Ticker

6/recent/ticker-posts

“தமிழ்நாட்டின் மொழியைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் பாஜகவும் அதிமுகவும் உறுதி பூண்டுள்ளன” – அமித்ஷா அறிவிப்பு


மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இரண்டு நாள் பயணமாக சென்னை வந்தார். கிண்டி நட்சத்திர ஓட்டலில் இருந்த அவர், பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து பாஜக மாநிலத் தலைவருக்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. அதில், நயினார் நாகேந்திரன் மட்டுமே வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ள நிலையில் அவர் போட்டியின்றி தேர்வாக இருக்கிறார்.

பாஜக வேட்புமனு நிறைவடைந்ததும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கிண்டியில் நட்சத்திர விடுதியில் இருக்கும் அமித் ஷாவை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதனைத் தொடர்ந்து அமித் ஷா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அந்தச் செய்தியாளர் சந்திப்பில் அமித் ஷா, “பாஜக தலைவர்களும், அதிமுக தலைவர்களும் ஒன்றிணைந்து இந்தக் கூட்டணியை உருவாக்கியிருக்கிறார்கள். அடுத்து வரப்போகிற தேர்தலை என்.டி.ஏ. கூட்டணியின் இதர கட்சிகளுடன் இணைந்து சந்திக்க இருக்கிறோம் என்பதை உங்களுக்கு அறிவிக்கிறேன்.

இந்தத் தேர்தல் தேசிய அளவில் பிரதமர் மோடியின் தலைமையிலும், தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் நடைபெற இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

இந்தச் செய்தியாளர் சந்திப்பு முடிந்து எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தில் கலந்துகொள்ள அவரது வீட்டிற்குச் சென்றார். இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாட்டின் மொழி, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும், அதை மேம்படுத்தவும் பாஜகவும் அதிமுகவும் உறுதி பூண்டுள்ளன.
திமுகவின் பரவலான ஊழலால் தமிழக மக்கள் சலிப்படைந்து, ஊழல் நிறைந்த இந்த திமுக அரசை அகற்றுவதில் உறுதியாக உள்ளனர். பாஜகவும் அதிமுகவும் கூட்டாக கிராமம் கிராமமாகச் சென்று திமுகவின் தவறான இந்த ஆட்சிக்கு எதிராக மக்களைத் தட்டி எழுப்பி, மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் அரசை அமைக்கும்” எனப் பதிவிட்டுள்ளார்.

news18

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments