, அமித் ஷா தலைமையிலான உள்துறை அமைச்சகத்தில் காஷ்மீர் பிரிவின் இணைச் செயலாளராக குமார் நியமிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு, கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்ட ஞானேஷ் குமார், ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை உருவாக்கம் உட்பட, அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு தொடர்பான அனைத்து விஷயங்களையும் கவனிக்க உள்துறை அமைச்சகத்தில் ஒரு பிரத்யேக பிரிவுக்கு தலைமை தாங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments